சிவாஜிக்காக காத்திருந்த எம்.ஜி.ஆரின் அம்மா!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 24-ம் ஆண்டு நினைவு நாள் இன்று (ஜூலை-21). தன் அபார நடிப்பால் தமிழ்த் திரையுலகுக்கே பெருமை சேர்த்த அவரைப் பற்றிய சில நினைவுகள்.

தமிழ்த் திரையுலகில் மாபெரும் சிகரங்களாக விளங்கியவர்கள் எம்ஜிஆரும், சிவாஜி கணேசனும். சினிமாவிலும், அரசியலிலும் இவர்கள் இருவரும் இரண்டு துருவங்களாக இருந்தபோதிலும், இருவருக்கும் இடையே ஆழமான நட்பு இருந்தது.

இதைப் பற்றி ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் சிவாஜி கணேசன், “மதுரை ஸ்ரீபால கான சபா சென்னையில் முகாமிட்டிருந்த சமயத்தில், நாங்கள் தங்கியிருந்த வீட்டிற்கு அருகில்தான் எம்.ஜி.ஆர்., வீடு இருந்தது.

அந்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆரின் அம்மா என்னையும் தனது மகனாக எண்ணிப் பழகியதை, என்னால் மறக்க முடியாது.

தினமும் காலையில் உடற்பயிற்சி செய்து, குளித்து, எனக்காகக் காத்திருப்பார் எம்.ஜி.ஆர்.

நான் சென்றதும், இருவரும் அருகருகே அமர்ந்த பின்தான், அவரது அம்மா எங்களுக்கு காலை சிற்றுண்டியைப் பரிமாறுவார்.

நான் செல்வதற்கு சிறிது தாமதமாகி, அதற்குள் அண்ணனுக்கு பசி எடுத்து விட்டால், ‘அம்மா… எனக்கு பசிக்கிறது…’ என்று சொல்வார்.

அதற்கு, ‘இரு… கணேசன் வரட்டும்; சேர்ந்து சாப்பிடலாம்…’ என்பார் சத்யா அம்மா” என்று குறிப்பிட்டுள்ளார். அந்த அளவுக்கும் இருவருக்குள்ளும் ஒரு பாசப்பிணைப்பு இருந்துள்ளது.

ரயிலில் வந்த அயிரை மீன் குழம்பு:

சிவாஜிக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று அயிரை மீன் குழம்பு. அதனாலேயே மதுரையைச் சேர்ந்த அவரது ரசிகர் ஒருவர் அவ்வப்போது காலையில் அயிரை மீன் குழம்பு செய்து வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் அவருக்காக கொண்டுவருவார்.

அவர் அப்படி கொண்டுவரும் தகவல் தெரிந்தால், அந்த மீன் குழம்பை சாப்பிடுவதற்காக ஆவலுடன் காத்திருப்பாராம் சிவாஜி கணேசன்.

வீட்டுக்கு வழி தெரியாது:

சிவாஜிக்கு நடிப்புத் தொழிலை தவிர வேறு எதுவும் தெரியாது. அவரது உலகமே நடிப்புத் தொழில்தான் என்று கூறுவார்கள். அதற்கு உதாரணமாக ஒரு சம்பவம்.

பொதுவாக வீட்டில் இருந்து கிளம்பி காரில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போகும்போது அன்றைய தனம் எடுக்கவேண்டிய காட்சிகளைப் பற்றியும், அதில் தான் எப்படி நடிக்க வேண்டும் என்பதைப் பற்றியும் யோசித்துக் கொண்டே செல்வார் சிவாஜி.

ஷூட்டிங் முடிந்து வீட்டுக்கு திரும்பும்போதும் அடுத்த நாள் படப்பிடிப்பை பற்றித்தான் யோசிப்பார். அதிகம் வெளியில் பார்க்கமாட்டார்.

டிரைவர்தான் அவரை வீட்டில் இருந்து ஷூட்டிங் ஸ்பாட்டுக்கும், ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வீட்டுக்கும் அழைத்துச் செல்வார்.

ஒரு நாள் சிவாஜி ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தபோது அவசர வேலையாக அவரது டிரைவர், வீட்டுக்கு செனறுள்ளார். அதனால் தயாரிப்பாளர்கள் அவருக்கு வேறு ஒரு டிரைவரை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.

அந்த டிரைவருக்கு சிவாஜி வீட்டுக்குப் போக வழி தெரியவில்லை. சிவாஜியிடம் அவரது வீடான அன்னை இல்லத்துக்குப் போக வழி கேட்டுள்ளார்.

அதற்கு சிவாஜி, “எனக்கும் வழி தெரியாதேப்பா… நீ முதல்ல தி.நகருக்கு போ. பிறகு சிவாஜி வீடு எங்க இருக்குன்னு விசாரிச்சுட்டே போ” என்று கூறியுள்ளார்.

அந்த அளவுக்கு தன் வீட்டுக்கு செல்லும் வழியைக்கூட ஞாபகம் வைத்துக்கொள்ளாமல் சினிமாவையே பெரிதும் நேசித்துள்ளார் சிவாஜி.

இயக்குநர் ஸ்ரீதர் போல் நடித்த சிவாஜி:

தில்லானா மோகனாம்பாள் படத்தில் நடித்தபோது மதுரை சேதுராமன், பொன்னுசாமி ஆகிய இரண்டு நாதஸ்வர கலைஞர்களை வீட்டுக்கு அழைத்து அவர்கள் எப்படி வாசிக்கிறார்கள், உறையில் இருந்து எப்படி நாதஸ்வரத்தை எடுக்கிறார்கள் என்று பார்த்து கற்றுக்கொண்டு அதன் பிறகுதான் படப்பிடிப்புக்கு சென்றிருக்கிறார்.

‘தெய்வமகன்’ படத்தில் வரும் 2-வது மகன் கதாபாத்திரத்துக்கு ஸ்ரீதரையே முன்னுதாரணமாகக் கொண்டு நடித்ததாக சொல்லி இருக்கிறார். தான் பார்க்கும் மக்களை அப்படியே நடிப்பில் பிரதிபலிப்பவர் சிவாஜி கணேசன்.

– பி.எம்.சுதிர்

Comments (0)
Add Comment