திரைப்பட நாயகர்களை அரசுப் பணியாளர்களாகக் காட்டும் வழக்கம் மிகவும் அரிது. பெரும்பாலும் காவல் துறை, ஆட்சி நிர்வாகம் என்று குறிப்பிட்ட சில துறைகளைச் சார்ந்தவர்களாகவே காட்டும் வழக்கம் இருந்து வருகிறது. ஆனால், உண்மையில் எத்தனையோ அரசுப் பணிகளில் தங்கள் கடமையைச் செவ்வனே ஆற்றி ‘நாயர்களாக’ப் போற்றக்கூடிய நிலையில் இருப்பவர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும்.
அப்படிப்பட்ட ஒரு நேர்மையான பணியாளரை, அவர் சார்ந்த வித்தியாசமான பணிச்சூழலைக் காட்டுகிற கதைகள் சட்டென்று கவனிப்பையும் உடனடி வரவேற்பையும் பெறும். அதனை அடிப்படையாகக் கொண்டு, ஐஆர்எஸ் எனப்படும் இந்திய வருமான வரித் துறையைச் சேர்ந்த ஒரு அதிகாரியின் நேர்மையை, அவர் மேற்கொண்ட சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை, வரி ஏய்ப்பு சோதனைகளைக் காட்டியது ‘ரெய்டு’ இந்தி திரைப்படம். 2018-ல் வெளியான இவ்வெற்றிப்படத்தை ராஜ்குமார் குப்தா இயக்கியிருந்தார். அஜய் தேவ்கன் நாயகனாக நடித்திருந்தார்.
இந்தக் கூட்டணியில் உருவான ‘ரெய்டு 2’ சில நாட்களுக்கு முன்னர் தியேட்டர்களில் வெளியானது.
எப்படி இருக்கிறது இத்திரைப்படம் தரும் திரையனுபவம்?
‘ரெய்டு 2’ கதை!
முதல் பாகத்தைப் போலவே, இதிலும் தனது நேர்மையான செயல்பாடுகளுக்காகத் தொடர்ச்சியாக ‘ட்ரான்ஸ்பர்’ ஆகிறார் ஐஆர்எஸ் அதிகாரி அமய் பட்னாயக் (அஜய் தேவ்கன்). அவரை 75 வது முறையாக மாற்றும்போது மட்டும், அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டு காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின்றன.
அந்த ஊருக்கு வந்த கையோடு, அந்த பிம்பத்தை உடைக்கிற முயற்சிகளில் இறங்குகிறார் அமன். அதன்பிறகே, அவர் பற்றிய உண்மைகளை அறிவதற்காகவே அந்த ஊருக்குத் திட்டமிட்டு மாற்றலானது தெரிய வருகிறது.
தாதா பாய்க்கு எதிரான சாட்சியங்கள் ஓரளவுக்குக் கிடைத்தபிறகு, அவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்த மேலதிகாரியிடம் அனுமதி பெறுகிறார் அமன். ஆனால், அந்த இடங்களில் ஏமாற்றமே பரிசாகக் கிடைக்கிறது.
பல இடங்களில் தான் கண்ட தடயங்கள் அனைத்தும் அகற்றப்பட்டிருப்பதை உணர்கிறார் அமன். அப்போதுதான், தன்னை வெகுநாட்களாக தாதா பாய் நோட்டமிட்டு வருவதை அறிகிறார்.
ஆனாலும், எல்லாமே விழலுக்கு இறைத்த நீராகிறது. தவறான தகவல்கள் அடிப்படையில் சோதனை மேற்கொண்டதாக, அவர் ‘சஸ்பெண்ட்’ ஆகிறார். அவரிடம் ‘முடிந்தால் என்னைப் பற்றிய உண்மைகளை இந்த உலகுக்குத் தெரிவித்துப் பார்’ என்று சவால் விடுகிறார் தாதாபாய்.
அந்த சவாலில் அமன் வென்றாரா? மீண்டும் அவர் முன்னே வருமான வரித்துறை அதிகாரியாக நின்றாரா? இக்கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது ‘ரெய்டு 2’வின் மீதி.
விறுவிறு திரைக்கதை!
இத்திரைக்கதை முழுக்கவே 35 ஆண்டுகளுக்கு முன்னதாக நிகழ்வது போன்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதனை உண்மை என்று நம்புகிற வகையில் தங்களது பங்களிப்பைத் தந்திருக்கிறது தயாரிப்பு வடிவமைப்பாளர் ரீத்தா கொஷ், ஒளிப்பதிவாளர் சுதீர் குமார் சௌத்ரி கூட்டணி.
ஒரு கிளாசிக் திரைப்படம் காண்கிற உணர்வை ஏற்படுத்துகிறார் படத்தொகுப்பாளர் சந்தீப் பிரான்சிஸ்.
பின்னணி இசை வழியே ஒவ்வொரு காட்சியிலும் விறுவிறுப்பைக் கூட்டி, திரைக்கதையிலுள்ள பரபரப்பை சட்டென்று நமக்குக் கடத்துகிறார் இசையமைப்பாளர் அமித் திரிவேதி.
அமித், யோயோ ஹனிசிங், நுஸ்ரத் பதே அலிகான் உட்படச் சில இசையமைப்பாளர்களின் தனித்தனி பாடல்கள் படத்தில் உள்ள சிச்சுவேஷனோடு எளிதில் பொருந்தி நிற்கின்றன.
முதல் பாகத்தைப் போலவே இதிலும் அடிதடி இல்லாமல் ஹீரோயிசம் காட்டியிருக்கிறார் அஜய் தேவ்கன். அவரது ஜோடியாக, முதல் பாகத்தில் வந்த இலியானாவுக்குப் பதில் இதில் வாணி கபூர் நடித்திருக்கிறார். இரண்டு பேரின் உடல்வாகும் ஒரே மாதிரியாகத் தெரிவது அதற்கான காரணமாக இருக்கலாம். இருந்தாலும், நடிப்பில் பெரிய வித்தியாசத்தை உணர முடியாதது ஆச்சர்யம்தான்.
இதில் வில்லனாக வருவது நம்ம ஜெனிலியாவின் கணவர் ரித்தேஷ் தேஷ்முக். நல்லவன் போர்வையில் ஒரு கெட்டவன் என்கிற பாத்திர வார்ப்பை எளிதாகத் தூக்கிச் சுமக்கிறார்.
இந்த படத்தில் சில காட்சிகள் ‘க்ளிஷே’வாக இருக்கின்றன. லாஜிக் மீறல்கள் துருத்திக் கொண்டு தெரியும் வகையில் உள்ளன. முதல் பாகத்தில் இது போன்ற குறைகள் பெரிதாக வெளியே தெரியாது.
ஆனால், முதல் பாகத்தின் பெயரைக் கொண்டு இரண்டாம் பாகமான எளிதாக அந்த குறைகளைத் தாண்டியிருக்கிறது.
ஆதலால், அதற்கான பாராட்டுகளும் எதிர்மறை விமர்சனங்களும் ரிதேஷ் ஷா, ராஜ்குமார் குப்தா, ஜெய்தீப் யாதவ், கரண் வியாஸ் குழுவையே சாரும்.
இந்தப் படத்தில் ரயில்வே பணி வாங்கித் தருவதாகச் சொல்லி சிலரிடம் நிலம் வாங்கிக்கொண்டு மோசடி செய்ததாக, வில்லன் பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது போன்று சமகாலத்தில் செய்திகளில் அடிபடுகிற விஷயங்கள் இந்த படத்தில் உண்டு.
காலம், மனிதர்களின் அடையாளங்கள், பிரச்சனையின் தன்மையை மாற்றிக் காட்டினாலும், சில உண்மைச் சம்பவங்களே திரைப்படங்களின் கதைகளுக்கு அடிப்படை என்பதை ரசிகர்கள் கண்டுகொள்வார்கள். அதுபோன்ற வரவேற்பைப் பெறும் நோக்கோடு ராஜ்குமார் குப்தா உருவாக்கியிருக்கிற ‘ரெய்டு 2’ ஒரு விறுவிறுப்பான ஆக்ஷன் படம் பார்த்த எபெக்டை தருகிறது.
அதனை விரும்புபவர்கள் இப்படத்தைக் கண்டு ரசிக்கலாம்.
– உதயசங்கரன் பாடகலிங்கம்