பெரும்பாலான பெண்கள் சத்துக் குறைபாடு காரணமாக உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர். அதில் இரத்த சோகை மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது.
இரும்புச் சத்து குறைபாடு ஏற்படும்போது உடம்பில் ஆக்ஸிஜன் கொண்டு செல்வது தடைபடுகிறது. அவ்வாறு நடக்கும்போது உடல் சோர்வாகவும், பலவீனமாகவும் உணர்கின்றனர்.
இரும்புச்சத்து குறைபாடு ஆண்களை விடவும் பெண்களை அதிகம் பாதிக்கிறது. அதற்கு மாதவிடாய், குழந்தைப் பேறு என பல காரணங்கள் இருக்கின்றன.
நமது உடலில் இருக்கும் இரும்புச்சத்து தான் நுரையீரலில் இருந்து உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஆக்ஸிஜனை ஹீமோகுளோபினை எடுத்துச் செல்லும்.
மேலும் தசைகளுக்கு ஆக்ஸிஜனை வழங்கும் புரதமான மயோகுளோபினுக்கும் போதுமான இரும்புச் சத்து அவசியமாகிறது.
ஹீமோகுளோபின் என்பது ஒரு புரதம், இரத்த சிவப்பணுக்களின் மிகவும் அவசியமான ஒரு அங்கமாக இருக்கிறது. உடல் முழுவதும் உள்ள உயிரணுக்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்வது ஹீமோகுளோபின் வேலை.
உடலில் தேவையான அளவு ஹீமோகுளோபின் இல்லை என்றால் நம் உடலின் திசுக்கள், தசைகள் போன்ற பகுதிகளுக்கு ஆக்ஸிஜன் சரிவர கிடைக்காது. ஆகவே இது ரத்த சோகை ஏற்பட காரணமாக அமைகிறது.
உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, உலகம் முழுவதும் சுமார் இரண்டு மில்லியன் மக்கள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறது.
இது பொதுவான ஊட்டச்சத்துக் குறைபாடு என்றாலும், உலக அளவில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 42% ஆகவும் கர்ப்பிணிப் பெண்கள் 40% ஆகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இவையெல்லாம் சரியாக சத்தான உணவுகள் அவசியம் தேவை என மருத்துவர்கள் கூறுகின்றனர். அவர்களின் பரிந்துரையில் முக்கிய உணவாக இருப்பது கீரைகள். இந்தக் கீரைகளில் முதல் இடத்தில் இருப்பது முருங்கைக் கீரை.
இந்த முருங்கைக் கீரையில் ஃபோலேட், மெக்னீசியம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், ஜிங்க் போன்ற சத்துக்கள் அதிக அளவு நிறைந்துள்ளன. மேலும், புரதம், நார்ச்சத்து, பொட்டாசியம், காப்பர், சோடியம், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், பீட்டா கரோட்டின், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற சத்துக்களும் இதில் காணப்படுகின்றன.
குர்செடின், குளோரோஜெனிக் அமிலம், போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அமினோ அமிலங்கள் உள்ளன.
ஆனால் ஒரே மாதிரி சமைத்துச் சாப்பிட்டால் சலிப்பு தட்டிவிடும். ஆகையால் வித்தியாசமான முறையில் முருங்கைக் கீரையில் துவையல் செய்து சாப்பிடலாம். எப்படி செய்யலாம் விரிவாக பார்க்கலாம்.
முருங்கைக் கீரை துவையல் :
தேவையான பொருட்கள்:
முருங்கை கீரை – 1 கப்
உளுத்தம் பருப்பு – 2 ஸ்பூன்
கடலை பருப்பு – 2 ஸ்பூன்
வர மிளகாய் – 4
பச்சை மிளகாய் -2
தேங்காய் துருவல் – ½ கப்
சின்ன வெங்காயம் -10
புளி – ஒரு பாக்கு அளவு
உப்பு – தே. அளவு
கடுகு – தே. அளவு
பூண்டு – 3 பல்
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு போட்டு வதக்கவும். பிறகு அதனுடன் வர மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து வறுத்து பின் சின்ன வெங்காயம், பூண்டு, புளி, கீரை மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி இறக்கவும்.
சூடு ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுக்கவும்.
தாளிக்க எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து போட்டு கறிவேப்பிலை போட்டுத் தாளித்து. அரைத்து வைத்துள்ள துவையலில் சேர்த்து கலந்துவிட்டால் சுவையான சத்தான முருங்கை கீரை துவையல் ரெடி.
- யாழினி சோமு