கவிஞர் வாலி இலக்கியவாதியாக எப்போது பார்க்கப்பட்டார்?

கவிஞர் முத்துலிங்கம் விளக்கம்

என் மகள் திருமணத்தின்போது காவியக் கவிஞர் அண்ணன் வாலி இல்லையே என்ற குறையைத் தவிர வேறு எந்தக் குறையும் இல்லை.

என் மகளை சிறு குழந்தையிலிருந்தே நன்கறிவார். “எப்போது திருமணம், எப்போது திருமணம்” என்று அடிக்கடி கேட்டுக்கொண்டே இருப்பார்.

ஜாதகம் பொருந்தவில்லையென்று நான் சொன்னபோது “ஜோதிடம் தனை இகழ்” என்று பாரதியாரே சொல்லியிருக்கிறார். ஆகவே, “ஜாதகத்தை நம்பாதே” என்றும் சொல்வார். அப்படிப்பட்ட சிறப்புக்குரியவர் அண்ணன் வாலி.

அவர் திரைப்பாடல்கள் மட்டுமே எழுதிக் கொண்டிருந்தபோது, இலக்கியவாதிகள் கண்ணதாசனுக்குக் கொடுத்த அங்கீகாரத்தை அவருக்குக் கொடுக்கவில்லை. ‘அவதார புருஷன்’ என்ற காவியத்தை எழுதிய பிறகு தான் இலக்கியவாதிகளும் தமிழறிஞர்களும் அவர் பக்கம் திரும்பினர்.

கம்பன் விழாக் கவியரங்கம் போன்ற இலக்கிய விழாக்கள் அனைத்திலும் அவரை அழைக்கத் தொடங்கினர்.

‘பாண்டவர் பூமி’, ‘கிருஷ்ணவிஜயம்’, ‘இராமானுஜ காவியம்’ போன்ற பல காவியங்களைப் படைத்திருந்தாலும் அதில் மாஸ்டர் பீஸ் என்று சொல்லும்படி இருப்பது ‘அவதார புருஷன்’ தான். இயைபுத் தொடையை வைத்து எழுதுவதில் அவருக்கு நிகர் எவரும் இலர்.

இராமனுடைய அவதாரத்தைச் சொல்லும்போது,

 “அன்று சர்ப்பத்தில் படுத்தவன்
இன்று கோசலையின் கர்ப்பத்தில் படுத்தான்”
 – என்பார்.

“காகங்கள் கொத்தியா கற்பாறை பிளக்கும்
மேகங்கள் முட்டியா மேல்வானம் வெடிக்கும்”
 – என்று ஓரிடத்தில் எழுதியிருப்பார்.

குழந்தை ராமன் அழுகிறான். கோசலை தாலாட்டுகிறாள்… எப்படி….?

“பாலகர் என்றால் பாலுக் கழுவார்
பார்த்த(து) உண்டு நாட்டினிலே
பாற்கடல் மீதே படுத்துக் கிடந்தவன்
பாலுக் கழுவதேன் வீட்டினிலே”
 – இப்படிப் பலவற்றைச் சொல்லலாம்.

“ஒருவன் ஆளாண்மை மிக்கவனாயினும், தோளாண்மை மிக்கவனாயினும் அவனிடம் தாளாண்மை இல்லையென்றால் வாழ்க்கை வயலில் அவனால் வேளாண்மை செய்ய முடியாது” என்று ஓரிடத்தில் உரைப்பார்.

இதெல்லாம் மறக்க முடியாத கருத்துகள்.

– கவிஞர் முத்துலிங்கம்.

நன்றி: தினமணி

Comments (0)
Add Comment