அறநெறியே ஆட்சியின் வெற்றிக்கு அடிப்படை!

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 12

 ******

 “அறநெறி முதற்றே அரசின் கொற்றம்”

                    – புறநானூறு  55, 10.

திணை :  பாடாண்திணை

துறை : செவியறிவுறூஉ

பாடியோர் : மதுரை மருதன் இளநாகனார்

பாடப்பட்டோன் : பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்

 (இம்மன்னன் குறித்துச் சங்கப்புலவர்கள் பொன்னுரை – 2 இல் குறித்துள்ளோம்.)

கொற்றம் என்றால் வெற்றி என்று பொருள். அரசியலாட்சி என்றும் பொருள். ஆனால் அரசின் கொற்றம் என வருவதால் இங்கே அது பொருந்தாது. எனவே, அரசாட்சி எனச் சிலர் பொருள் தருவது சரியாகாது.

யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை ஆகிய நால்வகைப் படைகளையும் சிறப்பாக வைத்திருக்கும் மன்னனிடம், ‘இப்படைகள் உனக்கு வெற்றி தராது; அறநெறி ஆட்சிதான் வெற்றி தரும்’ எனப் புலவர் கூறுகிறார்.

இவ்வரிக்குப் பின்னர்,

அதனால், நமரெனக் கோல்கோ டாது,

பிறர்எனக் குணங் கொல்லாது,

ஞாயிற் றன்ன வெந்திறல் ஆண்மையும்,

திங்கள் அன்ன தண்பெருஞ் சாயலும்,

வானத்து அன்ன வண்மையும் மூன்றும்

உடையை ஆகி இல்லோர் கையற

நீநீடு வாழிய நெடுந்தகை!

என வாழ்த்துகிறார் புலவர்.

இவர் நம்மவர் என்று நடுவுநிலைமையிலிருந்து தவறாமலும், இவர் நமக்கு அயலார் என்று அவர் நற்பண்புகளை ஒதுக்கித் தள்ளாமலும், சூரியனைப் போன்ற வீரம், திங்களைப் போன்ற குளிர்ந்த மென்மை, மழையைப் போன்ற வண்மை ஆகிய மூன்றையும் உடையவனாகி, இல்லை என்பார் இல்லை என்னும்படி நீ நெடுங்காலம் வாழ்க! பெருந்தகையே! என்கிறார் புலவர்.

அறநெறியில் வாழ இவையும் இன்றியமையாமை என்பதால் இவற்றை வலியுறுத்துகின்றார் புலவர்

திருவள்ளுவர் ‘அறன் வலியுறுத்தல்’ என ஓர் அதிகாரமே வைத்துள்ளார். அவரைப் பின்பற்றி நாலடியாரிலும் அறன்வலியுறுத்தல் அதிகாரம் இடம் பெற்றுள்ளது.

திருவள்ளுவர் ‘இறைமாட்சி’ அதிகாரத்திலும் ஆட்சிக்கு அறநெறி தேவை என வலியுறுத்துகிறார்.

‘செங்கோன்மை’ அதிகாரத்திலும்,

வேலன்று வென்றி தருவது மன்னவன்

கோலதூஉங் கோடா தெனின்.  

(திருக்குறள், ௫௱௪௰௬ – 546)

எனத் திருவள்ளுவர் இதனையே வலியுறுத்துகிறார்.

வேல் தருவது வெற்றியல்ல என்றால் என்ன பொருள்? வெற்றிக்குக் காரணம் வீரப் படைகள் அல்ல என்றுதானே!

அறநெறியிலான செங்கோன்மைதான் உண்மையான வெற்றி என்கிறார் திருவள்ளுவரும்.

ஆள்வோர் மட்டுமல்ல. ஒவ்வொருவருமே, செல்வமோ, செல்வாக்கோ அவை தரும் சிறப்புகளோ வெற்றியல்ல; அறநெறியிலான வாழ்வே வெற்றி தரும் என்பதை உணர்ந்து அறநெறி வழுவாமல் வாழ வேண்டும்.

எனவே, நாம் அறநெறியே வெற்றி நெறி என வாழ்வாங்கு வாழ்வோம்!

  • இலக்குவனார் திருவள்ளுவன்
Comments (0)
Add Comment