உலகின் மிகப்பெரிய பாலைவனம் சகாரா பாலைவனம். அந்த பாலைவனத்தின் ஒரு பகுதியான நைஜர் நாட்டின் டெனெரே பகுதியில் தன்னந்தனியாக கிட்டத்தட்ட 300 ஆண்டுகளாக நின்று கொண்டிருந்தது ஒரு மரம்.
தனிமை என்றால் அப்படியொரு தனிமை. தனிமையோ தனிமை. காரணம், அக்கம் பக்கம் 400 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு வேறு எந்த மரமும் இல்லாத தனிமை அது. பக்கத்தில் பேச்சுத் துணைக்குக்கூட ஒரு ஆளில்லாமல் நின்ற அந்த அக்கேசியா (கருவேல) மரம்தான், உலகிலேயே மிகத் தனிமையில் இருந்த மரம்.
அந்தப் பக்கம் ஆய்ந்து ஓய்ந்து வருகிறவர்களுக்கு நிழல் தருகிற ஒரே இடம் அந்த மரம்தான்.
அந்த வழியே ஒட்டகங்களில் வரும் டுவாரெக் இனத்தவர்கள், தேநீர் போடுவதற்காக அந்த மரத்தின் காய்ந்த கிளைகளைக்கூட முறிக்க மாட்டார்கள்.
மரத்தின் அருமை ஒட்டகங்களுக்குக் கூட தெரிந்திருந்ததோ என்னவோ?
அவைகூட மரத்தில் இருக்கும் இலைகள், முட்களை மேய்வதில்லை. இந்தநிலையில், ஒருநாள் அந்த மரத்துக்கு வந்தது ஆபத்து.
1973ஆம் ஆண்டு, லாரி ஓட்டுநர் ஒருவர் வண்டிக்கு ஆறேழு லிட்டரும், அவருக்கு அரை லிட்டரும் போட்டுவிட்டு வண்டியை ஓட்டி வந்திருக்கிறார்.
இந்த மரம் கண்ணில்பட்டிருக்கிறது. மரத்தின் நிழலில் வண்டியை நிறுத்தி ஓய்வெடுக்க நினைத்தாரோ என்னவோ? குருட்டாம்போக்கில் மரத்தை நோக்கி வண்டியை ஓட்ட, வண்டி மரத்தில் மோதி மரம் பணால்!
‘ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு இருந்து நிழல் குடுத்துக்கிட்டு இருந்தேன். அது உனக்குப் புடிக்கலியா? எனக்கின்னே வருவீயாடா?‘ என்று அந்த மரம் சாயும் போது நினைத்திருக்கும்.
மது நாட்டுக்கும் வீட்டுக்கும் மட்டுமல்ல, சுற்றுச்சூழலுக்கும் கேடு!
சரி. இப்போது அந்த மரத்தின் நிலை என்ன? நைஜர் நாட்டின் தலைநகரமான நயாமியில், அந்த மரத்தின் காய்ந்து பட்டுப்போன உடல்பாகத்தை நினைவுச்சின்னமாக வைத்திருக் கிறார்களாம்.
மரம் நின்ற இடத்தில் இப்போது உலோகத்தில் ஒரு மரம் வைக்கப்பட்டிருக்கிறதாம்.
இயற்கையை அழித்துவிட்டு அதற்கு நினைவுச்சின்னம் வைக்கும் வேலையில் இப்போதுள்ள உலகம் சுறுசுறுப்பாக இருக்கிறது. அருமை இல்லையா?
நன்றி: மோகன ரூபன் முகநூல் பதிவு.