இன்றைய நடிகர்களுக்கு முரளி விட்டுச் சென்ற பாடம்!

நடிகர் முரளி. தமிழ்த் திரையுலகம் தந்த நடிப்புக் கலைஞர்களில் ‘வித்தியாசமானவராக’ அறியப்படுபவர்களில் ஒருவர்.

ஒரு நாயக நடிகரின் ‘கிராஃப்’ எத்தனை ஏற்ற இறக்கங்களைக் கண்டாலும், அதனைக் கடந்து வெற்றிகரமாக என்னென்ன வகையில் இயங்க முடியும் என்று காட்டியவர்.

ட்ரெண்ட் மாற்றங்களுக்கு ஏற்ப எப்படி வேண்டுமானாலும் தன்னை மாற்றிக் கொள்ள முடிந்தவர்களில் இவர் ஒரு சிறப்பான உதாரணம்.

வாரிசு அடையாளம்!

திரையுலகில் வெற்றிகரமாக இருக்கிற ஆளுமைகளின் வாரிசுகள், அதே துறையில் கோலோச்சுவது கடினம். ஆனால், அவர்களுக்கான அறிமுகங்கள் மிக எளிதாக நிகழும்.

அதனை நன்குணர்ந்து, அத்துறையின் நீள அகலங்களை முன்கூட்டியே அறிவது நல்ல பலனைத் தரும்.

இந்தியில் அமீர்கான், ஹ்ரித்திக் ரோஷன், ரன்பீர் கபூர் போன்றவர்கள் நாயகர்களாக அறிமுகம் ஆவதற்கு முன்னால் உதவி இயக்குநர்களாக, தங்களது தயாரிப்பு நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் தான்.

எண்பதுகளில் அதனை நடைமுறைப்படுத்திக் காட்டியவர் முரளி. பள்ளியில் பயிலும்போதே தனது தந்தை சித்தலிங்கையாவிடம் உதவி இயக்குநராக இருந்தவர்.

கேமிராவுக்கு முன்னும் பின்னும் சினிமாவுலகம் எப்படி இயங்குகிறது என்பதை அப்போதே தெளிவாகத் தெரிந்துகொண்ட காரணத்தால், புகழ் வந்தடையும்போது எப்படியெல்லாம் எதிர்கொள்ள வேண்டும் என்று அவருக்குத் தெரிந்திருந்தது. .

தந்தையின் இயக்கத்தில் ‘பிரேம பர்வா’ எனும் படத்தில் அறிமுகமாக இருந்தார். ஆனாலும் கெலுவின ஹெஜ்ஜே அவர் நடிப்பில் முதலில் வந்தது.

பிறகு பிலி குலாபி, அஜேயா, பிரேம கங்கே, தாயிகோட்ட தாலி, சம்பவாமி யுகே யுகே, அஜய் விஜய் என்று கன்னடத்தில் தொடர்ந்து நடித்தார்.

‘பூவிலங்கு’ வழியே தமிழில் அமீர்ஜான் இயக்கத்தில் அறிமுகம் ஆனார் முரளி. தொடர்ந்து இங்கேயும் ஒரு கங்கை, புதியவன், இளங்காற்று படங்களில் நடித்தவர், மணிரத்னம் இயக்கத்தில் ‘பகல் நிலவு’ படத்தில் நடித்தார்.

கீதாஞ்சலி, மண்ணுக்குள் வைரம், வண்ண கனவுகள், தங்கமணி ரங்கமணி, நினைவு சின்னம், பாலம், புது வசந்தம், நம்ம ஊரு பூவாத்தா என்று வழக்கத்திற்கு மாறான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வெற்றிகளை அள்ளினார்.

தொண்ணூறுகளுக்குப் பின்னர் முரளிக்கென்று தனி அடையாளத்தையும் தனிப்பட்ட ரசிகர்களையும் தந்த திரைப்படம், இயக்குநர் கதிரின் ‘இதயம்’. அதில் அவர் நடித்த ராஜா பாத்திரம் தமிழ் சினிமா வரலாற்றில் இடம்பெறுகிற நாயக பாத்திரங்களில் ஒன்று.

சாமி போட்ட முடிச்சு, தங்க மனசுக்காரன், சின்ன பசங்க நாங்க, என்றும் அன்புடன், மணிக்குயில், அதர்மம், என் ஆசை மச்சான், சத்தியவான், பூமணி, காலமெல்லாம் காதல் வாழ்க, பொற்காலம், காதலே நிம்மதி, தினம்தோறும், கனவே கலையாதே, இரணியன், வெற்றிக்கொடி கட்டு என்று பல வெற்றிப்படங்களை அந்த காலகட்டத்தில் தந்தார்.

தனி ‘பார்முலா’!

ஆண்டுக்கு சராசரியாக ஐந்து அல்லது ஆறு படங்களில் நடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் முரளி.

ரொமான்ஸ், காமெடி, ஆக்‌ஷன், ட்ராமா என்று ஒவ்வொரு வகைமையையும் சார்ந்து கதைகளைத் தேர்ந்தெடுத்து, ஒரு ஆண்டில் ஒன்றுக்கொன்று வித்தியாசமான படங்களைத் தருவதை ஒரு ‘பார்முலா’வாக செயல்படுத்தி வந்தார்.

எண்பதுகள் முதல் 2000-வது ஆண்டு வரையில் அவர் நாயகனாக நடித்த படங்களை உற்று நோக்கினால் அதனை உணர முடியும்.

போலவே, பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் அல்லது தயாரிப்பாளர்களின் படங்களில் மட்டுமே நடிப்பேன் என்ற நிலைப்பாட்டை அவர் எந்தக் காலத்திலும் கொண்டிருந்ததில்லை.

சில நேரங்களில் அவர் நடித்த படங்கள் பாதியில் நின்று போயிருக்கின்றன. சில படங்களின் வெளியீடு தாமதமாயிருக்கின்றன.

உன்னுடன், தேசிய கீதம், ஊட்டி, குறும்புக்காரன், இரவு சூரியன் என்று வழக்கத்திற்கு மாறான திரையனுபவத்திற்காகவே அவற்றை இன்றும் ரசிக்கிறவர்கள் உண்டு.

2000ஆவது ஆண்டுக்கு பிறகு, தனி நாயகனாக நடிக்கிற படங்களை விடப் பிற நட்சத்திரங்களோடு சேர்ந்து நடிக்கிற கதைகளுக்கு முக்கியத்துவம் தந்தார் முரளி.

‘புது வசந்தம்’ காலத்திலேயே அதனைச் செய்தவர் என்பதால், அவரது முடிவு பெரிதாகக் கண்டுகொள்ளப்படவில்லை.

சொன்னால்தான் காதலா, ஆனந்தம், சமுத்திரம், அள்ளித்தந்த வானம், கடல் பூக்கள், சுந்தரா டிராவல்ஸ் போன்ற படங்கள் அதற்கான உதாரணங்களாகத் திகழ்கின்றன.

இந்தப் படங்களில் இதர நாயகர்களோடு முரளி இணைந்து நடிக்கத் தயாராக இருந்தது இன்றைய நடிகர்களுக்கான பால படங்களில் முதன்மையானது.

இன்று பல நடிகர்கள் தங்களைத் தாங்களே கிண்டலடித்துக் கொள்கிற படங்களில் நடிக்கின்றனர்.

அதர்வா நாயகன் ஆன ‘பாணா காத்தாடி’யில் இதயம் பட நாயகனாகவே ‘கௌரவமாக’த் தலைகாட்டியிருந்தார் முரளி. அதுவே அவரது கடைசி படமாக அமைந்தது தமிழ் ரசிகர்களின் துரதிர்ஷ்டம்.

‘தினம்தோறும்’ படக் கதையைத் தான் முரளியைச் சந்தித்த முதல் நாளன்றே சொல்லி, அந்த படத்தில் அவரை நடிக்க வைக்க ஒப்புதல் பெற்றவர் இயக்குநர் நாகராஜ்.

அன்றைய தினம் பகலில் அவருக்கு அறிமுகம் ஆனவர், இரவில் நடந்த ஒரு படத்தின் படப்பிடிப்புக்கு இடையே அதன் கதையைச் சொல்லியிருக்கிறார்.

அந்த சூழலில் அவர் அந்த கதையைக் கேட்டதும், உடனடியாக ஒரே மாதத்தில் படப்பிடிப்புக்குத் தயாரானதும் தன்னால் மறக்க முடியாது என்று ஒரு பேட்டியில் நாகராஜ் கூறியிருந்தார்.

தனுஷ் நடித்த ‘காதல் கொண்டேன்’ கதையை முதலில் ஓகே சொன்னவர் நடிகர் முரளி. ‘காதலாகி’ என்ற பெயரில் அது படமாக வருவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் நின்றுபோனது.

இது போன்று எத்தனையோ புதுமுக இயக்குனர்களுக்கு முகவரி தந்தவர் முரளி. ஆனால், இன்று பல நாயகர்கள் ஏற்கனவே படம் இயக்கி வெற்றி பெற்றால் மட்டுமே வாய்ப்பு தருவதில் உறுதியாக நிற்கின்றனர்.

அந்த முதல் பட வெற்றியைத் தரவும் ஒரு நாயகன் வேண்டும் என்ற சிந்தனையைக் கொண்ட ஒரு சிலரில் முரளியும் ஒருவர்.

இப்படிப் பல சிறப்புகள் முரளிக்கு உண்டு. இன்று அவரது பிறந்தநாள். தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட 25 ஆண்டு காலம் தொடர்ந்து இயங்கிய அவர், தன்னுடன் பணியாற்றிய எத்தனையோ பேரிடம் நன்னினைவுகளை விட்டுச் சென்றிருக்கிறார்.

தான் நடித்த படங்களின் வழியே ரசிகர்களிடம் தனக்கான அபிமானத்தைக் குன்றாமல் இருக்கச் செய்திருக்கிறார்.

இப்படி முரளி பெற்ற பல வெற்றிகள் முதலிடம், இரண்டாமிடம் குறித்த எந்தக் கவலையுமின்றி தொடர்ந்து நடிப்பதே குறிக்கோளாகக் கொண்டவர்களுக்கான ‘உற்சாக’ டானிக்..!

– மாபா

 

Comments (0)
Add Comment