ஊஞ்சலில் என்னை உட்கார வைத்து
‘உந்து கால்’ என்று ஊக்கப்படுத்தி
மேலே மேலே நான் பறக்கும்போது
கெக்கலி கொட்டி
புல்லாங்குழலெனத் தேனிசை பாடும்
அந்தப் பறவை.
அதற்கு நான் உவகை என்று பெயரிட்டேன்
கானக நடுவில்
மூங்கில் வனத்தில்
மொட்டை மரங்கள் பேய்க் கரம் நீட்ட
காட்டு நெருப்பில்
சுட்ட கரியெனப் புல்லும் கருகத்
தன்னந்தனியாய் என் கண்கள் கலங்க
மூங்கிலின் உச்சியில்
தூங்கும் சருகெனக்
குந்தி நொந்திருக்கும் அந்தப் பறவை.
அதற்கு நான் துக்கம் என்று பெயரிட்டேன்
தொலைவுகள் மறைத்து
நீலத் தகடாய் நீளும் கடலில்
திமிங்கிலம் போல நீந்தும் கப்பலில்
உச்சித் தளத்தில் சுக மதுவருந்திச்
சாய்வு நாற்காலியில் உறங்கும் தருணம்
சாட்டை சுழற்றிய சூறைக் காற்றும்
அடரும் முகிலில் மின்னல் வீச்சும்
சின்னக் குழந்தை எறிந்த பந்து போல்
திரை கடல் மீது கப்பலைத் தகர்க்க
அய்யோ என நான் அலைகளில் புதைய
எங்கிருந்தோ ஒரு கரம்
என்னை ஓர் படகினில் ஏற்றிக் கொள்ளப்
படகைச் சுற்றிப்
படபடக்கும் ஒரு பறவை.
அதற்கு நான் நம்பிக்கை என்று பெயர் வைத்தேன்.
***
கொட்டிய தானியங்களைக்
கொத்தி முடித்து
இன்னும் என்று தலையைத் தூக்கும்
என் இதயம் என்கிற
நீலப் பறவை!
- கவிஞர் சிற்பி