இளையராஜா. இந்தப் பெயர் தான் தமிழ் கூறும் நல்லுலகில் எத்தனை மாற்றங்களை நிகழ்த்தியிருக்கிறது.
திரையிசையை விரும்பாதவர்களும் கூட, இவரது பெயரைக் கேள்விப்படாமல், உச்சரிக்காமல், இவர் இசையைப் பற்றிய கருத்துகளை உதிர்க்காமல் இருந்தது கிடையாது என்கிற நிலையை உருவாக்கியவர் இளையராஜா.
தற்போது திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிற மோகன்லாலின் ‘துடரும்’ மலையாளப் படத்தில் ஒரு காட்சியில், ‘நீ இளையராஜா பேன் தானே’ என்பார் வில்லன் பாத்திரம் ஏற்ற பிரகாஷ் வர்மா.
அதற்கு, ‘அவரோட பாட்டை கேட்காம ஒரு நாள் எப்படி சார் முடியும்’ என்பார் மோகன்லால்.
கிட்டத்தட்ட இளையராஜாவின் ரசிகர்கள் என்று சொல்லிக் கொள்கிற எவரும் இதே போன்றதொரு கருத்தைப் பகிர்வது நிச்சயம். ஏனென்றால், இந்த வார்த்தைகளே இங்கு பலரது வாழ்க்கையாக இருக்கிறது.
விடியும்போது இல்லாவிட்டாலும் கூட, ஒரு இரவு முடிகிறபோது அவர்களுக்கான துணைகளில் பிரதானமானதாக இருக்கிறது ‘ராஜ’ இசை.
மிக எளிதாகத் தோற்றம் தருகிற ஒரு நான்கரை நிமிட பாடலின் வழியே, தான் கற்ற இசையின் ஒவ்வொரு துளியாகக் கோர்த்து கோர்த்து புதிய அனுபவத்தை ஒவ்வொரு முறையும் தருவது அவரது மேதைமையைப் பற்றி எவ்வளவோ பேசச் சொல்லும்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உட்படப் பல மொழிகளில் அவர் பல திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்;
பல படங்களுக்குத் தனது பின்னணி இசையால் உயிர் தந்திருக்கிறார்.
எத்தனையோ தனி ஆல்பங்களை கொடுத்து பலரது தனிப்பட்ட இசையார்வத்திற்கு தீனியிட்டு வருகிறார்.
அப்படிப்பட்ட இளையராஜா, திரையுலகில் அறிமுகமாகி இன்றோடு 49 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. ஆம், இதே நாளில்தான் 1976ஆம் ஆண்டு ‘அன்னக்கிளி’ வெளியானது.
ஆக, தனது திரைவாழ்வின் 50ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார் இளையராஜா.
ஆச்சர்யம் தரும் ராஜா!
‘அன்னக்கிளி’க்கு முன்னர் சலீல் சௌத்ரி உட்படச் சில இசையமைப்பாளர்களிடம் கிதார் வாசிப்பாளராகப் பணியாற்றியிருக்கிறார் இளையராஜா.
ஜி.கே.வெங்கடேஷின் உதவியாளராகர் இருந்திருக்கிறார். தன்ராஜ் மாஸ்டர் மற்றும் டி.வி.கோபாலகிருஷ்ணனிடம் முறையே மேற்கத்திய, கர்நாடக இசை மரபுகளைக் கற்றிருக்கிறார்.
‘அன்னக்கிளி’க்குப் பிறகு ரொம்பவும் பிஸியாக இயங்கியபோதும் அதனைத் தொடர்ந்திருக்கிறார் என்பது தனிக்கதை.
திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்திற்கு முன்னர் எத்தனையோ இயக்குநர்கள், தயாரிப்பாளர்களிடம் தனக்கு இசையமைக்க வாய்ப்பு தருமாறு இளையராஜா கேட்டிருக்கிறார்.
ஆனால், அந்த வாய்ப்பை பஞ்சு அருணாசலம் ‘அன்னக்கிளி’யில் தந்தார்.
தன் முன்னே வாய்ப்பு கேட்டு வந்து, மேஜையில் தாளம் போட்டுப் பாடல் பாடிய ராசையாவுக்காகப் புதிதாக ஒரு கதையை உருவாக்கினார். அந்த படமே ‘அன்னக்கிளி’.
பட வாய்ப்பு கிடைத்ததுமே, ‘நானும் கோவர்த்தனனும் இணைந்து ஒரு படத்திற்கு இசையமைக்கிற வாய்ப்பைப் பெற்றிருக்கிறோம்’ என்றிருக்கிறார் ராஜா. ஆனாலும், ‘இது இரண்டு பேருக்கான வாய்ப்பு இல்லை’ என்று மறுத்திருக்கிறார் பஞ்சு அருணாசலம்.
அவ்வாறு இளையராஜாவும் கோவர்த்தனனும் இசையமைத்த படம் ‘வரப்பிரசாதம்’. “கங்கை நதியோரம்” எனும் புகழ் பெற்ற பாடல் அதிலுண்டு.
அந்த நேரத்தில் ’ஏ.எம்.ராஜா என்று ஒரு இசையமைப்பாளர் இருப்பதால் இளையராஜா என்பது உனது பெயராக இருக்கட்டும்’ என்று பெயர் சூட்டியது பஞ்சு அருணாசலம் தான். இதனைப் பேட்டிகளில் பகிர்ந்திருக்கிறார் இளையராஜா.
ஒருவழியாக ‘அன்னக்கிளி’ பட வாய்ப்பைப் பெற்று பாடல் பதிவுக்குச் சென்றிருக்கிறார். தொடக்கத்திலேயே மின்சாரம் தடைபட்டுப் போக, ‘இனி எப்படி எல்லாம் சுபமாக இருக்கும்’ என்று சிலரது பேச்சுகளை எதிர்கொண்டிருக்கிறார்.
அதன்பிறகும், அவர் வெற்றி பெற்றார் என்பதுதான் இளைய தலைமுறை கவனிக்க வேண்டிய விஷயம்.
நாள் தவறாமல் காலையில் 7 மணிக்கு பிரசாத் ஸ்டூடியோவில் கம்போசிங் செய்ய இளையராஜா செல்வார் என்பது அன்றைக்கு திரையுலகில் பலர் அறிந்த ஒரு விஷயம்.
அந்த ஒழுக்கத்தைப் பல ஆண்டுகள் அவர் தொடர்ந்தது நிச்சயம் சாதாரண விஷயமில்லை. அந்த அர்ப்பணிப்பு கூட, அவரது இசை ராஜாங்கத்திற்கான ஒரு காரணம் எனலாம்.
இன்றிருக்கும் பல இசையமைப்பாளர்கள் அவரைப் பற்றிப் பகிரப் பல விஷயங்கள் வைத்திருப்பார்கள். அத்தனை பேரிடமும் அவர் ஏற்படுத்தியிருக்கிற தாக்கம் அத்தகையது.
சிறப்பான அறிமுகம்!
‘அன்னக்கிளி’ படம் ஒரு இளைஞனை இரண்டு பெண்கள் காதலிக்கிற கதையைக் கொண்டது. அந்த பாத்திர வார்ப்புகள் தெளிவுற அமைந்த காரணத்தால் திரைக்கதையும் சுவையானதாக இருந்தது.
தேவராஜ் – மோகன் இயக்கிய இப்படத்தில் சிவகுமார், சுஜாதா, படாபட் ஜெயலட்சுமி, எஸ்.வி.சுப்பையா, செந்தாமரை, மணிமாலா எனப் பலர் நடித்தனர்.
மச்சானைப் பார்த்தீங்களா மலைவாழை தோப்புக்குள்ளே, அன்னக்கிளி உன்னை தேடுதே, அடி ராக்காயி மூக்காயி, சொந்தம் இல்லை என நான்கு பாடல்களும் ரசிகர்களை சட்டென்று ஈர்த்தன. சிறப்பானதொரு அறிமுகமாக இளையராஜாவுக்கு இப்படம் அமைந்தது.
அதுவரை திரையிசையில் இருந்து வந்த நடைமுறையை மாற்றிப் பாடல் தொடங்குவதற்கு முன்பாக நீளமான இசைத்துணுக்கு, பல்லவியையும் சரணத்தையும் பிரிக்கிற வகையில் வேறுபட்டு ஒலித்த இடையிசை துணுக்கு, அவற்றை ஒன்றிணைக்கிற இசை லயம் என்று ஒவ்வொரு பாடலையும் அமைத்திருந்தார் இளையராஜா. பிற்பாடு அதுவே அவரது ‘ட்ரேட்மார்க்’ ஆனது.
மேற்கத்திய இசையையும் கர்நாடக இசையையும் சரியான விகிதத்தில் கலக்கிற வித்தையைக் கற்ற இளையராஜா, தனது வலுவான நாட்டுப்புற இசை பாரம்பரியத்தைக் கொண்டு பல்லாண்டுகள் இசை விருந்து படைத்தது வரலாறு.
இன்றும் அந்த மெனக்கெடலும் சீர்மையும் குறையாமல் தொடர்ந்து உழைத்து வருவதைத் தமிழிலும் தெலுங்கிலும் அவர் இசையமைக்கிற படங்களின் வெற்றிகள் சொல்லும்.
எது எப்படியாயினும், ‘இளையராஜா 50’ தொடங்கியாச்சு. இனி ‘ராஜ இசை’யைப் பல படிகள் மேலேறிக் கொண்டாடுகிற பொறுப்பு ரசிகர்களின் கைகளுக்கு வந்தாச்சு.!
– மாபா