1988 ஆம் ஆண்டு, நான் கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் இறுதி ஆண்டு (ஐந்தாம் ஆண்டு) படித்து முடிக்கும் நிலையில் என்னுடைய முதல் தனி நபர் ஓவியக் காட்சியை தஞ்சாவூர் பெசண்ட் அரங்கத்தில் நடத்தினேன். அப்போது அங்கு அரங்கு காப்பாளராக இருந்தவர் திரு.தாஸ்.
அதன்பிறகு 1993 ஆம் ஆண்டு என்னுடைய ‘எரியும் வண்ணங்கள்’, 2000 ஆவது ஆண்டு ‘உறங்கா நிறங்கள்’, 2004 ஆம் ஆண்டு ‘புகை மூட்டம்’ ஆகிய ஓவியக் காட்சிகள் பெசண்ட் அரங்கில் நடைபெற்றிருக்கின்றன.
2006 ஆண்டு ‘மேற்கு வானம்’, ‘சிதைந்த கூடு’, ‘அகமும் முகமும்: நேர்காணல்கள்’, ‘நெஞ்சில் பதிந்த நிறங்கள்: படைப்புகள் குறித்தக் கட்டுரைகள்’ ஆகிய நான்கு நூல்கள், 2017 ஆம் ஆண்டு என்னுடைய தன் வரலாற்று நூல் ‘நானும் எனது நிறமும்’ ஆகிய என்னுடைய நூல்கள் வெளியீட்டு நிகழ்வுகள் அந்த பெசண்ட் அரங்கில்தான் நடைபெற்றன.
2023 ஆம் ஆண்டு திசம்பர் 16 அன்று ‘ஓவியர் புகழேந்தி : கலை மானுடப் பணியில் 40 ஆண்டுகள்’ நிகழ்வை பெசண்ட் அரங்கில் தான் நடத்தினோம்.
அந்நிகழ்வில் என் 40 ஆண்டு கால பயணத்தில் பல்வேறு நிலைகளில் பங்களிப்பை நல்கிய பலரையும் மேடையேற்றி மதிப்பு செய்தேன்.
அந்த வகையில் திரு. தாஸ் அவர்களையும் மேடைக்கு அழைத்து பொன்னாடை அணிவித்து என் நூல்களை வழங்கி மதிப்பு செய்தேன். அவர் அதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
நிகழ்வு நிறைவுபெற்றதும், என்னருகில் வந்த தாஸ் அவர்கள் “இந்த அரங்கில் எத்தனையோ நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன, அதற்கு எவ்வளவோ துணை நின்றிருக்கிறேன்.
ஆனால், முதலில் நீங்கள்தான் என்னை மேடையேற்றி மதிப்பளித்து இருக்கிறீகள். ரொம்ப நன்றி” என்று என் கரங்களைப் பற்றி கண்ணீரோடு நெகிழ்ந்து கூறினார்.
கடந்த நாற்பது ஆண்டுகளில் பெசண்ட் அரங்கத்தில் என்னுடைய நிகழ்வுகள் அல்லாமல் கலை இலக்கிய நிகழ்வுகள், சமூக அரசியல் நிகழ்வுகள், நூல் வெளியீடுகள் என எண்ணற்ற நிகழ்வுகளில் உரையாளனாகவும் பங்கேற்பாளனாகவும் பார்வையாளனாகவும் கலந்து கொண்டிருக்கிறேன்.
அப்பொழுதெல்லாம் திரு. தாஸ் அவர்களையும் பார்த்து நலம் விசாரித்திருக்கிறேன். குறைந்த பட்சம் புன்னகைத்திருக்கிறேன். மீண்டும் தஞ்சாவூர் பெசண்ட் அரங்கம் செல்வேன். ஆனால் தாஸ்… இருக்கமாட்டார். நினைவுகள் இருக்கும். அந்த நினைவுகளோடு என் ஆழ்ந்த இரங்கல்.