தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் அனுராதா ரமணன். புதுமைக் கண்ணோட்டத்துடன் கூடிய முற்போக்குச் சிந்தனை எழுத்தைத் தந்தவர்.
சிறை, கூட்டுப் புழுக்கள், ஒரு மலரின் பயணம், நாளைக்கு நேரமில்லை, ஒரு வீடு இருவாசல், நித்தம் ஒரு நிலா, முதல் காதல் உள்பட பல நாவல்களையும், பல குறுநாவல்கள், பற்பல சிறுகதைகளையும் படைத்துள்ளார்.
தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் இவரது படைப்புகள் வெளியாகிச் சிறப்பு பெற்றிருக்கின்றன.
ஒரு ஓவியக் கலைஞராகத் தனது பணியைத் தொடங்கிய அனுராதா தொடக்கத்தில் முக்கியமான இதழ்களில் வேலை தேட முயற்சித்தார். ஆனால், அவரது முயற்சிகள் பலனளிக்கவில்லை.
அனுராதாவின் படைப்புகள் நன்றாக இருப்பதை அறிந்து ’மங்கை’ இதழாசிரியர் அவரைப் பணியில் சேர்த்துக் கொண்டார். 1977-ல் மங்கை இதழ் மூலமாகத் தனது எழுத்துலகப் பணியைத் தொடங்கினார் அனுராதா.
இலக்கியப் பணி மட்டுமின்றி விவாகரத்துக் கோரும் தம்பதியருக்கு சேர்ந்து வாழ ஆலோசனை வழங்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தார்.
30 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 800 புதினங்களும் 1,230 சிறுகதைகளும் எழுதியுள்ளார். அவரது கதைகள் பெரும்பாலும் குடும்பத்தையும் அன்றாட நிகழ்வுகளையும் மையமாகக் கொண்டிருந்தன.
சிறை, கூட்டுப்புழுக்கள், ஒரு மலரின் பயணம், ஒரு வீடு இருவாசல் ஆகியவை திரைப்படங்களாக உருவெடுத்து வெற்றியும் பெற்றன.
பாசம், புன்னகை, அர்ச்சனைப் பூக்கள், பன்னீர் புஷ்பங்கள், கனாக்கண்டேன் தோழி உள்ளிட்டவை தொலைக்காட்சி நாடகங்களாகப் புகழ் பெற்றவையாகும்.
அவரது சிறுகதை ’சிறை’, சிறந்த சிறுகதைக்கான தங்கப்பதக்கம் வென்றது. இந்தச் சிறுகதை அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது.
கூட்டுப் புழுக்கள், மலரின் பயணம், ஒரு வீடு இருவாசல் ஆகிய புதினங்களும் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் திரைப்படமாக எடுக்கப்பட்டன.
அவற்றுள் கே. பாலசந்தர் இயக்கிய ‘ஒரு வீடு இரு வாசல்’ திரைப்படம் பிற சமூக சிக்கல்கள் மீதான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதினை 1991இல் பெற்றது.
இவரது கதையைக் கொண்டு 1988-ல் வெளியான ‘ஒக்க பாரிய கதா’ என்ற தெலுங்குத் திரைப்படம் ஐந்து நந்தி விருதுகளை வென்றது.
1978-ம் ஆண்டு சிறுகதைகளுக்கான போட்டியில் வென்று எம்.ஜி.ஆரிடம் தங்கப்பதக்கம் பெற்றார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சிறந்த தேசிய சமூகநல எழுத்தாளருக்கான ராஜீவ் காந்தி விருதும் பெற்றார்.
1947-ம் ஆண்டு தஞ்சாவூரில் பிறந்த அனுராதா ரமணன், நடிகரான தன் தாத்தா ஆர்.பாலசுப்பிரமணியத்தின் தூண்டுதலால் எழுத்தாளரானார். இவர் கணவர் பெயர் ரமணன். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உண்டு.
அனுராதா ரமணன் இறுதி ஆண்டுகளில் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதைத் தொடர்ந்து அடிக்கடி மருத்துவமனையில் பரிசோதனை செய்து வந்தார். திடீரென அவருக்குச் சிறுநீரகம் செயலிழந்தது. இதைத் தொடர்ந்து டயாலிசிஸ் செய்யப்பட்டது.
இந்த நிலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு 62வது அகவையில் மே 16-ம் தேதி மறைந்தார்.
பேராண்மைப் பெண்மணியான அனுராதா ரமணனின் எழுத்துப்பணி என்றும் போற்றத்தக்கது.
- நன்றி : முகநூல் பதிவு