முதல்வரிடம் ஊடகவியலாளர்கள் முன்வைத்த கோரிக்கைகள்!

ஊடக ஆசிரியர்களுடன் தமிழக அரசு நடத்திய சந்திப்பு நல்ல முன்னெடுப்பு என பாராட்டியுள்ளார் ‘புதிய தலைமுறை டிவி’ ஆசிரியர் சமஸ். அவர் பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ள குறிப்பு இதோ…

அரசு ஒவ்வொரு துறையிலும் சென்ற நான்காண்டுகளில் என்னென்ன பணிகளை ஆற்றி இருக்கிறது;

இந்திய அளவில் தமிழகம் ஒவ்வொரு துறையிலும் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை அந்தந்தத் துறை அமைச்சரும் செயலரும் இந்த நிகழ்ச்சியில் ஊடகத் துறையினரோடு பகிர்ந்துகொண்டனர்.

துறைவாரியாக தேசிய அளவில் தமிழகத்தின் இடத்தை ஒருசேர அறிந்துகொள்வது நல்ல விஷயமாக அமைந்தது.

தமிழ்நாட்டில் இப்படி ஒரு கூட்டம் நடப்பது இதுவே முதல் முறை. முக்கியமான அத்தனை அமைச்சர்கள், செயலர்களும் பங்கேற்றனர்.

வெற்றுப் புகழுரைகளுக்கு இடம் கொடுக்காமல், முழு புள்ளிவிவரங்களோடும், ப்ரொஃபஷனல் அணுகுமுறையோடும் கூட்டம் திட்டமிடப்பட்டிருந்தது பாராட்டுக்கு உரியது.

முதல்வர் அமைச்சர்கள் செயலர்கள் பேசி முடித்தவுடன் ஊடகர்கள் தரப்பில் இருந்து ஐந்து பேருக்கு பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது. நான் பேசுகையில் 4 கோரிக்கைகளை முதல்வரிடம் வைத்தேன்.

1. தமிழ்நாட்டு சாமானிய மக்கள் என்று எதிர்கொள்ளும் மிகப் பெரிய பிரச்சினைகளில் ஒன்று தெருநாயகள். சென்னையில் மட்டும் இரண்டு லட்சம் இருக்கின்றன; சென்ற ஆண்டு 5 லட்சம் பேர் கடிபட்டிருக்கின்றனர்.

கருத்தடுப்பு போன்ற மென்முறைகள் இதற்கு சரியான வழிமுறையாகாது. பிரச்சினையை அதன் தீவிரத்தோடு அணுக, சட்ட மாற்றத்துக்கு திமுக நாடாளுமன்றத்தில் இதுகுறித்து பேச வேண்டும்.

2. எவ்ளோ விஷயங்களில் தமிழகம் முன்மாதிரியாக இருக்கிறது. தமிழகம் பின்தங்கி இருக்கக்கூடிய ஒரு விஷயம்: நகர உருவாக்கத்தில் உயிர்த்தன்மை.

ஒரு நகரத்தில் சாமானிய மக்களுக்கான மிக அடிப்படையான உரிமை நடைபாதைகள். சென்னை இந்த விஷயத்தில் மிகவும் மோசமான இடத்தில் இருக்கிறது. அதேபோல, பெங்களூரு போன்று நிறைய – பெரிய பூங்காக்கள் நமக்கு வேண்டும்.

3. எல்லோருக்கும் எல்லாமும் என்னும் இலக்கை தமிழக அரசு கொண்டிருக்கிறது; ஆனால் தமிழகத்தின் நான்கு மண்டலங்களிலும் வளர்ச்சி சீராக இல்லை; குறிப்பாக மேற்கு வளர்கிறது; கிழக்கு தேய்கிறது.

காவேரி படுகையை உள்ளடக்கிய கிழக்கு மண்டலம் மாநிலத்தின் மக்கள்தொகையில் 25% பங்கை கொண்டிருக்கிறது; ஆனால் பொருளாதாரத்தில், உற்பத்தி மதிப்பில் 15% அளவுக்கு அது சுருங்கி இருக்கிறது.

சோழர் காலத்திலிருந்து ஈராயிரம் ஆண்டுகளாக தமிழகத்தின் பொருளாதாரத்தைத் தாங்கிய காவிரி படுகை உழவர்களை அரசு சரிய விட்டுவிடக்கூடாது. கிழக்கு மண்டலத்தைத் தூக்கி நிறுத்த சிறப்பு திட்டம் தேவை.

4. மூன்று கோரிக்கைகள் சாமானிய மக்கள் தரப்பிலானது என்றால், நான்காவது கோரிக்கை நான் சார்ந்திருக்கும் ஊடகத் துறை சார்ந்தது.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலகட்டத்தில், திரு. ஸ்டாலின் ஏராளமான ஊடகங்களுக்குத் தனிப்பட்ட பேட்டி அளித்திருக்கிறார் முதல்வர் ஆன பிறகு அப்படியான பேட்டிகள் தருவது அரிதாகிவிட்டது.

மீண்டும் அவர் பழைய இயல்புக்குத் திரும்ப வேண்டும்; ஊடகங்களுக்கு விரிவான பேட்டிகள் அளிக்க வேண்டும்.

அரசு சார்பில் நன்றி உரையாற்றிய நிதித்துறை செயலர் திரு. உதயசந்திரன் நான் முன்வைத்த கோரிக்கைகள் மூன்றையும் குறிப்பிட்டு பேசியதோடு, அரசு இது தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கும் என்றும் உறுதியளித்தார்.

நிகழ்ச்சி முடிந்ததும், உணவருந்தியபோது நடந்த உரையாடலில் என்னுடைய பேச்சில் குறிப்பிட்ட விஷயங்கள் மீதான அவருடைய அக்கறையை முதல்வர் வெளிப்படுத்தியது நம்பிக்கையை விதைத்தது.

ஆண்டுக்கு ஒரு முறை இத்தகு கூட்டத்தை நடத்தலாம். அரசுக்கும் மக்களுக்கும் இடையில் நல்ல விஷயங்களைக் கொண்டுசெல்ல இத்தகு கூட்டங்கள் மேலும் ஒரு பாலமாக அமையும்!

நன்றி: ‘புதிய தலைமுறை’ ஆசிரியர் சமஸ்

Comments (0)
Add Comment