பெண்கள் சுடும் தோசைகள்: ஆணாதிக்கத்தின் வடிவம்!

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்

நான் தோசைகளை வெறுக்கத் துவங்கியது அம்பையின் எழுத்துக்களைப் படிக்கத் துவங்கிய காலத்தில்தான். அதற்கு முன்வரைக்கும் தோசை என்றால் கபகபவென்று அவ்வளவு ஆசையுடன் தட்டின் முன்னால் காத்திருப்பேன்.

என் அம்மா கல்லில் தோசை வார்த்து அதை ஒரு இட்லிக் கொப்பரை மூடிகொண்டு மூடி வைத்துப் பின் மூடியைத் திறந்து தோசையை அப்படியே இரண்டாக மடித்து, மடித்த தோசையின் மீது தோசைக் கரண்டியால் செல்லமாக ரெண்டு தடவு தடவி எடுத்து எங்கள் தட்டில் போடுவார்கள்.

எங்கள் கிராமத்திலேயே இப்படித் தோசை சுடுவது எங்க அம்மா மட்டும்தான். மற்ற வீடுகளிலெல்லாம் ராத்திரி 2 மணிக்கெல்லாம் தோசைகளைச் சுட்டு வட்ட வட்டமாக நார்ப்பெட்டியில் அடுக்கி விடுவார்கள் பெண்கள். அப்பேர்ப்பட்ட தோசையும் ஆணாதிக்கத்தின் இன்னொரு வடிவமாக என் மனதில் அழுத்தமாகப் படிந்துவிட்டது.

அம்பையின் ‘வெளிப்பாடு’ கதையைப் படித்து முடித்த அந்த நிமிடத்தில். (வட்டமான ஆணாதிக்கம்). எங்கள் அம்மா சுட்டு நாங்கள் தின்ற தோசைகள் வயிற்றில் வலி உண்டாக்கின.

பெண்கள் வாழ்க்கை குறித்து ஆய்வு செய்ய வந்த ஆய்வாளரான ஒரு பெண்ணுக்கும் ஒரு குடும்பப் பெண்ணுக்கும் நடக்கும் உரையாடல் (வெளிப்பாடு-கதை):

“நான் தோசை சுடட்டுமா?“

“அட, தோசை சுடத்தெரியுமா?”

“ஏன், தெரியாதுன்னு நினைச்சீங்களா? உங்களை மாதிரி அவ்வளவு அழகா வராது. ஆனா சுடுவேன்.”

“என்ன மாதிரின்னா, என் வயசு என்ன, உங்க வயசு என்ன? பத்து வயசு தொடங்கி சுடறேன். நாப்பது வருஷத்திலே ஒரு நாளைக்கு இருபது மேனிக்கு எவ்வளவு தோசை… அம்மம்மா…”

ஒரு வருடத்துக்கு ஏழாயிரத்து முந்நூறு தோசைகள். நாற்பது வருடங்களில் இரண்டு லட்சத்துத் தொண்ணூற்றிரண்டாயிரம் தோசைகள். இது தவிர இட்லிகள், வடைகள், அப்பங்கள், பொரியல்கள், குழம்புகள். எவ்வளவு முறை சோறு வடித்திருப்பாள்? எவ்வளவு கிலோ அரிசி சமைத்திருப்பாள்? இவள் சிரிக்கிறாள்.

“என்னா ரிப்போர்ட்டு எழுதணும்?”

“பொம்பளைங்க பத்தி“

“பொம்பளைங்க பத்தி எழுத என்ன இருக்கு?”

“அதாவது அவங்க எப்படி வாழறாங்க? என்னவெல்லாம் வேலை செய்யறாங்க, அவங்க தங்களோட வாழ்க்கையைப் பத்தி என்ன நெனக்கிறாங்க..”

“என்ன நெனக்கிறாங்க? புள்ள பெறுதோம். ஆக்கிப் போடுதோம்.”

தோசையைப் புரட்டிப்போட்டது போல அன்று என் ஆண் மனதைப் புரட்டிப்போட்ட அரைப்பக்கம் இது.

– ச. தமிழ்ச்செல்வன்

நன்றி: புத்தகம் பேசுது.

Comments (0)
Add Comment