மருங்காபுரி செல்லம்மாள் சிவபாக்கியம் என்கிற எம்.எஸ்.எஸ்.பாக்கியம் பற்றி அதிகமாக யாரும் அறிந்திருக்க மாட்டார்கள்.
திருச்சி அருகே உள்ள மருங்காபுரி ஜமீன் அரண்மனையில் நிர்வாகம் பார்த்த குடும்பத்தைச் சேர்ந்த பாக்கியம் சினிமாவில் அறிமுகமாகி நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
ஆந்திரா, கன்னடம், மலையாளத்திலிருந்து நடிகைகள் வந்து கொண்டிருந்தபோது தமிழ்நாட்டில் இருந்து நடிக்க வந்தவர்களில் முக்கியமானவர்.
நாடகங்களில் நடித்து வந்த பாக்கியம், ஜூபிடர் பிலிம்சில் மாத சம்பள நடிகையாக சேர்ந்து அவர் நடித்த படம் வித்யாபதி 1946-ம் ஆண்டு வெளிவந்தது. இந்தப் படத்தின் நாயகன் டி.ஆர்.ராமச்சந்திரன், நாயகி தவமணி தேவி. எம்.என்.நம்பியாருக்கு ஜோடியாக பாக்கியம் நடித்தார்.
மர்மயோகியின் இந்தி ரீமேக்கிலும் நடித்தார். திரைப்படங்கள், நாடகங்கள் நடித்த காலத்திலும் வானொலி நாடகங்களில் தொடர்ந்து நடித்தவர் எம்.எஸ்.எஸ்.பாக்கியம்.
1950-1970-களில் தமிழ்ப் படங்களில் தம் திறமையினைத் தடம் பதிப்பித்த இவர், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நகைச்சுவை மற்றும் வில்லியென மாறுப்பட்ட கதாபாத்திரங்களிலும் தனது திறமையை நிரூபித்துக் காட்டியவர்.
இவர் காரைக்குடி வைரம் அருணாச்சலம் செட்டியார் நடத்தி வந்த ‘ஸ்ரீ ராம பால கால வினோத சபா’ என்ற நாடகக் குழுவில் நடித்து வந்தவர்.
இதே நாடகக் குழுவில்தான் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன், நவரசத் திலகம் ஆர்.முத்துராமன், பழம்பெரும் நடிகர் ‘சட்டாம்பிள்ளை’ கே.என்.வெங்கட்ராமன், எம்.கே.முஸ்தபா மற்றும் நகைச்சுவை நடிகை மனோரமாவின் கணவர் எஸ்.எம்.ராமநாதன் போன்ற கலைஞர்கள் அப்போது நடித்து வந்தனர்.
சிங்காரி [1954], தூக்குத் தூக்கி [1954], மர்மயோகி [1951], அன்னை, சதாரம், ஏழைப் பங்காளன் [1963], பூமாலை [1965] ராஜா வீட்டுப் பிள்ளை [1969], அன்பே வா [1965], தாலி பாக்கியம், கருப்புப் பணம் [1967], முத்துச்சிப்பி [1968],
பார் மகளே பார் [1963], பூவும் பொட்டும், கண்ணன் என் காதலன் [1970], நடு இரவில் [1970], எதையும் தாங்கும் இதயம் [1962] போன்ற 100-க்கும் மேற்பட்ட படங்களில் இவர் தனது பங்களிப்பை நல்கியுள்ளார்.
- நன்றி : முகநூல்பதிவு