மனதளவில் நாம் எங்கே இருக்கிறோம்?!

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி முடிவுகள் வெளிவந்ததையொட்டி கடந்த சில நாட்களாக முகநூலில் நிறைய வாழ்த்துப் பகிர்வுகள். மகிழ்ச்சி.

ஊடகங்கள் எப்போதும் போல கருமமே கண்ணாக ரிசல்ட் வந்த நாள் முழுவதும் இதே வேலையாக இருந்தன. பெற்றோரை இழந்து தேர்வு எழுதச் சென்ற மாணவர் பெற்ற மதிப்பெண்,

பேருந்துக்கு ஓடிச்சென்று தேர்வெழுதிய மாணவர் பெற்ற மதிப்பெண், ஏழை மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுதல்,

தற்கொலை செய்து கொண்ட மாணவர் பெற்ற மதிப்பெண் – இப்படி அலசி ஆராய்ந்து செய்திகள் வெளியிட்டு நாள் முழுவதையும் தேர்வு – தேர்ச்சி – மதிப்பெண் இந்த வட்டத்தை விட்டு யாரும் அகலாதவாறு தொடர் செய்திகளை வெளியிட்டன.

ஆண்டுக்கு ஆண்டு தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது குறித்தும் பகிர்வுகள்.

ஒரு பக்கம் மதிப்பெண்கள் பெறுவது மட்டும் பெரிதல்ல என்று நீட்டி முழக்கி கல்வி முறையில் மாற்றம் வரவேண்டும் என்று பேசி வருகிறோம்.

மாணவர்களிடம் படிப்பு மட்டுமே முக்கியம் இல்லை, மற்ற திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள் என்று பிரசங்கம் செய்து நம்பிக்கை வளர்ப்பதாக எண்ணிக்கொண்டு ஆற்றுப்படுத்துகிறோம்.

ஆனால், END OF THE DAY… மதிப்பெண்கள் மட்டுமே எல்லாவற்றையும் நிர்ணயம் செய்கிறது என்ற இடத்திற்கு இந்தச் சமூகம் நகர்கிறது.

மதிப்பெண்களை வைத்துக் கொண்டாடும் மனநிலையை இங்கே யாருமே மாற்றிக்கொள்வதாக இல்லை.

இந்த சமூகத்தில் சாதிய மனோபாவம் எப்படி பிரிக்க முடியாதவாறு புற்றுநோய் போல பரவியுள்ளதோ அதே நிலையைத் தான் மதிப்பெண்கள் என்ற ஆழமான ஒரு நோய் பீடித்துள்ளது என்றால் அது மிகையல்ல.

அதற்கு ஒரே காரணம் எல்லா உயர்கல்வி வாய்ப்புகளும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே உருவாக்கப்படுகின்றன.

மருத்துவத்துக்கு நீட், ஆசிரியருக்கு டெட், டிகிரி சேர க்யூட்…. இப்படி வேறு வேறு பெயர்களில் நுழைவுத் தேர்வுகளும் இருக்கின்றன.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் உயர்கல்வி வாய்ப்புகள் அரசுக் கல்லூரிகளில் கிடைக்கிறதா என்று ஆராய்ந்து பார்த்தால் எத்தனை சதவீதம் என்பது கேள்விக்குறியே?!.

தனியார் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கும் இந்த சிக்கல் இருந்தாலும் ஒப்பீட்டளவில் அரசுப் பள்ளி குழந்தைகளால் கல்விக் கட்டணம் செலுத்துவது கடினமாகவே இருப்பதை நேரடியாக ஆண்டுதோறும் சந்திக்கிறோம்.

குறைவாக மதிப்பெண்கள் பெறும் குழந்தைகள் தனியார் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் கட்ட முடியாமல் திணறும் சூழல் பெருகி வருவதையும் தான் கண்டு வருகிறோம்.

விரும்பும் படிப்பைப் படிக்க இங்கே எந்தக் குழந்தைக்கும் வாய்ப்புகளே இல்லை எனலாம். மதிப்பெண்கள் மட்டுமே தேவைப்படுகிறது. அல்லது பணம் தேவைப்படுகிறது.

குறைவான மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் ஒருவேளை வசதி படைத்தவர்கள் என்றால் விரும்பியதைப் படிக்க கட்டணம் செலுத்த இயலுகிறது.

பணம் கட்ட முடியாது என்ற சூழலில் எந்தக் குழந்தைக்கும் விரும்பியதைப் படிக்க இயலுவதில்லை என்பதுதான் எதார்த்தம்.

என்றால் சிறு வயதிலிருந்தே அவர்களை நாம் அதற்கு தயார்படுத்தும் கல்வியை வழங்குகிறோமா என்பதும் ஆய்வுக்குரியதே.

சமீபத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டின் தேர்வு எழுதும் மாணவர்கள் உள்ள அறை ஒன்றை தொலைக்காட்சி செய்தியில் பார்க்க நேர்ந்தது. அதில் குதிரைக்குக் கடிவாளம் போல மாணவர்கள் தலையில் தலைக்கவசம் போன்ற ஒன்றை மாட்டியிருந்தனர்.

அவர்கள் தேர்வு எழுதும் போது அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திரும்பக்கூடாது என்பதுதான் அதன் பொருள்.

உலகில் மாணவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் தேர்வுகள் மதிப்பெண்கள் இவை தான் அவர்களது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் காரணிகளாக இருக்கின்றன.

ஆனால், நாம் மதிப்பெண்கள் பெரிதல்ல என்ற ஒரு பிம்பத்தைக் கட்டமைக்கும் வேலையைச் செய்வதாகத் தோன்றுகிறது.

தற்போது ஏழாம் வகுப்பு வரை தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டைப் பயன்படுத்தும் நாம் எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி என்ற கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தைப் பின்பற்றி மாணவர்களை அடுத்தடுத்த வகுப்புகளுக்கு அனுப்புகிறோம்.

அவர்களும் அந்தப் பாதையில் பயணித்து ஒன்பதாம் வகுப்பை எப்படியோ கடந்து விட, பத்தாம் வகுப்பில் 35 மதிப்பெண்கள் பெறுவதையே கல்வி ஆண்டின் நோக்கமாகக் கொண்டு ஆசிரியர்களும் மாணவர்களும் போராடும் நாட்களாக மாறிவிடுகின்றன.

இந்த நிலையில் பள்ளி இறுதி வகுப்பை முடிக்கும் போது அவர்கள் பெறக்கூடிய மதிப்பெண்களை வைத்து தான் அடுத்து அவர்கள் சேர்ந்து படிக்கும் உயர் கல்வி வாய்ப்புகள் இருக்கின்றன எனில், மாணவர்களின் தவறென்ன இருக்கிறது இங்கே!

ஒரு குழந்தை பிறந்தது முதல் 3 வயதிலேயே பள்ளிக் கல்வியை ஆரம்பித்து தனது 14 வயது வரையிலான கல்வி ஒரு கருத்தை விதைக்கிறது. மதிப்பெண்கள் பெரிதல்ல என்ற கருத்தே அது.

அதன் பிறகு அந்தக் குழந்தை மதிப்பெண் பக்கம் ஓட வேண்டியிருக்கிறது.

அந்தக் குழந்தை சந்திக்கும் சவால்கள் மன அழுத்தத்தை மட்டுமே உருவாக்கி சிக்கலை உண்டு பண்ணுகிறது. எனில் இந்த முரண்பாட்டைக் களைய வேண்டாமா?

எல்லாக் குழந்தைகளுக்கும் மதிப்பெண்கள் சாராது கல்வி வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். எனில் மாணவர்கள் புரிந்து கற்றுக்கொள்ளும் கல்வி முறையைக் கொண்டு வர வேண்டும்.

தேர்வு முறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும். பிலிப்பைன்ஸ் நாட்டைப் போலத்தான் நமது நாட்டிலும் பார்த்து எழுதுதலை மாணவர்கள் விரும்புகின்றனர்.

இந்த ஆண்டு பொதுத் தேர்வு பணிக்குச் சென்ற ஆசிரியர்களுக்கு நன்றாகத் தெரியும், மாணவர்களிடையே மினி ஜெராக்ஸ் கலாச்சாரம் ஊடுருவி வளர்ந்தது என்று.

எனில் தேர்வு முறைகளை மாற்ற வேண்டும் என்ற விவாதம் இங்கே உருவாக வேண்டும். புத்தகத்தைப் பார்த்து எழுதும் (Open Book System) கூட கொண்டு வரலாம்.

இப்படி நமது மனதளவில் மாற்றம் வந்தால் தான் மதிப்பெண்கள் அவற்றின் மதிப்பை இழந்து உண்மையான கல்வியின் தரம் வெளிப்படும்.

சு. உமா மகேஸ்வரி, பள்ளி ஆசிரியர், சமூக செயற்பாட்டாளர்.

Comments (0)
Add Comment