பெருகிவளரும் நம்பிக்கை!

ஆஸ்திரேலியாவில்  கடந்த 2019-2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவு தந்த கோடைகால காட்டுத்தீ விபத்துக்குப் பிறகு மில்லியன் கணக்கான ஹெக்டேர் நிலங்கள் எரிந்து சாம்பலாயின. அப்போது மூன்று பில்லியன் விலங்குகள் இறந்துபோயின. அதில் கோலா கரடியும் அடக்கம்.

காட்டுத் தீ சம்பவம் நடந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நம்பிக்கையான செய்தி கிடைத்திருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் மீண்டும் கோலா கரடிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன என்று சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.

காடுகளில் பாதுகாப்பு முயற்சிகள் மற்றும் வாழ்விடங்களின் இயற்கை மீள் உருவாக்கம் ஆகியன கோலா கரடிகளின் எண்ணிக்கை உயரும் இந்த நேர்மறையான வளர்ச்சிக்கு உதவியுள்ளன.

இதன் மூலம் காடுகளின் பல்லுயிர்ச் சூழல் மேம்படுவதற்கான ஒரு நம்பிக்கை கிடைத்திருக்கிறது.

தெற்கு நியூ சவுத் வேல்ஸ் போன்ற தீவிபத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் செயல்படும் வனவிலங்கு சரணாலயங்கள் கோலா மறுவாழ்வில் முக்கிய பங்காற்றுகின்றன.

எடுத்துக்காட்டாக, காட்டுத்தீ விபத்துகளின்போது அதிக அளவு சேதத்தைச் சந்தித்த கோலா கரடிகள் மீட்டெடுக்கப்பட்டு, மீண்டும் அப்பகுதிக்கு அவை திரும்பியதாக டூதம்ப்ஸ் வனவிலங்கு அறக்கட்டளை தெரிவிக்கிறது.

வெப்ப இமேஜிங் ட்ரோன்கள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் கோலா கரடிகளின் எண்ணிக்கையைக் கண்காணிப்பதிலும் மதிப்பிடுவதிலும் உதவுகின்றன.

மேலும், அவை பாதுகாப்பு உத்திகளையும் எளிதாக்குகின்றன.

ஆஸ்திரேலிய மண்ணில் மீண்டும் கோலா கரடிகளின் எண்ணிக்கை உயர்வதற்கான அறிகுறிகள் தென்படுவது நம்பிக்கை அளித்தாலும், அதன் ஆயுளை உறுதிசெய்வதற்கான காலநிலை மாற்றம் மற்றும் சவால்களை எதிர்கொள்வதற்கு, வாழ்விட பாதுகாப்பின் அவசியத்தை சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள் வலியுறுத்துகின்றனர்.

– தான்யா

Comments (0)
Add Comment