நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமான சந்தானம். இப்போது ஹீரோவாக நடித்து வருகிறார். கதையின் நாயகனாக மட்டுமே இப்போது நடிக்கும் சந்தானம், நகைச்சுவை வேடங்களை ஏற்பதில்லை. தன்னை சினிமாவில் அறிமுகம் செய்தவர் என்பதால் சிம்புவுடன், ஒரு படத்தில் காமெடி வேடத்தில் நடிக்க அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’. ‘தில்லுக்கு துட்டு’ திரைப்படத்தின் 4-வது பாகமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை, எஸ்.பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்துக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படத்தில் இடம் பெறும் ராப் பாடலில், ஸ்ரீனிவாச பெருமாளைப் போற்றும் புகழ்பெற்ற பக்தி பாடலான ‘ஸ்ரீனிவாச கோவிந்தா’ பாடலின் ஒரு பகுதி பயன்படுத்தப்பட்டிருப்பதே சிக்கலுக்கும், சர்ச்சைக்கும் காரணம்.
இந்தப் பாடல் வரிகளை நீக்க வேண்டும் என்று பல்வேறு இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தானமும், அந்தப் பாடலுக்கு தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளதோடு, எச்சரிக்கையும் எடுத்துள்ளது.
இந்தப் பாடலை படத்திலிருந்து உடனடியாக நீக்க வலியுறுத்தி திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் சந்தானம் மற்றும் டிடி நெக்ஸ்ட் லெவல் பட தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
இதனிடையே Kissa-47 பாடலை தடை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று அவசர வழக்காக கோடை விடுமுறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் பட தயாரிப்பு நிறுவனம் யூடியூபிலிருந்து ‘Kissa 47’ பாடலை நீக்குவதாகவும் படத்தில் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ரீநிவாசா கோவிந்தா’ பாடலின் டியூனை மியூட் செய்து படத்தை வெளியிடுவதாகவும் உறுதியளித்துள்ளது.
– பாப்பாங்குளம் பாரதி.