“இரக்கம் உள்ளவர்கள் பாக்கியவான்கள்
அவர்கள் இரக்கம் பெறுவார்கள்’ (மத்.5;7)
– இதுவே ‘டூரிஸ்ட் ஃபேமிலி!
அதென்ன, ‘Tourist Family’? வழமையாக, ‘MRP Entertainment’ தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்ற வெற்றிப் பட வரிசையின் ஆங்கிலத் தலைப்புகளின் ஐதீகத்தில் – ’Good Night’, ‘Lover’ போல் – இதுவும் ஒன்றா? அல்லது, தமிழாகவே, இங்குள்ளவர்களால் மனம் கொள்ளப்பட்டிருக்கிற ஆங்கிலச் சொற்களில், இதுவும் ஒன்றா?
அதைத் தமிழ்ப்படுத்தி, ‘சுற்றுலாக் குடும்பம்’ என்று மனசுக்குள் சொல்லிப் பார்த்தாலும், அதுவும் இடிக்கத்தான் செய்கிறது; நெஞ்சுக்குள் ஒருவகைக் கமரலைத் தான் ஏற்படுத்துகிறது.
ஆனால், மக்கள், எந்தவித விகாரமுமின்றி, பக்கத்து வீட்டுக் காதலியின் அன்பு தவழும் அகச் சிரிப்பைப்போல், ’டுரிஸ்ட் ஃபேமிலி’ என்பதை – ‘குக்கர், மிக்ஸி’யைப்போல் – அப்படியே தங்கள் வீட்டுச் சமாச்சாரமாக ஏற்றிருக்கின்றனர்,
அதைக் கண்டு குதூகலித்திருக்கின்றனர் என்பது, இங்குத் திரைப்படம் பெற்றிருக்கிற ஏகோபித்த வரவேற்பிலும், ஆங்கில விளம்பரத்திலுள்ள ‘Tourist’, ‘Family’ என்கிற சொற்களைத் தமிழாகவே வாசிக்கப் பழகியிருக்கிற, இங்குள்ள மக்களின் மனநிலையிலும், அந்தத் தலைப்பு வசப்பட்டுக் கிடப்பது தெரிகிறது.
தமிழ்த் திரையுலகின் பிரபலமான – சிறந்த கலைஞர்கள் சசிகுமார், சிம்ரன் முதன்முறையாக இணைந்து நடித்திருக்கிற ஒரு நல்ல குடும்பப் படம்.
’குட் நைட்’ படத்தைத் தயாரித்த அதே நிறுவனத்தின் இன்னொரு தரமான வெற்றிப் படம் என்பவற்றைத் தாண்டியும், ஊடகங்கள், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ எனும் தலைப்பை, மக்களிடம் கைபிடித்துக் கூட்டிச் செல்லும் காரியத்தை, மிக அழகாகச் செய்திருக்கின்றன!
நடிகர் சசிகுமாரைப் பொருத்தவரையும், ’மந்திரமூர்த்தி’யின் ‘அயோத்தி’க்குப் பிறகு, அவருக்குக் கிடைத்திருக்கிற, இன்னொரு ‘திறப்பின் வாசல்’ இது! – ’அபிஷன் ஜீவிந்’தின் இந்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’!
’விலைவாசி இலங்கையில் இறக்கை கட்டிப் பறந்ததால், கடனில் குடும்பம் தவித்ததால், பிழைப்பதற்காக, ஈழத்திலிருந்து (ஸ்ரீலங்கா), தமிழகத்திற்குப் (இந்தியா) புலம்பெயர்ந்த ஒரு குடும்பம்’ என்றுதான் நமக்கும், விசாரிக்கும் காவல்துறைக்கும், அவர்களால் சொல்லப்படுகிறது முதலில்!
உண்மையில், அதற்குள் ஒரு ’காதல்’ கசமுசா இருந்திருக்கிறது என்பது, பாதிப் படத்திற்குப் பின்புதான், நமக்குத் தெரியவருகிறது.
ஈழத்தில் கல்லூரிப் படிப்பு முடித்து, வேலை தேடும் பக்குவத்திலிருந்த, அக் குடும்பத்தின் பெரிய மகன், நித்துஷன் என்கிற ‘நித்து’ (மிதுன் ஜெய்சங்கர்), அங்கு ஒரு பெண்ணிடம் காதல் வயப்பட,
காதலித்த பெண்ணின் பணக்காரப் பெற்றோர், ‘தர்மதாஸ்’ (சசிகுமார்) குடும்பத்திற்குச் ’சாவு பயம் காட்டிய’தால், உயிருக்குப் பயந்து, வேகவேகமாகத் தன் குடும்பத்தை இழுத்துக் கொண்டு,
தமிழ்நாட்டிலிருக்கும் மச்சான் பிரகாஷை (யோகிபாபு) மலைபோல் நம்பி – ’மச்சான் தயவிருந்தால் மலையேறிப் பிழைக்கலாம்’ எனும் சொலவடையாய் – கடல் தாண்டித் தமிழ் நாட்டிற்குக் கள்ளத்தோணியில் வந்திறங்கியுள்ளனர் என்பதும்,
கள்ளத்தனமாக உள்நுழைந்ததால், இங்கு, நித்து, அங்கு படித்த படிப்பிற்கான வேலைக்குச் செல்வதற்கும், அப்பாவை உட்கார வைத்துக் கஞ்சி ஊற்றிப் பார்த்துக் கொள்வதற்கும், இவனுக்கான கொடுப்பினை தள்ளிப்போனதால், அப்பா தர்மதாஸுடன் மூத்தவன் நித்து, முகந்திரிந்து இருந்திருக்கிறான் என்பதும் பிற்பாடுதான் நமக்குத் தெரியவருகிறது.
குழப்பங்கள் தெளிந்து, குடும்பத்தில் அனைவரும் குத்தாட்டம் ஆடி மகிழ்ந்து, சிறுவன் ’முல்லி’ (கமலேஷ் ஜெகன்), ‘Happy Family’ பனியன் அணிந்து, பூரிப்பில் மிதக்கையில்தான், இராமேஸ்வரத்தில், குப்பைத் தொட்டிக்குள் கிடந்த குண்டுவெடிப்பின்பேரில்,
மிகப் பொறுப்பாகத் தங்கள் நொறுக்குத் தீனிக் குப்பைகளை மூட்டைக்கட்டி, இராமேஸ்வரம் குப்பைத் தொட்டியில் போட்ட, ’தர்மதாஸி’ன் ஒளிப்படம், சிசிடிவியில் அரசல்புரசலாகப் பதிவாகி இருந்ததால்,
இந்தக் குடும்பத்தினர்மேல் சந்தேகப்பட்டு, சிபிஐ காவல்துறை, இவர்கள் வீடெடுத்துத் தங்கியிருந்த, ’சென்னை-மண்டலம் VIII; வட்டம் 35’ இலிருக்கும், கேசவ நகர் காலனியைச் சுற்றி வளைக்கின்றனர்.
வாழ வழிதேடிய அக்குடும்பம், சக ‘காலனி’ மனித ஜீவன்களிடம் அள்ளித் தெளித்த அன்பால் – ’இரக்கத்தை அவர்களை ருசிக்கப் பண்ணியதால்’ – ஒன்னுமண்ணாய், அங்குள்ள மக்களுடன் கலந்து, வாழ்வை ருசித்திருக்கின்றனர்.
‘நாங்களே அகதிகள். எங்களெ எதுக்கு சார் காப்பாத்துனீங்க?’ என்கிற தர்மதாஸிடம், அவர்களை அடையாளம் காட்டிப் பிடித்துக் கொடுக்கிற முனைப்பில், இராமேஸ்வரத்திலிருந்து வந்திருந்த காவல்துறை ஏட்டு பைரவன் (ரமேஷ் திலக்), ’காலனி’யில் அதுவரையும் நடந்ததை எல்லாம் மனசுக்குள் அசைபோட்டு,
திரும்பி, ‘யாருய்யா சொன்னா, நீ அகதின்னு?’ என்று சொல்லிக் கடக்கிற இடத்தில், ஒளிப்பதிவுக் கருவி மேலுயர்ந்து, தர்மதாஸ் திரும்புவதைக் காட்டுகிற இடத்தில், ’காலனி’க் கூட்டத்தின் பின்னால் உயர்ந்து இருந்து ஆசி கூறுவது, குருசடியின் சிலுவை!
’திக்கு எல்லாம் நம்ம ஊரே, ஏறி வாரும் நம்ம சாரே’ இசைப் பின்னணியில், ‘ஒரே வானம்; ஒரே பூமி’ பாடலின் இசை எழ, எங்கிருந்தோ நிகழ்ந்த ஒரு மாய சாகசமாய், அழுகை உள்ளுக்குள்ளிலிருந்து சுரக்கிறது.
அந்த மந்திரத்தைச் செய்தது இசையும் அந்தக் காட்சியும்! படம் பார்த்து முடித்த உச்சமகிழ்வின் வெளிப்பாடான ஆனந்தக் கண்ணீராய் இருந்தது அது!
இந்த இடத்தில், படத்தின் நெறியாளுநர் (அபிஷன் ஜீவிந்), ஒளிப்பதிவாளர் (அரவிந்த் விஸ்வநா தன்), இசைக் கலைஞர் (சீன் ரோல்டன்), கலை இயக்குநர் (ராஜ்கமல்),
படத் தொகுப்பாளர் (பரத் விக்கிரமன்), நடித்த நடிகர்கள் / தொழில் நுணுக்கர்கள் என்று, அத்தனைப் பேருக்கும், தயாரிப்பாளருக்கும் (பசிலியன் நாசரேத் + மகேஷ் ராஜ் பசிலியன்), எழுந்து நின்று கைதட்டத் தோன்றியது.
திரைப்படத்தின் முதல் சட்டகத்தில், வல்வெட்டித்துறையின் வெற்றுக் கடலைப் பார்த்து நடந்த ’தர்மதாஸ் குடும்பம்’, இறுதிச் சட்டகத்தில், உயிருள்ள அன்புசூழ் மனிதத் தலைகளின் உணர்வுக் கடலைப் பார்த்துத் ’தர்மதாஸ்’ திகைத்து நிற்பதோடு, அங்கு இசைக்கும், ‘ஒரே வானம்; ஒரே பூமி’ எனும் வரி, கடலின் அலையாய், எல்லோருடைய மனதிற்குள்ளும், உயர உயர ஒலி எழுப்பிக் கொண்டேயிருக்கிறது.
அன்பால் நேர்மறைக் கிரியை புரிய, மனம் கதைத்துக் கொண்டே இருக்கி றது. என்னவொரு விந்தை இது! நல்ல படங்கள் இப்படித்தான் மனசை அனத்தத் தொடங்கும்!
‘அன்புதான் மனித நீதி; அன்புதான் மனித சாதி’ என்பது, மோகன்ராஜனின் கவிதை வரிகளில் பட்டொளி வீசிப் பறக்கிறது.
‘கொடுத்தாலும் தீராது; எடுத்தாலும் குறையாது; தடுத்தாலும் தணியாத அன்புக்கு விலையேது? உனக்காக எனக்காகப் பூமி சுத்துதே! ஒன்றுசேர்ந்தால், போகும் தூரம் வரையும் பாதை இருக்குதே!’ – என்ன இயல்பான வரிகள்?
இப்படியான அர்த்தமுள்ள, அழகு ததும்பும், ஆத்மார்த்தமான வரிகளைக் கேட்டு எவ்வளவு நாட்களாகின்றன?
அவர்களின் புலம் பெயர் வாழ்வனுபவத்திலிருந்து, ஒற்றைக் கீற்றை மட்டும் பிரித்தெடுத்து, அதை, ஒய்யாரக் கலகலப்பாய்க் காட்டுகிறது, இந்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’!
‘புலம்பெயர் குடும்பம்’ என்றிருந்தால், அது, கசப்பான ஈழ விடுதலைப் போரை நினைவுபடுத்தி விடக்கூடும் என்பதால்கூட, அவர்கள் வாழ்வில் மறந்திருந்த ஒரு கசப்பை, தேன் மிட்டாய்ச் சுவையின் ஊடாகக் கதை சொல்லப் பார்த்திருப்பதனாலுங்கூட,
மகிழ் மனநிலையாய், அன்பாய் விரியும் பரவசமாய், மனித மகத்துவத்தைக் ‘கேட்கக் காதுள்ளவன் கேட்கக் கடவன்; பார்க்கக் கண்ணுள்ளவன் பார்க்கக் கடவன்’ என்பதான சத்தியத்தை, மக்களிடையே கொண்டு செல்வதற்காகவும் கூட, இது, ‘டூரிஸ்ட் பேமிலி’ ஆகியிருக்கலாம்.
இலங்கை அரசியலை, வேறொரு உளவுத் தளத்தில் பேசிய, ‘ஃபேமிலி மேன்’ தொடரினைப்போல், உயிர் மிரட்டலுக்குப் பயந்து, புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழ்க் குடும்பம் ஒன்றின் வாழ்வியல் ஆதுரங்கள், அச்சம் தவிர்ந்த அன்பாய் மடைமாற்றப் படுவதனாலுங்கூட, இது, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகியிருக்கலாம்.
இதுபோக, அந்தக் குடும்பத்தின் கடைக்குட்டி, ஆறாம் வகுப்புப் படிக்கிற முல்லி, தன் வகுப்பில், ‘நீ ஸ்ரீலங்காவா?… போட்லெ வந்தீங்களோ?’ என்கிற ஆசிரியரிடம், தன்னைப் பற்றிக் ’கதை’க்கையில்,
‘ஜெனி’க்கு (நாய்) உருட்டிய போங்க்குக் கதையைப் போலவே, இன்னொரு புதிய உருட்டாக, ’சேச்சேசே! நான் டூரிஸ்ட், நான் ஃப்ளைட்லெதான் வந்தேன்’ என்று, உருட்டல் தெரியாது மருட்டுகிற இடத்தில், தன்னை, அவன் ’டூரிஸ்ட்’ என்கிறான்.
அடுத்து, அவனின் தாய்மாமா பிரகாஷ், தங்கை வசந்தியிடம் (சிம்ரன்), ‘டூர் வந்திருக்கிறதா நெனைப்பு’ என்று பொருமுகிற இடத்திலும், ’டூர் (இன்பச் சுற்றுலா) – டூரிஸ்ட்’ என்பது போகிறபோக்கில் பகிரப்படுகிறது.
ஆயின், உண்மையில் இந்தப் படம், கோடை விடுமுறையில், நமக்கான இன்பச் சுற்றுலாவாக மனதில் நிற்கிறது என்பது மட்டும் நிஜம்!
மிரட்டலோ, உருட்டலோ, புலம்பெயர்வதற்குக் காரணம், 26 ஆண்டுக் காலம் (1983-2009), அங்கு நடைபெற்ற ’போர் முகம் – அது நிகழ்த்திய பொருளாதாரச் சீரழிவு’ என்பதைப் படம் சொல்லாமல் சொல்கிறது.
‘அகதி’ என்பதும், நமக்குக் கடந்த காலத்திலிருந்து, நம்முடனேயே தங்கிப் போயிருக்கிற, போர் நடவடிக்கைப் பாதிப்பில் உருவான ஒரு குறியீட்டுச் சொல்தான்!
மாவீரர் அசோகர், சாளுக்கிய யுத்தத்திற்குப் பின், அதன் பிணக் குவியலைக் கண்டு மனம் மாறி, ‘புத்தம் (இருளிலிருந்து ஒளி) சரணம் கச்சாமி’ என்றதைப் போல், அதற்கு எதிர்மறையாக, புத்தத்தை ஒளியிலிருந்து இருட்டுக்கு நகர்த்திய இலங்கை பௌத்த இன ஆதிக்கத்தின் முடிவுரையாய்,
‘தர்மதாஸ்’, அன்பை / இரக்கத்தை மட்டுமே இங்கு விதைத்து, அன்பையே/இரக்கத்தையே இங்கிருந்து அறுவடை செய்வதுதான் இந்தப் படம்!
விடுதலைப் போருக்குப் பின்னாலான பொருளாதாரச் சிதைவால், வாழும் வகைதேடி, அங்கு வாழ முடியாமல், கால்களைப் பரத்தி வைக்கிற தூரத்திலிருக்கிற தொப்புள் கொடி நாடான தமிழ்நாட்டிற்கு வந்து,
தங்கள் தமிழ் உறவுகளுடன், சக மனிதராய்க் கைகள் நனைத்து, வயிற்றில் பாலை வார்த்துவிட முடியுமென்கிற ’தர்மதாஸ்’ குடும்பத்தினரின் நம்பிக்கை தான், இந்தப் படத்திற்கான விதை!
அதற்குக் குறுக்கே நிற்கும் இன்னொரு நாட்டின் சட்டப் பூச்சாண்டித் தடைகளை, போலி ஆதாரங்களால், சிபிஐ அதிகாரி பல்வந்த்சிங் கண்ணிலும்கூட, எத்தனைச் சுலபமாயும் மண்ணைத் தூவிவிட முடியும் என்பது இன்னொரு தனிக் கதைக்கான விதை!
ஆனால், இங்கு, அது, பெரும் பேசுபொருள் ஆகவில்லை. அது, இந்தப் படம் கதைக்க வருகிற விஷயத்திற்குத் தேவையில்லாதிருக்கிறது.
இங்கு, காவல்துறை ஏட்டுவான பைரவன் முதற்கொண்டு (அவர் பையன் ஆகாஷுக்குப் பேச்சுவராத ஒரு குறை – குறையுள்ளவர்கள் நிறையழகின் அன்பால் திக்குமுக்காடிப் போகிறார்கள்), சென்னை கேசவ நகர் காலனி மக்கள் அத்தனைப் பேரும், ‘உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக் கடவன்’ என்பதற்கொப்ப,
மனிதாபிமானத்தால், அவர்கள் ஒவ்வொருவரும், அடுத்தவர்க்கான ஊழியக்காரனாய், தங்களைப் புதுப்பித்துக் கொள்வதென்பது, அசாதாரண எளிமையுடன் இங்கு நடந்துவிடுகிறது என்பதைப் படம், போகிறபோக்கில் பேசுகிறது.
’ஒரே வானம், ஒரே பூமி. இங்கு யாரும் யாருக்கும் அகதி இல்லை’ என்பதை அட்சர சுத்தமாகப் பதிவு செய்கிறது ’டூரி ஸ்ட் ஃபேமிலி’!
படத்தின் தொடக்கத்தில், இராமேஸ்வரத்தில், கள்ளத்தோணியிலிருந்து அக்குடும்பம் இறங்கி வரும்போது, காவல்துறை அவர்களை மடக்குகிறது.
’அங்குள்ள விலைவாசி உயர்வினால், அங்கு வாழ முடியவில்லை’ என்றும், ’வாழுவதற்காகத் தமிழ்நாட்டிற்கு வந்ததாகவும்’ அந்தக் குடும்பம் கூறுகின்றது.
ஏட்டும் இரக்கப்பட்டு, ‘என்ன சாபமோ? உங்களுக்கு இப்படி அடிமேல் அடியா விழுந்துகிட்ருக்கு… நீங்களும் எங்களெப் பார்க்கலெ. நாங்களும் ஒங்களெப் பார்க்கலெ’ என்கிற ’பாபநாச’ப் பரிதாபக் கணக்கில், காவல்துறை வண்டியிலிருந்து அவர்களை, நடுவழியில் இறக்கி விட்டுவிட்டுப் போகின்றார்.
அங்கிருந்து சென்னைக்கு – கேசவ நகர் காலனிக்கு – பயணப்படுகிறது அக்குடும்பம்!
ஷான் ரோல்டனின் இசை, அங்கிருந்தே அவர்களுடன், அவர்களின் கதையைக் கவிதையாக்கிக் குதுகலமாய்ப் பயணப்படத் தொடங்கிவிடுகிறது.
குடும்பத்தை வாழவைக்க, பிடிமானத்திற்காக ஏங்கித் தவிக்கும் அப்பிராணிகளாகக் கணவன் தருமதாஸும் அவன் இணைவி வசந்தியும்,
அவர்களின் முகம் பார்த்து வாழும் கலகலப்பான துடுக்குச் சிறுவன் உருட்டு முல்லியும், வாழ்வின் கசப்புகளை நெஞ்சினில் தேக்கியும், சுயமரியாதையைக் கவசமாகப் போர்த்தியும், குடும்பத்தை ’அப்பா’வாய் நேசிக்கும் அவன் அண்ணன் நித்துவும்!- இதுதான் அந்தக் குடும்பம்!
குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவர் கதாபாத்திரத்திற்கும், படத்தில் பங்குபெறும் அனைத்துப் பாத்திரங்களுக்கும், மிகப் பொருத்தமான நடிக, நடிகையரையே தேர்வு செய்திருக்கின்றனர் என்பது, படத்தைப் பார்க்கிற எல்லோராலும் நன்கு உணர முடிகிறது.
கனகச்சிதமாகக் கதைப் பாத்திரங்களின் உடம்பையும் உடுப்பையும், மனசையும் உணர்வையும், பாத்திரங்களை ஏற்றவர்கள், கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றனர்.
ஒவ்வொருவரைப் பற்றியும், தனித்தனியாக நிறைய எழுத வேண்டியிருக்கும். அத்தகைய அற்புதத்தைத் திரையில் நிகழ்த்திக் காட்டியிருக்கின்றனர்.
அவர்களின் ஊடாகவே, நாமும் திரைச் சட்டகத்தின் ஓரத்தில் அவர்களுடன் அமர்ந்து, அவர்களுடன் மௌன சாட்சியாய்ப் பங்கு பெற்றுக் கொண்டிருப்பதான உணர்வே, பல சமயங்களில் நமக்குக் கிடைக்கிறது.
’ஆல் தோட்ட பூபதி’ பாடலுக்கு அன்று ஆடிக் குதூகலப்படுத்திய, அதே சிம்ரனா இவர்? வாவ்!
மூத்தவனுக்கும் இளையவனுக்குமான இடைவெளியைக்கூட, என்ன அழகாக நம்மிடம் கடத்திச் செல்கின்றார்? ‘பிறகு என்ன நடந்தது?’ என்று கேட்கிற முல்லியிடம், அவன் அம்மா (சிம்ரன்), ’ஒன்றரை ஆண்டுகள் கழித்து நீதான் நடந்தாய்!’ – என்ன அழகான, பக்குவமான, பரவசப்படுத்தும் உரையாடல்!
உண்மையில், ’டூர்’ ஒன்று போய்வந்த குதூகலம்தான், படம் பார்த்து வெளிவந்த நமக்கு அனுபவமாகிறது.
படம் ஆரம்பிக்கிற முதல் சட்டகம், வல்வெட்டித்துறைக் கடற்கரை என்பதாய் எழுத்துப் போடப்படுகிறது. வடமராச்சியில் இருக்கிற ’வல்வெட்டித்துறை’ – ஈழத்தின் மிக முக்கியமான கடல் ஊர் என்பது, ஈழ நடவடிக்கைகளைப் புரிந்து கொண்டவர்களால் எளிதில் உணரப்படும்!
அது, விடுதலைப் புலிகளின் தலைவர் மாவீரர் பிரபாகரனின் ஊர்! கதை எதைப் பேசப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு, அந்த இடத்தில் எகிர ஆரம்பிக்கிறது.
அவர்கள் கள்ளத்தோணியிலிருந்து இறங்குகிற இடம், தனுஷ்கோடியின் எச்சமாய் நிற்கிற ’இராமேஸ்வரம்’ என்பது தெரிகிறது.
இது, போர்க் காலம் அல்ல; போர் முடிந்த நறநறப்புக் காலமும் அல்ல என்பதை, அங்கிருக்கிற ‘மோடி’ என்கிற காவி எழுத்தின் ஃப்ளக்ஸ், அதை ஒட்டியிருக்கிற குப்பைத்தொட்டி ஆகியன காட்சி வடிவாய்க் காட்டி, நம்மைக் கடக்கின்றன.
இங்குதான், ’தர்மதாஸ்’ குப்பை மூட்டையைப் போடுகிறார் – இங்குதான் குண்டு வெடிப்பு நிகழ்கிறது.
இந்தச் சின்னச் சின்னக் குறியீடுகளில், கதையொன்று மண்டைக்குள் நகரத் தொடங்குகிறது.
அது, போர் முடிவுற்ற 15 ஆண்டுகளுக்கு உட்பட்ட, ஒரு பத்தாண்டுக் காலத்தின் மௌன அரசியலை, நமக்குச் சொல்லாமல் சொல்லிச் செல்கிறது.
அந்தக் காலத்தில், காவல்துறையிலும், மனிதாபிமானம் நிறைந்த காவலர் சிலரும் இருந்திருக்கின்றனர் என்பதை, ‘கைது செய்து வண்டியில் ஏற்றுமுன், குடிக்கத் தண்ணீர் வேண்டுமா’ என்று கேட்ட ’ஏட்டு’வின் ஈர மனசைக் குட்டிப் பையன் முல்லி நினைவுபடுத்துவதில் தெரிகிறது.
எல்லோருமே சிறுசிறு தவறுகளுடன் பொதுவில் நல்லவர்களாகவே இருக்கின்றனர்.
இன்றைக்கும் பொருந்திவரக்கூடிய, பல அரசியல் விமர்சனங்களைப் போகிறபோக்கில் வெள்ளேந்தியாகச் சொல்லிக் கடந்துபோவதும் இரசிக்கும்படியாகவே இருக்கின்றன.
வடக்கத்தி சிபிஐ அதிகாரி பல்வந்த் சிங்கின், ‘இந்தத் தமிழ் ஆளுங்க என்னச் சாகடிக்கிறாங்க!’ என்கிற வடக்கத்திக் கொதிப்பும், ’இப்ப நாங்க, எந்தத் தமிழ்லெ கதைக்கிறோங்றது பிரச்சனையா, இல்லெ, தமிழ்லெ கதைக்றதே பிரச்சனையா?’ என்று மார்ட்டின் (எம்.எஸ்.பாஸ்கர்), சிபிஐ காவல் அதிகாரி பல்வந்த் சிங்கிடம் வெடிப்பதும், எளிய உதாரணங்கள்!
’விலைவாசி உயர்ந்துவிட்டது, இருப்பதைக் கொண்டு வாழ முடியவில்லை’ என்பது மட்டுமே, ஈழ அரசியலாய்ப் படத்தில் வெளிப்படையாகப் பேசப்படுகிறது.
எதன்காரணமாய் அந்த நிலை என்கிற நவ அரசியல், அதனுள் நமக்குப் பாடம் நடத்தத் தொடங்கி விடுகிறது. இந்தக் கதைக்கு, அதுவே நமக்குப் போதுமானதாயிருக்கிறது.
அவரவர் வேலையை அவரவரே பார்த்துக்கொண்டு, அண்டை வீட்டாரிடம் முக மலர்ச்சியைக்கூட காட்ட எத்தனிக்காத வாழ்முறையைக் கொண்டிருந்த சென்னையின் கேசவ நகர் காலனிக்கு,
‘கடல் தாண்டி வந்தாலும் கண்ணுலெ கடலெச் சுமந்து வந்தோம்; புதுத்தேசம் போனாலும் வலியெ மறந்து வழியெக் கண்டோம்’ என்பதாய், புலம்பெயர்ந்து வந்து சேருகிறது அத்தமிழ்க் குடும்பம்!
எல்லாம் ‘கேட்’ போட்ட பெரிய பெரிய வீடுகள். தெருவில், ’குமரன் இஸ்திரிக் கடை’ப் பெட்டி ஒன்று துருத்திக் கொண்டு நிற்கிறது. அதையொட்டி ’குருசடி’ ஒன்றும் இருக்கிறது. இதுதான் அந்தக் காலனி!
அங்குப் பலதரப்பட்ட மக்கள் இருக்கின்றனர் – இந்துக் குடும்பம் இருக்கிறது; சீக்கியர் குடும்பம் இருக்கிறது; கிறித்துவக் குடும்பங்கள் இருக்கின்றன; இந்துவும் கிறித்துவமும் கலந்த கலப்பும் இருக்கிறது.
அதோடு, தர்மதாஸ் குடும்பம், அவர்கள் தமிழ்நாட்டில் தங்குவதற்கும் தருமதாஸின் வேலைக்கும் அத்தனைப் போலி ஆதாரங்களையும் அள்ளிக் கொண்டுவந்து ஏற்பாடு செய்துதரும் வசந்தியின் தம்பி பிரகாஷ்,
‘எண்ட்ட மொவனே’ ராகவன் (பகவதி பெருமாள்), அவர் மனைவி, அவரின் பெண் – ’குறள்’ (யோகலக்ஷிமி), ’ஓடிவந்து’க் காதல் திருமணம் செய்த ’குணசேகர்’ (இளங்கோ குமரவேல்), அவர் இணைவி ’கர்ஸி’,
எதிர் வீட்டிலிருக்கும் ஒண்டிக் கட்டைப் பணக்காரர் திருச்சி கறார் ரிச்சர்ட், அந்தக் காலனிவாசிகளாலேயே மட்டமானவனாகப் பார்க்கப்பட்ட ஒரு குடிகாரன் (அபிஷன் ஜீவிந்), அவன் அம்மா (பொற்கொடி),
சீக்கியர் குடும்பம், ஆசிரியர் குடும்பம், தாடிக்காரர் குடும்பம், காவல்துறை ஏட்டு பைரவன், சிபிஐ அதிகாரி பல்வந்த்சிங், இன்னும் சில காவல் துறையினர் –இவ்வளவு பேர்தான் மொத்தப் படத்திலும்!
கேசவ் நகர் காலனிக்குள்ளேயேதான் – அங்கிருக்கிற வீடுகளுக்குள்ளேயேதான், படம் பெரும்பாலும் நகர்கிறது.
இளமைக் காதலின் எத்துவாளித்தனம், அங்குக் காட்சியாய்க் கதைக்கப் பட்டு, சாதாரணமாய்க் கடந்து போகின்றது; இன்னொரு அன்பு, அங்கு கரை புரண்டு ஓடும் நதி யாய் அங்கேயே பிரவகிக்கிறது.
குறள், நித்துவிடம் சொல்கிறாள்,’ நீ என்னோட பாய் பிரெண்டா இருந்தா, கடல் கடந்து வரத் தேவையிருக்காது. ஏன்னா நீ ஏற்கெனவே கடல் கடந்துதான் வந்திருக்க’ என்கிற இடத்தில், அவர்களைச் சேர்த்துவைக்க நம் மனம் ஏங்கத் துவங்கி விடுகிறது.
பார்ப்பவர் மனசுக்கும் சேர்த்து அங்குச் சலவை நடக்கிறது. அன்பாய்ப் பிரசவமாகும் முதிய காதலின் இனிமை கீதங்களுக்கும், அதன் இழப்பின் வலி மீட்பிற்கும், அந்தக் ’காலனி’யிலேயே இடம் உருவாகியிருக்கிறது.
நினைவு மறந்துபோன – ’சாப்பிட்டியா’ என்பது தவிர, எல்லாமும் மறந்துபோன, ஒரு பொழுது, ‘தம்பி ஒன் பேரென்னப்பா?’ என்று தன் மகனின் பெயரையே மறந்துபோன, தன் அம்மாவைத் தாங்கிப் பிடித்திருந்த நிலையில், தன் அம்மாவும் காலமாகி, இல்லாமற்போன நிலையில், அந்த வலியில், வழி மயங்கிக் கதி கலங்கி மதுவுக்கு அடிமையான ஒருவனும் அங்கிருக்கிறான்.
’என்னப்பா ஆச்சு’ என்று, அவன் நெஞ்சத்தை வார்த்தையால் நீவிவிட ஆளில்லாத நிலையில், தர்மதாஸ்தான் அவனை எடுத்து மருத்துவனைக்குக் கொண்டு செல்ல உதவுகிறார். ‘தம்பி சாப்பிட்டியா?’ என்று அக்கறையாய் விசாரிக்கிறார்.
படத் தொகுப்பின் பரிபாஷையில், வார்த்தையாகவும், காட்சியாகவும், இசையாகவும், பாடலாகவும் கலந்து நிற்க, தன் உணர்ச்சிமிகு நடிப்பால் அந்தக் காட்சியை அதகளமாக்கி விடுகிறார் நடிகர் – நெறியாளுநர் அபிஷன் ஜீவிந்!
என்னுடைய ’தேவதாசிய சங்காரம்’ நாடகத்தில் இறுதியில் ஒரு பாடல் வரி வரும்: – ’’சுயநலமின்றிப் பொதுநலம் ஒன்றே / குணமாய்க் கொண்ட உத்தமரெல்லாம் – இந்தக் குலத்தைக் காக்கும் சாமிகள் என்போம்’ என்று!
அதையே அந்தத் திருந்திய பையன், கர்ஸியின் நினைவேந்தலில், தேவாலயத்தில், ‘எனக்குப் பெரிய அளவில் கடவுள் நம்பிக்கை இல்லை’ என்று பேசியிருந்த தர்மதாஸைக் கைகாட்டி,
’மனித வலியைப் புரிந்துகொண்டு, அதைக் களையக் கைகொடுப்பவன்தான் சார் கடவுள் – அந்தக் கடவுள், எனக்கு நீங்கதான் சார்’ என்கிறான்.
முதல் படத்திலேயே இதைச் சொல்ல அசாத்தியத் துணிச்சல் வேண்டும் அபிஷன் ஜீவிந்! உங்கள் வாயாலேயே அந்தக் கருத்து கதைக்கப்படுவது மிகு சிறப்பு! பாராட்டுகள்!
இந்தச் சிந்தனை அவருக்கு இருப்பதனால்தான், இந்தப் படத்தில் காட்டப்படும் எந்த வீடும், வழக்கமான சாமிப் படங்கள் சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் வீடுகளாய்க் காட்டப்படவில்லை.
அதற்குப் படத்தின் நெறியாளுநருக்கும், கலை இயக்குநருக்கும் நன்றி சொல்லவேண்டும்.
ஓரிடத்தில், குடிவந்திருக்கிற தங்கை வீட்டிற்குத் தேவையான தட்டுமுட்டுச் சாமான்களைப் பழைய கடையில் வாங்கிவந்து பிரகாஷ் கொடுக்கும்போது,
‘இது எங்க ஓனருடையது. அவரில்லாதபோது எடுத்திட்டு வந்த விநாயகர் போட்டோ’ (போட்டோ காட்டப்படுவதில்லை) என்று சொல்லுகிற இடத்தில் மட்டுமே, ’விநாயகர்’ பெயர் வருகிறது. அதுவும் திருடிக் கொண்டு வந்த படம் என்பதாய் ஐதீகக் கணக்கில் கரைந்து போய்விடுகின்றது.
ஆனால் சிபிஐ அதிகாரி வரும்போது, பூஜை அறையில் வசந்தி வேண்டிக்கொண்டிருக்கும்போது, அங்கு எரியும் குத்து விளக்கு மட்டுமே பிரதானமாகக் காட்டப்படுகிறது.
மார்ட்டின் வீட்டிலோ, கர்ஸி வீட்டிலோகூட ஏசுவின் படங்கள் எதுவும் மாட்டப் பட்டிருப்பதாய்க் காட்டப்படவில்லை. மார்ட்டின் நடவடிக்கைகளில், முகம் தூக்கிய ஒரு கறார்த்தனம் தெரியுமேயொழிய,
மனிதர்களைப் பாகுபடுத்திப் பார்க்காத, சமத்துவம் பேணும் ஒரு பண்பாடு அவரிடம் இருப்பதை, தர்மதாஸிற்கும் பிரகாஷிற்கும், குடிக்கக் ’கப்’பில் காப்பிக் கொடுக்கிற அழகில் காணமுடிகிறது.
மனித சமத்துவத்தையும், ஒற்றுமையையும், அன்பையும், உண்மையையும் பேசும் இந்தப் படத்தில், இந்தக் காட்சி மிக முக்கியமானது.
வருணாச்சிரமத்தை வம்பிற்கு அழைக்கக்கூடியது. அதனால்தான் அவரால், தர்மதாஸைக் கடவுள் என்று கூறிய அந்தத் ’திருந்திய பைய’னை, எந்த சங்கோஜமும் இன்றிக் கட்டிப் பிடிக்கவும் முடிகிறது.
எழுதி நெறியாளுகை செய்திருக்கும் அபிஷன் ஜீவிந்தின் முதல் படம் இது என்கிறார்கள். யாரிடமும் பணி செய்த அனுபவமும், அவருக்கு இல்லை என்கிறார்கள். அவருக்கு மிகக் குறைந்த வயது என்றும் கதைக்கிறார்கள்.
பெருமையாக இருக்கிறது இவற்றைக் கேட்பதற்கு – ஏனெனில், மிகவும் அனுபவப்பட்ட கையினால் நெய்த நேர்த்தியான படமாயிருக்கிறது இது!
உண்மையில் இன்றைய இளைஞர்கள், நம்மைப் பிரமிக்க வைக்கிறார்கள்; அண்ணாந்து பார்க்கவைத்து, மனதிற்குள் அசை போட வைத்து விடுகிறார்கள்.
அடிதடி சண்டை என்று படத்தில் எதுவுமில்லை;
ஆனால் ஒவ்வொரு கதாபாத்திரங்களின் மனசுகளும், சரசமும், சல்லிக்கட்டும் ஆடிக் கொண்டிருப்பது, அவரவர்களின் முகங்களில் தெரிகிறது.
அகத்தின் அழகு முகத்தில்தானே தெரியும்!
உருவாக்கியிருக்கிற ஒவ்வொரு திரைச் சட்டகத்திலும், அவ்வச் சட்டகத்திற்குள், அக்காட்சிக்குரிய சிறு நாடக மோதுகை ஒன்று, வடிவாய் நகைச்சுவை பொதிந்துக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது.
அதன் உச்சபட்சம் என்பது, தேவாலயத்தில் கர்ஸி அம்மையாரின் நினைவஞ்சலிக் கூட்டம்! பூக்கள் சொரிந்து கர்ஸியின் படம் அங்கு வைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொருவரகப் பேசுகின்றனர்.
’திருந்திய பைய’னின், கடவுள் விளக்கம் முடியவும், கூட்டமே அவன்மேல் மரியாதைகொண்டு, அவனை நோக்கி நகர்கிறது; ரிச்சர்ட் அவனை ஆழத் தழுவியிருக்கிறார்.
முல்லி, அவன் அப்பா தர்மதாஸிடம், ’இங்கெ வந்திருக்குற எல்லாருமே அந்தப் பாட்டியெவிட ஒங்களெத்தான் அதிகமாப் பேசுறாங்க. அதாம்ப்பா, அந்த எடத்துலெ பாட்டி போட்டோ மட்டும் இருக்கக்கூடாதுப்பா, ஒங்க போட்டோவும் இருக்கணும்’ என்கிறான்.
கண்களைத் துடைத்துக் கொண்டிருந்த கூட்டம், மிகப் பெரும் வெடிச்சிரிப்பிற்கு ஆளாகின்றது. இதையும் காட்சியாய் வைப்பதற்குப் பெரிய மனத் தைரியம் வேண்டும்.
எப்பொழுதும் இப்படியே சூதுவாதின்றிப் பேசிக் கொண்டிருக்கிற பையன் என்கிற ஒன்று என்பதால், இதை இயல்பாகக் கடந்து செல்ல முடிகிறது.
இன்னொன்று, அந்தப் பையன் பேசிய ‘நீங்கதான் சார் என் கடவுள்’ என்பதன், காட்சிக் குறியீடாக்கும் முயற்சி, முல்லியின் எளிய மொழியில்தான் கிடைக்கிறது என்பதாகும்!
ஒளிப்பதிவுக் கருவி, அந்தக் குடும்பத்தின் உறுப்பினர் எவருக்கும் தனித்த முக்கியத்துவம் கொடுத்துவிடாமல், குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில், பல்வேறு பரிமாணங்களில், பல்வேறு கோணங்களில், பல்வேறு கூட்டமைவுகளில் அவர்கள் அனைவரை யும் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு!
அதுபோலவே, அந்த காலனி மக்கள், இந்தக் குடும்ப உறுப்பினர்களுடன் இசைமைப் பொருத்தத்துடன் காட்சிப்படுத்தியிருக்கும் விதமும் சிறப்பு! அதனாலேயே அவர்கள் அத்தனைப் பேரும் மனதில் நிற்கின்றனர்.
அவர்களுக்குள் நிகழும் நாடகிய மோதுகைகளும், பல இடங்களில் மனதிற்குள் சித்திரங்களாய்த் தங்கிப் போகின்றன.
ஒவ்வொரு காட்சியிலும், ஒளிப்பதிவுக் கருவியால், கதாபாத்திர இருப்புகளின் கட்டுமானம், கவிதையாக்கப்படுவதாலும், படத்தொகுப்பு, சம்பவங்களின் விறுவிறுப்பைக் கோபுரத்தில் கொலு வைப்பதாலும்,
காட்சிகள் நகரும் தொனியில் இசைமை குழைந்திருப்பதனாலும், கதாபாத்திரங்களின் முகங்கள் பேசும் அரிச்சுவடிக்குள், அன்பு கலந்திருப்பதாலும், காட்சியைக் கலகலப்பாக்கி விடுகிற உரையாடல் பொழிவுகளாலும், ஒவ்வொரு காட்சிலும் சுவாரஸ்யம் நிறைந்து வழிகிறது.
ஒன்றைச் சொல்ல வேண்டும் – தர்மதாஸ் குடித்துவிட்டு வந்து சாப்பாட்டுத் தட்டைக் கிழே போட்டுக் குமைகிற வரைக்கும், அந்தச் சூழலின் தொனிக்குள் ஒன்றிக்கிடந்த மனசு, அதன் பிறகான அவரின் வெற்றிச் சிரிப்பின் அசைவுகளை, உடனே ஏற்றுக்கொள்ள ஏனோ மனசு தயங்கியது.
அவரையும், நெறியாளுகையையும் அப்படி நேசிக்கிற என்னால், சினிமாவாய்ப் பார்க்கிற சாதாரண உணர்வை, அந்த இடம் தந்துவிட்டது என்பதையும் சொல்லாதிருக்க முடியவில்லை.
இதற்குள் சோகம் இருக்கிறது; சுகம் இருக்கிறது! குறும்பு இருக்கிறது; குதூகலம் இருக்கிறது! அச்சம் இருக்கிறது; அன்பு இருக்கிறது! உரசல் இருக்கிறது; ஒட்டுதல் இருக்கிறது!
எல்லாவற்றிற்கும்மேல், மனதை மறைத்திருந்த வெறுமைப் பாசி விலகி, எல்லோருக்குள்ளும் மனித நேசிப்புப் பற்றிக்கொள்ள ஆரம்பிக்கிறது. இது மிக முக்கியமானது.
மத வெறுப்பு, சாதி வெறுப்பு என்று பாகுபாட்டை விதைத்து வரும் இற்றைச் சூழலில், வேறுபட்ட மனிதர்களிடம் நேசப்பாட்டை, கொடியின் தளிர்போல் இயல்பாகப் பற்றிப் படர வைப்பதற்கு இந்தப் படம் உதவுகிறது.
மனிதர்கள் யாரும் தனித்து இல்லை; மனிதாபிமானம் / அன்பு மட்டுமே அவர்களை ஒன்றிணைக்கும் ஆகப்பெரும் செல்வம் என்பதை,
‘வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக் கடவோம்’-(யோவான்,3;18) என்று மண்டையிலடித்துச் சொல்கிறது ’டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம்!
அகதிகளாய்ப் பார்க்காமல், அச்சம் தவிர்ந்து, ஈழ உறவுகளை, அன்புள்ளம் கொண்ட மனிதர்களாய், இங்குள்ள மக்கள் அவர்களைப் பார்க்கிற காலத்தில், காலமறிந்து வந்திருக்கிற சரியான படம்! வாழ்த்துகள்!
– பேராசிரியர் மு.இராமசுவாமி, நிஜ நாடக இயக்கம்.