எழுத்துலகின் ஏகலைவன் தோப்பில் முகமது மீரான்!

“சில நேர்காணல்களில் கேட்பார்கள், உங்கள் முன்மாதிரி எழுத்தாளர் யார் என்று?

எனக்கு அப்படி ஒருவரும் கிடையாது. என்னை யாருமே பாதித்ததில்லை. நான் நானாகவே இருக்கிறேன். மக்களுடைய கதையை அவர்களுடைய மொழியில் எனக்குத் தெரிந்தபடி எழுதுகிறேன்.”

– இந்த வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர் தோப்பில் முகமது மீரான்.

தேங்காய்ப்பட்டினத்துக் கடல்காத்துக்கு சொந்தக்காரர். மலையாளம் தாய்மொழியாக இருந்தபோதும் பிற்காலங்களில் தவிர்க்கமுடியாத தமிழாளுமையாக வந்த எழுத்துலகின் ஏகலைவன்.

35 ஆண்டுகளாக வெளியிடுவதைப் பற்றி கவலைப்படாமல் எழுதிக்கொண்டு மட்டுமே இருந்த ஒரு எழுத்தாளர் என்று கேட்டால் இவர் ஒருவர்தான்.

ஒருவேளை இவர் இறந்துவிட்டால் இவரைப்போல இன்னொருவர் வருவது சாத்தியமில்லை என்று இலக்கியவட்டங்கள் பேசிக்கொள்ளும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக தோப்பில் முகமது மீரான் (10.05.2019) காலமானார். நிச்சயம் இது எழுத்துலகுக்கு ஒரு ஈடு செய்ய முடியாத இழப்புதான்.

கற்பனையால் கருத்தைக் கொலை செய்ய விரும்பாமல், சமுகத்தை உள்ளது உள்ளபடி காட்டும் எழுத்தாளர்களில் எண்ணப்படும் மிகச்சிலரில் ஒருவர் தோப்பில் முகமது மீரான்.

1999-ம் ஆண்டு இஸ்லாமிய இலக்கிய மாநாடு இந்தியாவில் நடந்தது. இந்த மாநாடு நடக்கும் முன்பே 1997-ம் ஆண்டு இந்தியாவின் சாகித்திய அகாடமி விருதை தன் “சாய்வு நாற்காலி” புதினத்துக்காக பெற்றிருந்தார்.

இந்தியாவில் ஒரு முஸ்லிம் வாங்கிய முதல் விருது இது என்பதும் கூடுதல் தகவல். அந்த மாநாட்டில் 35 பேருக்குப் பாராட்டு வழங்கப்பட்டது. அதில் ஐந்து பேர் கலாநிதிப் பட்டம் பெற்றவர்கள். அவர்கள் மூன்று பேர் மீரானின் நாவலை வைத்துத்தான் ஆய்வைச் செய்திருந்தார்கள். ஆனால் முகமது மீரான் எந்த விதத்திலும் பேசப்படவில்லை என்கிற மனக்குறையை வேடிக்கையாக கடந்துபோனார்.

இதுபோன்ற சம்பவங்களால் தனக்கான அங்கீகாரத்தை சமூகம் சரியாக தரவில்லை என்பதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருந்தவர் தோப்பில் முகமது மீரான்.

ஒரு கடலோரக் கிராமத்தின் கதை (1988), துறைமுகம் (1991), கூனன் தோப்பு 1993), சாய்வு நாற்காலி (1997), அஞ்சுவண்ணன் தெரு, குடியேற்றம் (2017) ஆகிய புதினங்களும், அன்புக்கு முதுமை இல்லை, தங்கரசு, அனந்தசயனம் காலனி, ஒரு குட்டித் தீவின் வரிப்படம், தோப்பில் முகமது மீரான் கதைகள், ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும் ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் இவர் படைப்புகளில் பெயர் சொல்லக்கூடியவை.

இதில் மூதாதையர்களது இரத்தம் பின் தலைமுறையில் எப்படிச் செயற்படுகிறது, பாலியல் ஒரு மனிதனை எப்படி ஆட்டிப் படைக்கிறது என்கின்ற இரண்டுக்கும் இடையில் இழையோடும் வாழ்க்கைமுறையை படம்பிடிக்கும் நாவல்தான் சாகித்ய அகாடமி விருது பெற்ற ‘சாய்வு நாற்காலி’.

நீங்கள் எழுத்தாளராக வேண்டுமென்றால் முதலில் உங்கள் ஊரிலிருந்து தொடங்குங்கள் என்கிற வேதமொழிக்கு விளக்கமாக வாழ்ந்தவர் மீரான்.

– நன்றி: நியூஸ் ஜே இதழ்

Comments (0)
Add Comment