பாலுமகேந்திராவிடம் சினிமா கற்ற நினைவுகளை வெற்றிமாறன் பகிர்ந்துகொண்டவை.
“பாலுமகேந்திராவிடம் பத்து நாள் பழகியவர்களாக இருந்தாலும் சரி, ‘அவர் இப்படிச் செய்தார், இப்படிச் சொன்னார்’ என்று சொல்கிற அளவுக்கு நம்மைப் பாதிக்கக்கூடிய மிகப்பெரிய ஆளுமை அவர்.
எல்லா விதங்களிலும் அவர் நம்மை இன்ப்ளுயன்ஸ் செய்வார். நடை, உடை, பாவனைகளில் இருந்து அனைத்திலும் அவருடைய பாதிப்பு இருக்கும்.
எதையும் வலிந்து திணிக்கமாட்டார். அவரிடம் இருந்த எல்லோரும் நல்ல சினிமா பண்ணுவோம். ஆனால் ஒருவர் செய்த மாதிரி மற்றவர் செய்ய மாட்டோம். தனித்தன்மை அப்படி. தக்க வைக்கக் கூடிய தன்மை அவரிடம் இருந்தது.
அவரிடம் வேலைபார்த்தபோது ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு மாதிரி திட்டுவார். என்னை நிறைய திட்டுவார்.
திட்டிக்கிட்டே இருப்பார். திட்டித் திட்டியே அவர் டயர்டு ஆவார். திட்டு வாங்கி நாங்க டயர்டு ஆவோம்.
ஒருவர் ஆறு மணி வரச் சொன்னால், 5.58 க்கே அந்த கேட்டில் போய் நிற்பார். ஆறு மணிக்குத்தானே வரச் சொன்னார் என்று இரண்டு நிமிடம் காத்திருப்பார்.
என்னை “ஆறு மணிக்கு வந்துடுடா எழுத ஆரம்பிப்போம்” என்பார். நான் ஏழரைக்குப் போய் நிற்பேன்.
“என்னப்பா…”
“வரச்சொன்னீங்க…”
“எத்தனை மணிக்கு வரச்சொன்னேன்.”
“ஆறு மணிக்கு சார்… லேட்டாயிட்டு சார்.”
“அதுதான் ஏன் லேட்டாயிட்டுங்றேன்.”
“பஸ் லேட்டாயிட்டு.”
“மூணாங்கிளாஸ் பையன் மாதிரி சாக்கு சொல்லாதே. உன்னாலே ஒழுங்கா வேலை செய்யமுடியும்னா செய். இல்லாட்டி போய்டு…”
“சரி… என்னா சாப்பிட்டே” என்று கேட்பார். “இல்லை சார்” என்பேன். அவரே பிரெட் டோஸ்ட் செய்து கொடுப்பார்.
எழுதுவது என்றால் அவர் டிக்டேட் செய்வார். நாம் எழுத வேண்டும். டயலாக்ஸ்னு சொல்லக்கூடாது. உரையாடல் என்றுதான் சொல்ல வேண்டும்.
சில நேரங்களில் அவரே திரைக்கதை எழுதியிருப்பார். அவரே எழுதும்போது குறைவாக எழுதுவார். நமக்கு டிக்டேட் செய்யும்போது விரிவாகச் சொல்வார்.
நீலவானம்… டீடெய்லா எழுதிட்டு அடுத்த நாள் படிக்கச் சொல்வார். ‘உள்ள வா…’ என்று படித்தால் மீண்டும் படி என்பார். ‘உள்ள வா…’ என்போம். ‘ஏய் உள்ள வா…’ என்பதை விட்டுட்டியே என்பார். இதற்காக ஒரு மணி நேரம் திட்டுவார்.
அவருடன் வேலை செய்வது தலைகீழே தண்ணியில் முக்குவதுபோல இருக்கும். வீட்டுக்குப் போங்க என்றால், அப்பாடா என்றிருக்கும். ஒவ்வொரு நாளும் இப்படித்தான் இருக்கும்.
வெளியில முயற்சி பண்ணும்போது நிறைய ஏமாற்றங்கள் இருக்கும். சினிமான்னா உங்களுக்கே தெரியும்.
சாரை பார்க்கலாம்னு தோணும்போது கேட்போம்,
வாடா என்று சொல்லிவிட்டு, அவர் கண்டுபிடித்து வைத்திருக்கிற ஒரு டீயைப் போடுவார். குக்கிங் அவருக்கு ரொம்பப் பிடிக்கும். சமைத்து மற்றவர்களுக்குக் கொடுப்பார்.
ஆறு மாதத்துக்கு ஒரு முறை அவரைப் பார்க்கும்போது இந்த உலகை எதிர்கொள்கிற தைரியம் கிடைக்கும்.
சினிமாவை நேசிக்கக் கூடியவர்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்கக் கூடியவர். அவர் சொன்னதைக் கேட்டு, பேசியதைக் கேட்டு இயக்குநரான நிறைய பேர் இருக்கிறார்கள்.
மே 19 அவருடைய பிறந்த நாள். நாங்க போய் பார்த்து அவருடன் பேசிக் கொண்டிருப்போம். முழு நாளும் அங்கே இருப்போம். ரொம்பவும் உற்சாகமாக இருப்போம்.
ஒரு படம் பிடிச்சிருக்குன்னா, அந்த ஃபிலிம் மேக்கர் யார் என்றெல்லாம் பார்க்கமாட்டார். நேராகப் போய் பார்த்து பாராட்டுவார். பாராட்டுவதிலும் அன்பை தெரிவிப்பதிலும், மன்னிப்புக் கேட்பதிலும் அவ்வளவு ஒரு பக்குவமான மனிதர்.
– தான்யா