எம்.ஜி.ஆரிடம் சம்பளம் வாங்க மறுத்த எம்.எஸ்.வி.!

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் பிறந்தநாள் இன்று (ஜூன்-24) கொண்டாடப்படுகிறது.

எம்ஜிஆரை தன்னுடைய காட் ஃபாதராக கருதியவர் எம்.எஸ்.விஸ்வநாதன். தான் எந்த செயலைச் செய்வதாக இருந்தாலும் எம்ஜிஆரை ஒரு வார்த்தை கேட்டுவிடுவது அவரது வழக்கம். எம்ஜிஆரிடம் பேசிய பிறகு அவரது அறிவுரைப்படி அந்த விஷயத்தை செய்து முடிப்பார்.

புரட்சித் தலைவருக்கு எம்எஸ்வி முதலில் அறிமுகமானது ‘ஜெனோவா’ படத்தில்தான். இந்தப் படத்துக்கு எம்எஸ்வி இசையமைக்கப் போவதாக அதன் தயாரிப்பாளர் சொன்னபோது முதலில் எம்ஜிஆருக்கு பிடிக்கவில்லை.

இளம் இசையமைப்பாளரான எம்எஸ்வியைவிட அனுபவமிக்க இசையமைப்பாளர் யாரையாவது வைத்து இசையமைக்கச் சொன்னார். ஆனால் தயாரிப்பாளர் பிடிவாதமாக இருந்ததால் எம்ஜிஆர் அதற்கு ஒப்புக்கொண்டார்.

பின்னர் படத்தின் பாடல்களைக் கேட்டதும் எம்ஜிஆருக்கு எம்எஸ்வியை மிகவும் பிடித்துப் போனது. அதன் பிறகு இருவரும் நெருக்கமானார்கள்.

எம்.ஜி.ஆரைப் போலவே கண்ணதாசனும் எம்எஸ்விக்கு நெருக்கமானவர். ஆனால் எம்ஜிஆருக்கும் கண்ணதாசனுக்கும் இடையே அரசியல் ரீதியாக மோதல் இருந்து வந்தது.

அந்த காலகட்டத்திலும் எம்ஜிஆர் படங்களுக்கு வாலி அதிகமாக பாடல்களை எழுதினாலும், தன்னால் முடிந்தவரை கண்ணதாசனையும் எழுத வைத்திருக்கிறார் எம்எஸ்வி.

உதாரணமாக ‘உரிமைக்குரல்’ படத்தில் வரும், ‘விழியே கதையெழுது’ பாடலை கண்ணதாசனை வைத்து எழுத வைத்துள்ளார் எம்எஸ்வி. வாலி எழுதிய பாடல் என்று கூறி அந்த பாடலைக் காட்டியுள்ளார்.

பாடல் வரிகளைப் பார்த்த எம்ஜிஆருக்கு அதை கண்ணதாசன்தான் எழுதியிருப்பார் என்று தோன்றியிருக்கிறது.

எம்.எஸ்.வியிடம் அழுத்திக் கேட்டதும் அவர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். ஆனாலும் எம்எஸ்வியிடம் கோபிக்காத எம்ஜிஆர், அந்தப் பாடலை படத்தில் பயன்படுத்த ஒப்புக் கொண்டுள்ளார்.

பொன்மனச் செம்மலுக்கும் எம்எஸ்விக்கும் இடையே பிணக்கு ஏற்பட்ட சம்பவங்களும் உண்டு.

இதுபற்றி எம்எஸ்வியின் மகன் பிரகாஷ் கூறும்போது, “நாளை நமதே படத்துக்கு இசை அமைக்குமாறு அதன் இயக்குநர் சேதுமாதவன் கேட்டபோது, அதற்கு அவர் முதலில் மறுப்பு தெரிவித்தார்.

அதற்கு காரணம் கேட்டபோது, “இதன் இந்திப் பதிப்பான ‘யாதோங் கி பாரத்’ படத்தின் பாடல்கள் மிகவும் புகழ்பெற்றவை. அதனால் அதைப்போல் இந்தப் படத்தின் பாடல்களும் இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். இது எனக்கு கூடுதல் பிரஷராக இருக்கும்.

அத்துடன் சின்னவரின் (எம்ஜிஆர்) தலையீடும் அதிகமாக இருக்கும். அதனால் நான் இந்தப் படத்துக்கு இசையமைக்க மாட்டேன் என்று கூறி இருக்கிறார்.

பின்னர் எம்.ஜி.ஆர் அவரைச் சந்தித்து, இந்தப் படத்தின் இசையமைப்பில் தலையிட மாட்டேன் என்று வாக்குறுதி கொடுத்த பிறகுதான் இசை அமைத்தார்.

‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்துக்கு முதலில் குன்னக்குடி வைத்யநாதன்தான் இசை அமைப்பதாக இருந்தது. அதன் பிறகுதான் இந்தப் படத்துக்கு அப்பா இசையமைத்தார்.

ஒவ்வொரு பாடலை ட்யூன் செய்த பிறகும் எம்ஜிஆரைப் பார்ப்பார் எம்எஸ்வி. அவர் ட்யூன் நன்றாக இருந்தாலும் பாராட்ட மாட்டார். பாட்டு சுமாராக இருக்கிறது என்று மட்டும் சொல்வார்.

இது என் அப்பாவை வருத்தமடைய செய்தது. இதனால் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்துக்காக சம்பளம் வாங்க மறுத்தார்.

ஒரு நாள் அப்பாவை வலுக்கட்டாயமாக தனது ஸ்டுடியோவுக்கு வரவழைத்தார் எம்ஜிஆர். அங்கு படத்தின் விநியோகஸ்தர்கள் இருந்தனர்.

அப்பாவுக்கு பெரிய மாலை போட்ட எம்ஜிஆர், “இவங்க எல்லாரும் பாட்டு ரொம்ப பிரமாதமா இருக்குன்னு சொல்றாங்க” என்று சொல்லியிருக்கிறார்.

அதற்கு, எம்.எஸ்.வி, “இப்பகூட மத்தவங்க பாராட்டராங்கன்னுதான் சொல்றீங்க. ஆனா, நீங்க ஒரு தடவைக் கூட பாராட்டலியே” என்று வருத்தப்பட்டு இருக்கிறார்.

அதற்கு எம்ஜிஆர், “உன்னை உசுப்பேத்தத்தான் அப்படி சொன்னேன்” என்றார்.

இதற்கு பதிலளித்த எம்.எஸ்.வி, “நீங்கள் என்னைப் பாராட்டியிருந்தால் அதைவிட சிறப்பான பாடல்களைப் போட்டிருப்பேன்” என்று பதில் அளித்தார்.

எம்.ஜி.ஆரின் மறைவு எம்.எஸ்.வியை பெரிய அளவில் பாதித்தது. அவர் அதிலிருந்து மீண்டுவர பல நாட்கள் ஆயிற்று” என்றார்.

– பி.எம்.சுதிர்

Comments (0)
Add Comment