பேரறிஞர் அண்ணாவின் கடிதங்கள் தொகுப்பிலிருந்து…
“தம்பி, பெருநிதியும் குறைமதியும் கொண்ட அந்தச் சீமானைக் காணச் சென்றான், அறிவுச் செல்வம் நிரம்பப் பெற்றிருந்த வறுமை நிலையினன். செருக்கு மிக்கவனாகத் தன் நண்பன் இருப்பதைக் கண்டான்.
எனினும், தன்னிடம் மட்டும் ஓரளவு ‘மதிப்பு’ காட்டுவதறிந்தான்? ஆயின், இதுபோதும் என்றெண்ணி இருந்துவிடவில்லை. நண்பனுக்கு அறிவூட்ட விரும்பினான்.
கண்ணாடி பொருத்தப்பட்ட பலகணி அருகே நண்பனை அழைத்துச் சென்று, “என்ன தெரிகிறது?’ என்று கேட்டான்.
“ஏன்! எல்லாம்தான்! வெளியே உள்ள தோட்டம்; மலர்கள்; வீடுகள்; வண்டி வாகனங்கள்; நடமாடுவோர்; எல்லாம் தெரிகிறது. கண்ணாடி ஜன்னல்தானே, தெரிவதற்கு என்ன?” என்றான் செல்வவான்.
புன்னகை புரிந்தான் அறிவாளன்.
வேறோர் புறமிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியைக் காட்டி, “அதைப் பார்! என்ன தெரிகிறது அதிலே?” என்று கேட்டான்.
“பொல்லாத கேள்வி கேட்டுவிட்டாய், போ! அதில், நான் தெரிகிறேன்!” என்றான், சீமான்!
“நண்பா! இரண்டும், கண்ணாடிகள்! வெளியே உள்ளது எல்லாம் காண முடிகிறது, ஒன்றின் மூலம்! மற்றொன்றிலோ, உன்னைத் தவிர வேறொன்றும் தெரிவதில்லை.
ஏன்? இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
ஒன்றிலே ‘ரசம்’ பூசப்பட்டிருக்கிறது! ‘ரசம்’ வெள்ளியிலிருந்து தயாரிக்கப்படுகிறது!
பார்த்தாயா, ஒரு கண்ணாடியில் சிறிது வெள்ளி தடவியதும், வேறெதுவும் தெரியவில்லை; உன்னைத் தவிர!
அதுபோலத்தான், உன்னிடம் பணம் குவிந்துவிட்டதால், உன்னைத் தவிர, வேறு எதுவும், உனக்குத் தெரியாது போய்விடுகிறது; பணம், கண்களை மறைத்து விடுகிறது என்றான். வெட்கம், சீமானை, வேலாகக் குத்திற்று.
‘ரசம்’ பூசப்பட்ட கண்ணாடி, போலாகிவிடுகிறார்கள், பணம் பெற்று, பண்பு கெட்டுவிட்ட நிலை அடைந்தோர்!
பணம் மட்டுமல்ல; புகழ், பட்டம், பதவி, எதுவும்தான் பழைமையை மறந்துவிடச் செய்கிறது, புதிய நினைப்பு, முறுக்கு, ஏற்பட்டுவிடுகிறது! இயல்பே, மாறிவிடுகிறது ! “
நன்றி: அண்ணாவின் கடிதங்கள் என்ற இணையப் பக்கத்தில் இருந்து.