காலத்தால் அழியாத பாடல்களைத் தந்த பி.லீலா!

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஜேசுதாஸ் பாடிய ‘அரிவராசனம் பாடலோடுதான் நடை திறக்கப்படும், மூடப்படும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

இதேபோன்று ஸ்ரீமன் நாராயணீயம் பாகவதத்தை பாடகி பி.லீலா பாடி இருந்தார். அந்தப் பாடலே குருவாயூர் நடைதிறக்கும்போது ஒலிக்கிறது. குருவாயூரப்பன் பற்றி ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி உள்ளார்.

கேரளாவின் சித்தூர் கிராமத்தில் பிறந்த பி.லீலா என்கிற பொறயாத்து லீலா – மணிபாகவதர், பத்தமடை கிருஷ்ணா ஐயர், ராம பாகவதர், செம்பை வைத்தியநாத பாகவதர் போன்ற மாமேதைகளிடம் இசை பயின்றவர்.

12 வயதில் ஆந்திர மகிள சபாவில் இவரது இசை அரங்கேற்றம் நடந்தது. 1948-ம் ஆண்டு கங்கணம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் பாடகியாக அறிமுகமானார். 1960-ம் ஆண்டு பி.சுசீலா வரும்வரை இவரே தென்னிந்திய சினிமாவின் முன்னணிப் பாடகியாக இருந்தார்.

தை பொறந்தா வழி பொறக்கும் (தை பொறந்தா வழி பொறக்கும்), நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நான் இருக்கும் (இரும்புத்திரை), கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே, ராஜா மகள் ரோஜா மலர், நான் ராஜா மகள் (வஞ்சிக்கோட்டை வாலிபன்), வாராயோ வெண்ணிலாவோ கேளாயோ எங்கள் கதையே (மிஸ்ஸியம்மா), காத்திருப்பான் கமலக்கண்ணன் (உத்தமபுத்திரன்) போன்றவை அவர் பாடிய முக்கியமான பாடல்கள்.

சுமார் 30 ஆயிரம் பாடல்கள் வரை பாடியுள்ள பி.லீலா, 1991-ம் ஆண்டு வெளியான ‘கற்பூர முல்லை’ படத்தில் இளையராஜா இசையில் ஸ்ரீசிவகத பதகமல்ல என்ற முருகன் பாடலை பாடினார். இதுதான் அவர் சினிமாவுக்கு பாடிய கடைசி பாடல்.

ஞானகோகிலம், ஞானமணி, கலாரத்னம், கானவர்சினி எனப் பல விருதுகளால் கௌரவிக்கப்பட்டார் பி.லீலா. தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகள் பெற்றுள்ளார்.

கேரள, தெலுங்குத் திரை உலகமும் பல விருதுகளை அளித்து இவரை கௌரவித்தன. இவர் இறந்த பின்னர் மத்திய அரசு 2006ல் பத்ம பூஷன் விருதை அளித்தது.

காலத்தால் அழியாத எண்ணற்ற பாடல்களைத் தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் பாடிய பி.லீலா, குரலால் என்றும் ரசிகர்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

– நன்றி: முகநூல் பதிவு

Comments (0)
Add Comment