உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு, கொஞ்சம் கற்பனை சேர்த்துப் புனையப்படுகிற திரைக்கதைகள் ‘ஹிட்’ அடிக்கும். சமீபகாலமாக மலையாளத்தில் வெற்றி பெறுகிற பல திரைப்படங்கள் அப்படித் தயாரானவையாக இருக்கின்றன. அந்த வகையில் இதுவும் அமையுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது ‘நரிவேட்டா’. தமிழில் இது ‘நரிவேட்டை’ என்ற பெயரில் ‘டப்’ செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.
கேரளாவின் வயநாட்டிலுள்ள முத்தங்காவில் ‘அரசு வாக்குறுதி தந்தவாறு தாங்கள் வீடு கட்ட உடனடியாக நிலம் அளிக்க வேண்டும்’ என்று கோரி, 2003-ம் ஆண்டு சில பழங்குடியின மக்கள் போராடியதைக் கோடிட்டுக் காட்டியது இப்படத்தின் ட்ரெய்லர்.
உண்மையிலேயே ‘நரிவேட்டை’ அச்சம்பவத்தின் தாக்கத்தினை ரசிகர்களுக்கு முழுமையாகக் கடத்தியிருக்கிறதா?
’நரிவேட்டை’ கதை!
2003-ம் ஆண்டு. வயநாடு பகுதியில் போலீசார் தீவிரமாக சோதனையிட்டு வருகின்றனர். சில போலீசார் ஒரு இளைஞனைக் குறிவைத்து தேடுகின்றனர். அவர்களது கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, அவர் மலைப்பாதையில் செல்கிறார். ஆனாலும், அவரைச் சுற்றி வளைத்துப் பிடிக்கின்றனர். அவரது கைப்பையில் உள்ள சில காகிதங்களைப் பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்.
அந்த இளைஞரின் பெயர் வர்கீஸ் பீட்டர் (டொவினோ தாமஸ்). 28 வயதாகியும் வேலைக்குச் செல்லாமல் அரசுப் பணிக்கான தேர்வுகளை எழுதி வருபவர். இதனால், தாயின் (ரினி உதயகுமார்) ஏச்சு பேச்சுகளுக்கு ஆளாகி வருகிறார்.
‘நீ நினைச்சதை மட்டுமே செய்’ என்று வர்க்கீஸை திட்டுவதும், எப்போதும் சுயநலத்துடன் செயல்படுவதாகக் குறை கூறுவதும் அவரது தாயின் வழக்கம். போலவே, வர்க்கீஸின் முன்கோபம் அவரது பெரும்பலவீனங்களில் ஒன்றாக இருக்கிறது.
அப்படிப்பட்ட வர்க்கீஸை பள்ளிப்பருவம் முதலே காதலித்து வருகிறார் நான்சி (பிரியம்வதா கிருஷ்ணன்).
ஒருகட்டத்தில், ’உடனடியாக ஏதாவது ஒரு வேலைக்கு நீ சென்றால் மட்டுமே நாம் வாழ்வில் ஒன்றிணைவது சாத்தியமாகும்’ என்று வர்க்கீஸிடம் சொல்கிறார் நான்சி.
அந்த நேரத்தில், கான்ஸ்டபிள் ஆக வர்க்கீஸ் தேர்வாகியிருப்பதாகக் கடிதம் வருகிறது. அடுத்தடுத்த தேர்வுகளை நன்றாக எழுதித் தேர்ச்சியடைந்து ஒரு அதிகாரியாகப் பணியில் சேரத் துடிக்கும் வர்கீஸ், தனது சூழலால் வேறு வழியில்லாமல் கான்ஸ்டபிள் ஆகச் சேர்கிறார்.
காவல் துறையில் காவலர்கள் மீது மேலிடம் செலுத்தும் அழுத்தம் எத்தகையதாக இருக்கும் என்று ஏற்கனவே அறிந்தவர் வர்கீஸ். வயதில் மூத்த கான்ஸ்டபிள்களின் ஆதிக்கம், பிடிக்காதது என்றாலும் மேலதிகாரிகளின் உத்தரவுகளுக்காகச் செயல்பட வேண்டிய கட்டாயம் அவரை அலைக்கழிக்கிறது.
அந்த காலகட்டத்தில், அவருக்கு ஆறுதலாக இருக்கிறார் பஷீர் (சூரஜ் வெஞ்சாரமூடு). வயதில் மூத்தவராக இருந்தாலும், சக வயது தோழனைப் போல வர்கீஸுக்கு உறுதுணையாக இருக்கிறார்.
ஒருநாள், வயநாட்டில் பழங்குடியின மக்கள் போராட்டம் நடத்தும் இடத்திற்குச் செல்லுமாறு உத்தரவு வருகிறது. அங்கு செல்கிறவர்களின் பட்டியலில் வர்கீஸ் பெயரும் இருக்கிறது.
‘எனக்கு போக இஷ்டமில்ல’ என்பதைச் சூசகமாகத் தெரிவித்தாலும், மேலதிகாரி அதனை ஏற்பதாக இல்லை. அதனால், வேறு வழியில்லாமல் அந்த போராட்டக் களத்திற்குச் செல்கிறார்.
சென்ற முதல் நாளே, தாமி (பிரனவ் தியோபின்) எனும் பழங்குடியின இளைஞனோடு மல்லுக்கட்டுகிறார் வர்கீஸ். அது அங்கிருக்கும் உயரதிகாரிகளுக்குத் தெரிய வருகிறது. ’இது சென்சிடிவ்வான விஷயம். கொஞ்சம் புத்தியோட நடந்துக்க முடியாது’ என்று வர்கீஸை எச்சரிக்கிறார் ஐபிஎஸ் அதிகாரி கேசவதாஸ் ரகுராம் (சேரன்).
அதன் தொடர்ச்சியாக, தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட பஷீரும் அவருடன் சென்ற அதிரடிப்படை வீரரும் காணாமல் போகின்றனர். அதனை அறிந்ததும் துடிக்கிறார் வர்கீஸ்.
தானே அவரைத் தேடிச் செல்லும் அளவுக்குத் துடிக்கிறார். ஆனால், உயரதிகாரிகளின் உத்தரவு இல்லாமல் காட்டுக்குள் ஒரு அடி கூட எடுத்து வைத்துவிட முடியாது என்பதே நிலைமை.
பிறகு, வர்கீஸின் முன்கோபம் போராட்டத்தில் ஈடுபடும் பழங்குடியினரைப் பாதிப்புக்குள்ளாக்கும் நிலைமையை ஏற்படுத்துகிறது. அந்த நேரத்தில், காவல்துறையில் இருக்கும் சிலரால் அவர் பகடைக்காய் ஆகப் பயன்படுத்தப்படுகிறார்.
அதன்பின்ன என்ன ஆனது என்று சொல்கிறது ‘நரிவேட்டை’யின் மீதி.
படமா, பப்படமா?
உண்மை நிகழ்வொன்றில் நிறையவே புனைவுகளை வாரியிறைத்து எழுதப்படுகிற, ஆக்கப்படுகிற திரைப்படம் இப்படித்தான் இருக்கும். அதில் சந்தேகமில்லை. ஆனால், ‘யதார்த்தம்’ என்று சில விஷயங்களைச் சொல்லிவிட்டு, அதற்கு முற்றிலும் புறம்பானவற்றைக் காட்டுகிறபோதுதான் அப்படம் ‘பப்படம்’ ஆகும்.
அபின் ஜோசப் அமைத்திருக்கிற எழுத்தாக்கமும் சரி; அனுராஜ் மனோகரின் இயக்கமும் சரி; அப்படிச் சில கேள்விகளை நம்முள் எழுப்புகின்றன.
கதையின் மையப்பாத்திரங்களான பஷீர், வர்கீஸ் இருவரும் காவல்துறை அதிகாரியான கேசவதாஸை சர்வசாதாரணமாகச் சந்தித்து சில கேள்விகளை எழுப்புகின்றனர்; கருத்துகளைத் தெரிவிக்கின்றனர்; முக்கியமாக, வாதத்தில் ஈடுபடுகின்றனர்.
போராட்டம் நடைபெறுகிற இடத்தில் காவல்துறை முகாம் இட்டிருக்கிற சூழலில் அது எந்தளவுக்குச் சாத்தியம் என்பது படக்குழுவினருக்கே வெளிச்சம்.
வர்க்க வேறுபாடுகள் தொடர்பான அடக்குமுறைகளைப் பெரியளவில் எதிர்கொள்ளாத சூழலில் வாழ்கிற நாயகன், அப்படி வாழ்ந்து வருகிற சிலரைக் காண்கிறபோது என்ன நினைக்கிறார், செய்கிறார் என்பது இக்கதையில் சொல்லப்படவே இல்லை.
சுயநலமே பிரதானமாக இருக்கும் அவரது குணாதிசயம் பொதுநலம் நோக்கி எப்போது நகர்ந்தது என்பதும் இத்திரைக்கதையில் அடிக்கோடிடப்படவில்லை.
இப்படிப்பட்ட சில பலவீனங்கள் ‘க்ளிஷே’வான இக்கதையை ஏற்கத் தடைகளாக உள்ளன.
அதேநேரத்தில், இப்படம் ஒரு போராட்டக் களத்தில் காவல் துறையைச் சேர்ந்த சிலர் இப்படியும் செயல்படுவார்கள் என்று காட்டுகிறது. இதனை மாநிலம், நாடு என்றில்லாமல் உலகம் தழுவிய வகையில் பொதுவாகவும் நோக்கலாம். அது மட்டுமே ‘நரிவேட்டை’ படத்தின் ப்ளஸ்.
பாத்திரங்கள், காட்சிச் சூழல் உடன் நாம் ஒன்றுகிற வகையில் ஒளிப்பதிவைக் கையாண்டிருக்கிறார் விஜய்.
ஒரு காட்சியைக் காட்டிவிட்டு, பிறகு பிளாஷ்பேக் ஆக திரைக்கதையை நகர்த்துகிற பணியைச் சவால்களுடன் எதிர்கொண்டிருக்கிறார் படத்தொகுப்பாளர் ஷமீர் முகம்மது.
காட்சிகளுக்கேற்ற பின்னணியைக் காட்டுவதில் எந்தக் குறையும் தென்பட்டுவிடக் கூடாது என்பதில் கவனம் காட்டியிருக்கிறது பாவாவின் தயாரிப்பு வடிவமைப்பு.
ஜேக்ஸ் பிஜோயின் இசையில் பாடல்கள் முதல்முறை கேட்கையிலேயே ஈர்க்கின்றன. அதைவிடப் பல மடங்கு உழைப்பைப் பின்னணி இசையில் கொட்டிவிட அவர் முயற்சித்திருக்கிறார். அதற்குத் தக்க பலன் கிடைத்திருக்கிறது.
நடிப்பைப் பொறுத்தவரை, நாயகன் டொவினோ தாமஸ் முதல் ஓரிரு ஷாட்கள் நடித்தவர்கள் வரை எவரும் குறை வைக்கவில்லை.
இயக்குனர் சொன்னதற்கேற்ப ஒவ்வொரு காட்சியிலும் சிறப்பாக நடித்திருக்கிறார் டொவினோ தாமஸ். ஆனால், திரைக்கதையில் தனது பாத்திரத்தின் வார்ப்பு உருமாறுகிற இடங்களை அவர் எப்படிக் கவனிக்கத் தவறினார் என்பது அதிர்ச்சி தருகிறது.
இரண்டாம் பாதியில் இப்படித்தான் காட்சிகள் நகரும் என்கிற நமது எதிர்பார்ப்பைத் தாண்டி, தனது பாத்திரத்தின் வழியே ஆச்சர்யம் தரத் தவறியிருக்கிறார் டொவினோ தாமஸ்.
நாயகியாக வரும் பிரியம்வதா கிருஷ்ணன் ‘அடடா’ அழகு. திருமணப் பருவத்திற்கு முன்பாக ஒரு பெண் இப்படித்தான் தோற்றம் தருவார் என்று நம்பும்படியாகத் திரையில் வந்து போயிருக்கிறார். இதே சிரத்தையையும் நடிப்பையும் அடுத்தடுத்த படங்களிலும் அவர் வெளிப்படுத்த வேண்டும்.
இது போன்ற கதைகளில் இப்படியொரு பாத்திரம் நிச்சயம் இருக்கும் என்று சொல்லும்படியாக ‘டைபிகலாக’ வந்து போயிருக்கிறார் சூரஜ் வெஞ்சாரமூடு.
’இந்த படத்தில் இவர் எதற்கு’ என்று சொல்லும்படியாக வந்து போயிருக்கிறார் இயக்குனர் சேரன். காட்சிகளுக்குத் தக்கபடி நடித்திருந்தாலும், மலையாளத் திரையுலகை அதிரவிடுகிற அறிமுகமாக இப்படம் அவருக்கு அமையவில்லை.
இது போகப் போராட்டத்தில் ஈடுபடத் தூண்டுகிற பெண் சாந்தி ஆக வரும் ஆர்யா சலீம், பிரசாந்த் மாதவன், பிரணவ் தியோபின் உட்படப் பலர் இதிலுண்டு.
இப்படத்தின் தமிழ் டப்பிங் பணிகளை ஆர்.பி.பாலா கையாண்டிருக்கிறார். ’ரசிகர்கள் வசனங்களை எளிதாகப் புரிந்து கொள்ள வேண்டும்’ என்ற எண்ணத்துடன் தெளிவான உச்சரிப்பைக் கையாண்டிருக்கிறார். இப்படத்தில் பிரதான பாத்திரங்களில் நடித்த சில மலையாள நடிகர்களைத் தமிழில் பேச வைத்திருக்கிற உணர்வையும் தந்திருக்கிறார்.
அதனால், ‘நரிவேட்டை ஒரு டப்பிங் படம்’ என்ற எண்ணம் நமக்குள் எழாதது இன்னொரு ப்ளஸ்.
தணிக்கைத் துறையின் பிடியில் எத்தனை காட்சிகள், ஷாட்கள் சிக்கின என்று தெரியவில்லை. அதனை மீறி மையப் பாத்திரங்கள் வார்க்கப்பட்ட விதம், திரைக்கதையின் எந்த இடத்தில் யதார்த்தத்தில் இருந்து சினிமாத்தனத்திற்கு தாவுவது என்ற குழப்பம் உட்படப் பல எதிர்மறை விஷயங்கள் இப்படத்தை பின்னுக்குத் தள்ளியிருக்கின்றன. உண்மையைச் சொல்லப் போனால், புதுமைகள் ஏதுமற்று ஏமாற்றம் அளிக்கின்றன.
அதேநேரத்தில், ’ஒரு போராட்டக் களத்தில் இப்படியும் சில விஷயங்கள் நடக்கக்கூடும்’ என்று சொன்ன இயக்குனர் அனுராஜ் மனோகர் அண்ட் டீமின் துணிச்சலைப் பாராட்டத்தான் வேண்டும். அது தவிர ‘நரிவேட்டை’யில் சொல்வதற்கு ஒன்றுமில்லை..!
– உதயசங்கரன் பாடகலிங்கம்