மகாகவி பாரதிக்குப் பின் தமிழகத்தில் தோன்றிக் கவிதையை வளம்பெறச் செய்த ஆற்றல் மிகுந்த சிறந்த கவிஞர்களுள் கம்பதாசன் குறிப்பிடத் தகுந்தவர்.
கவிதை நயமும், கற்பனைச் சுவையும், உவமை அழகும், கருத்தாழமும் புதுமையும் மிளிரும் கவிதைகளையும் குறுங்காவியங்களையும் படைத்துள்ள அவர் திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதிப் பெயர் பெற்றிருந்தார்.
இசைப் பாடல்கள் எழுதும் திறம் பெற்றிருந்த அவர், நாட்டிய நாடகங்கள் ஆக்கியும் நாடகங்களில் நடித்தும் கலைப்பணி புரிந்தவர்.
ஏழை, எளியவர்கள், தொழிலாளர்கள் முதலியோரின் வாழ்க்கை நலனில் அக்கறை கொண்டிருந்த அவர் சோசலிஸ்ட் கவிஞராக இந்தியா முழுவதும் அறியப் பெற்றிருந்தார்.
எனினும் வறுமையின் கோரப் பிடியில் சிக்கிச் சிரமப்பட்டு மரணம் எய்தியது வாழ்க்கையின் விசித்திர முரண்களில் ஒன்றேயாகும்.
மேற்சொன்ன வல்லிக்கண்ணனின் கூற்று, மிகைப்படுத்தப்படாத உண்மை என்பதனைக் கம்பதாசன் கவிதைகளைப் பயில்வோர் எவராயினும் முழுமனதொடு ஒப்புக்கொள்வர்.
புதுச்சேரி தமிழுலகத்திற்கு வழங்கிய இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர்களின் வரிசையில் பாவேந்தர் பாரதிதாசன், கவிஞர் தமிழ்ஒளி வரிசையில் வைத்துக் கொண்டாடத்தக்க மகாகவி கம்பதாசன் என்பதனைக் காலம் உறுதிசெய்யும் தருணம் இது.
யார் இந்தக் கம்பதாசன்?
கம்பதாசனின் பெற்றோர் புதுச்சேரியை அடுத்துள்ள வில்லியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் குடும்பம் கொலு பொம்மைகள் செய்யும் கைவினைத் தொழிலில் தேர்ச்சிபெற்ற குடும்பம். கம்பதாசனின் தந்தையார் சுப்பராயன், தாயார் பாப்பம்மாள்.
இவர் புதுச்சேரியை அடுத்துள்ள உலகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர். சுப்பராயன் பாப்பம்மாள் தம்பதியரின் ஒரே மகனாக அப்பாவு 1916 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் நாள் பிறந்தார்.
அப்பாவு என்பதே கம்பதாசனின் இயற்பெயர். அப்பாவுவோடு உடன் பிறந்தவர்கள் ஐவர். ஐவரும் பெண்கள். பெற்றோர்கள் அப்பாவுவைச் செல்லமாக ராஜப்பா என்று அழைத்தனர்.
கம்பதாசனின் குடும்பம் அவரின் இளம்வயதிலேயே புதுச்சேரியைவிட்டுச் சென்னையிலுள்ள புரசைவாக்கத்திற்குக் குடிபெயர்ந்தது.
பின்னாளில் அப்பாவு நாடகங்களில் நடிக்கும் காலங்களில் சி.எஸ். ராஜப்பா என்றும் பாவலனாகப் புகழ்பெற்ற காலங்களில் கம்பதாசன் என்றும் கலையுலகிற்கு அறிமுகம் ஆனார்.
நாடக நடிகராகத் தமது கலைப்பயணத்தைத் தொடங்கிய கம்பதாசன் தொடர்ந்து தம்முடைய இனிமையான குரல்வளத்தால் பின்பாட்டுக்காரராகவும் ஆர்மோனியம் வாசிக்கும் பக்க வாத்தியக்காரராகவும் நாடகங்களுக்குப் பாட்டெழுதும் கவிஞராகவும் தமது கலை உலகப் பயணத்தைத் தொடர்ந்தார்.
திரௌபதி வஸ்திராபரணம், சீனிவாச கல்யாணம் போன்ற படங்களில் நடிகராகத் திரையுலகில் நுழைந்த கம்பதாசன் பின்னர் 1940ஆம் ஆண்டில் வெளிவந்த வாமன அவதாரம் என்ற படத்திற்கு முதன் முதலாகப் பாடல்கள் எழுதினார்.
அதனைத் தொடர்ந்து வேணு கானம், மகாமாயா, பூம்பாவை, மங்கையர்க்கரசி, ஞானசௌந்தரி, அக்பர், அவன், வானரதம் போன்ற பல திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதியும், சில திரைப்படங்களுக்குக் கதை வசனம் எழுதியும் மிகுந்த புகழ்பெற்றார்.
அவற்றில் அவன், வானரதம், அக்பர் போன்ற திரைப்படங்களில் அவர் எழுதிய பாடல்கள் காலத்தால் அழியாத பாடல்களாக இன்றும் போற்றப்படுகின்றன.
– எழுத்தாளர் வல்லிக்கண்ணன் ‘கவிஞர் கம்பதாசன் வாழ்வும் பணியும்’ என்ற நூலுக்கு வழங்கிய முன்னுரை.