’பழனியப்பா கல்லூரி’ திரைப்படம் வழியே தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகம் ஆனவர் நவீன் சந்திரா. இப்படம் 2007-ல் வெளியானது. பிறகு சரபம், பிரம்மன், கூட்டம், சிவப்பு படங்களில் நாயகனாகத் தொடர்ந்தவர், தனுஷின் பட்டாஸ் மற்றும் ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் படங்களில் வில்லனாகவும் மிரட்டினார். வெகுநாட்களுக்குப் பிறகு அவர் நாயகனாக நடித்திருக்கிற ‘லெவன்’ தற்போது தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது. இப்படம் தமிழ், தெலுங்கில் ஒரேநேரத்தில் வந்திருக்கிறது.
லோகேஷ் அஜில்ஸ் இயக்கியிருக்கிற இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். ரியா ஹரி, சஷாங், அபிராமி, திலீபன், ஆடுகளம் நரேன், ரித்விகா, ரவிவர்மா, அர்ஜய், கிரீதி தாமராஜு உட்படப் பலர் இதில் நடித்துள்ளனர்.
‘இது ஒரு த்ரில்லர் படம்’ என்றுணர்த்தியது ‘லெவன்’ ட்ரெய்லர். ஒரு சைக்கோ கொலையாளியைத் துரத்திச் செல்கிற போலீஸ் அதிகாரி ஒருவரின் வேட்கையைக் காட்டுவதாக அமைந்தது.
படமும் அப்படித்தான் இருக்கிறதா? இது தரும் திரையனுபவம் எத்தகையது?
’லெவன்’ கதை!
ஆறு பேர் கொலையானபிறகு, இந்த வழக்கில் துப்பு துலக்கி வந்த போலீஸ் அதிகாரி ரஞ்சித்குமார் (சஷாங்க்) ஒரு விபத்தில் சிக்குகிறார். அதில் பலத்த அடிபட்டு ‘கோமா’ நிலைக்குச் செல்கிறார்.
அதன் தொடர்ச்சியாக, இந்த கொலை வழக்கு உதவி ஆணையர் அரவிந்தனிடம் (நவீன் சந்திரா) ஒப்படைக்கப்படுகிறது.
வங்கிக் கொள்ளை உட்படச் சில குற்ற நிகழ்வுகளில் உடனடியாகச் செயல்பட்டு குற்றவாளிகளைப் பிடித்தவர் அரவிந்தன். அந்த நற்பெயரே இந்த வழக்கை அவர் கையாளத் துணை நிற்கிறது.
ஏற்கனவே இந்த தொடர் கொலைகளை விசாரித்து வந்த ரஞ்சித்குமாருக்கு உதவியாக இருந்த இன்ஸ்பெக்டர் மனோகர் (திலீபன்) அரவிந்தனுக்கு உதவிகரமாகச் செயல்படுகிறார்.
இந்த நிலையில், மேலும் இரண்டு பேர் இதே பாணியில் கொலை செய்யப்படுகின்றனர். ஆனால், கொலையான இடத்தில் கிடைக்கிற சில தடயங்கள் இறந்து போனவர்கள் அனைவருமே ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்கள் தான் என்பதை உணர்த்துகின்றன.
அதாகப்பட்டது, அவர்கள் அனைவருமே குறிப்பிட்ட பள்ளியில் படித்தவர்கள். அவர்களுடன் படித்த ஒரு நபர்தான் கொலையாளி என்பதும் விசாரணையில் தெரிய வருகிறது.
கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டு காலத்திற்குப் பிறகு, அவர்கள் அனைவரையும் தேடிக் கண்டறிந்து அந்த கொலையாளி வஞ்சம் தீர்க்க வேண்டிய காரணம் என்ன? அதோடு, அந்த நபர் இப்போது எங்கிருக்கிறார்?
இந்த கேள்விகளுக்குப் பரபரப்பான காட்சியமைப்புடன் பதிலளிக்கிறது ‘லெவன்’.
சிறப்பான ஒளிப்பதிவு!
படம் முழுக்க நவீன் சந்திரா இறுக்கமான முகத்துடன் வந்து போயிருக்கிறார். ’கொஞ்சம் பிசகினாலும் செயற்கைத்தனம் மேலோங்கி தியேட்டரில் ரசிகர்கள் கத்திவிடுவார்கள்’ என்கிற அபாயத்தைப் பல காட்சிகளில் எளிதாகக் கடந்து சென்றிருக்கிறார்.
அவரது ஜோடியாக இதில் தோன்றியிருக்கிறார் தயாரிப்பாளர் ரியா ஹரி. திடீரென்று திரைக்கதையில் ஏன் அப்பாத்திரம் வருகிறது என்பதற்கான பதில் பின்பாதியில் இருப்பதால், அதன் இருப்பும் முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால், அதற்கேற்ற திருப்தியை ரியா தரவில்லை.
இந்தப் படத்தில் திலீபன், ரித்விகா, ஆடுகளம் நரேன், அர்ஜய் உட்படச் சில தமிழ் கலைஞர்கள் உண்டு. இது போக சஷாங், கிரீதி தாமராஜு உட்படச் சில தெலுங்கு முகங்களும் உண்டு.
இவர்களைத் தாண்டி பிளாஷ்பேக் காட்சிகளில் அபிராமியும் ரவிவர்மாவும் தலைகாட்டியிருக்கின்றனர்.
இப்படிப் பார்த்து பார்த்து தமிழ், தெலுங்கு ரசிகர்களை ஒரேநேரத்தில் மகிழ்விக்கிற வண்ணம் இரு மொழி கலைஞர்களையும் திறம்படப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர் லோகேஷ் அஜில்ஸ். அதற்கேற்ப அவர்களது நடிப்பும் அபாரம்.
இந்த படத்தில் பெஞ்சமின், பிரான்சிஸ் எனும் இரட்டையர்களாக நடித்துள்ள சிறுவர்களும் நல்ல நடிப்பைத் தந்திருக்கின்றனர்.
இப்படத்தின் பெரும்பலம் ஒளிப்பதிவு. ‘இது ஒரு சீரியஸ் த்ரில்லர்’ என்பதை ரசிகர்கள் மனதில் ஆழப் பதியும் வகையில் அதனைக் கையாண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கார்த்திக் அசோகன். காட்சியின் தன்மையைச் சட்டென்று கடத்தும் வகையில் ஒளிப்பதிவு அமைந்திருப்பதோடு, கோரம் மற்றும் குரூரமான இடங்களைக் காட்ட வேண்டிய கட்டாயத்தையும் சிறப்பாக எதிர்கொண்டிருக்கிறது.
இது போக படத்தொகுப்பாளர் என்.பி.ஸ்ரீகாந்த், கலை இயக்குனர் பி.எல்.சுபேந்தர், ஸ்டண்ட் மாஸ்டர் பீனிக்ஸ் பிரபு, ஒலி வடிவமைப்பாளர் ராஜகிருஷ்ணன் எனப் பல தொழில்நுட்பக் கலைஞர்கள், ‘லெவன்’னை சிறந்த த்ரில்லர் ஆக மாற்ற உழைத்திருக்கின்றனர்.
பின்னணி இசை தந்திருக்கும் டி.இமான், ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்கள் திடுக்கிடும் ஒலியனுபவத்தைப் பெற வேண்டுமென்று நினைத்திருக்கிறார். சில இடங்களில் அது ’அதிகப்படியாக’ அமைந்திருக்கிறது.
பாடல்களைப் பொறுத்தவரை, முதல் முறை கேட்டவுடனே பிடித்துப் போகிற வகையில் தன் பங்களிப்பைத் தந்திருக்கிறார்.
இந்தப் படத்தின் கதையைப் புதிதென்று சொல்லிவிட முடியாது. ஆனால், அதனை ரசிகர்கள் ஏற்கிற வகையில் புதிய களமொன்றைப் பிடித்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ் அஜில்ஸ். அதில் இருக்கும் லாஜிக் மீறல்களை நாம் கண்டுகொள்ளாத வகையில் அல்லது கவனிக்காதவாறு அடுத்தடுத்த காட்சிகளைத் திரையில் ஓட விட்டிருக்கிறார்.
நாயகன் ஒரு சிறந்த ‘செஸ்’ ஆட்டக்காரர் என்பதைத் திரைக்கதையில் அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கும் லோகேஷ், அதன் வழியே பின்பாதியில் அப்பாத்திரம் திட்டமிடுகிற விஷயங்களை கிளைமேக்ஸில் விளக்கியிருப்பது ‘வாவ்’ சொல்ல வைக்கிறது.
தொடர்ச்சியாகச் சில முறை பார்க்கிறபோது ஆச்சர்யங்கள் அமிழ்ந்து சாதாரணமாக மாறுவதென்பது கமர்ஷியல் பட உள்ளடக்கங்களைப் பொறுத்தவரை பொதுவான ஒரு விஷயம். அதையும் மீறி, அப்படம் பல முறை காணத்தக்கதாக இருக்க வேண்டும். அப்படிச் சில குறைகளையும் மீறி, அவ்வாறு நாம் காண்கிற வகையில் ‘லெவன்’ தந்திருக்கிறார் லோகேஷ் அஜில்ஸ்.
இந்த கோடை காலத்தில் ரசிகர்களை ஈர்க்கிற திரைப்படங்களில் ஒன்றாக இப்படம் மாறியிருக்கிறது. லோகேஷ் அஜில்ஸ் & டீமுக்கு வாழ்த்துகள்!
– உதயசங்கரன் பாடகலிங்கம்