அடுத்தடுத்த நாட்களில் நடந்த திமுக – அதிமுக உயர்நிலை கூட்டங்கள்!

கட்சியினருக்கு ஸ்டாலின், இபிஎஸ் போட்ட கட்டளை!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள சூழலில், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. திமுக அணியில் இப்போதுள்ள கட்சிகள் நீடிப்பது கிட்டத்தட்ட உறுதி. பாஜகவுடன், அதிமுக உறவை புதுப்பித்துள்ளது. இந்த அணியில் மேலும் சில கட்சிகள் சேரலாம்.

இந்த நிலையில் பிரதான கட்சிகளான திமுகவும், அதிமுகவும் அடுத்தடுத்த தினங்களில், தங்கள் உயர்மட்ட குழுக் கூட்டங்களை நடத்தி முடித்துள்ளன சென்னையில், வெள்ளிக்கிழமை அதிமுக செயற்குழுவும், சனிக்கிழமை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டமும் நிகழ்ந்தேறியுள்ளன.

விஜயை சீண்ட வேண்டாம்..

அதிமுக செயற்குழுவில் என்ன நடந்தது?

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அந்தக் கட்சியின் செயற்குழுக் கூடியது. அந்தக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

அவர் பேசியதன் சுருக்கம்:

“மாறுபட்டுள்ள அரசியல் சூழலால் பாஜகவுடன், அதிமுக கூட்டணி வைக்க வேண்டிய நிலை உருவானது – நிறைய யோசித்துத்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது – இரு தரப்பும் கூட்டணி சேர வேண்டியது காலத்தின் கட்டாயம் –பாஜக இல்லாத சூழ்நிலையில், சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்கும் என எதிர்பார்த்தோம் – கிடைக்கவில்லை.

நம் இலக்கும், எண்ணமும் ஈடேறவில்லை – இப்போது அதிமுக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணியால், திமுக கூட்டணியை வெல்ல முடியுமா என்பது சந்தேகமே – இந்த சந்தேகம் நம் கட்சியில் பலருக்கும் உள்ளது – அதனால் இப்போது அமைந்துள்ள அதிமுக அணியில் மேலும் பல கட்சிகளைச் சேர்க்க வேண்டும்.

விஜயின் தவெக உள்ளிட்ட சில கட்சிகளை இணைத்து, வலுவான கூட்டணியைக் கட்டமைத்து தேர்தலை எதிர்கொள்ளவே விரும்புகிறோம் – களத்தில் அதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. – எனவே விஜய் குறித்து அதிமுகவினர் விமர்சனம் செய்யக்கூடாது” என திட்டவட்டமாக அதிமுகவின் தேர்தல் நிலைப்பாட்டை தெரிவித்தார், இபிஎஸ்.

ஸ்டாலின் போட்ட உத்தரவு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் சனிக்கிழமை நடந்த திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், முதலமைச்சரும், கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

”தி.மு.க.வின், பலமே, அதன் குக்கிராமங்கள் வரை இருக்கும் கட்டுமானம் தான். இத்தகைய நிர்வாக கட்டமைப்பு, எந்தக் கட்சிக்கும் கிடையாது. அந்த கட்டமைப்பை, காலந்தோறும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறோம்; புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் வெற்றி கிடைக்கும்.

தமிழகத்தில் எப்படியாவது காலுான்றி விட வேண்டும் என பா.ஜ.க, நினைக்கிறது. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ., உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளைப் பயன்படுத்தி மிரட்டி, அனைத்து விதமான அச்சுறுத்தல்களையும் செய்து, அ.தி.மு.க.,வை பா.ஜ.க, அடக்கி விட்டது.

சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்டது. அமைச்சர்கள் இனி சென்னையில் இருப்பதை குறைத்துக் கொண்டு, அவரவர் மாவட்டங்களுக்குச் சென்று, அதிக நாட்களை செலவிடுங்கள்; தேர்தல் வேலையைத் துவங்குங்கள்.

வரும் சட்டசபைத் தேர்தலில், வேட்பாளர் யார் என்பதை கட்சித் தலைமை முடிவு செய்யும். வெற்றி பெறும் வாய்ப்புள்ளவர் யாரோ, அவர் தான் வேட்பாளராக நிறுத்தப்படுவார்; திறமை வாய்ந்தவர் மட்டுமே நிறுத்தப்படுவார். அவரை வெற்றி பெற வைக்க உழைக்க வேண்டியது, மாவட்டச் செயலர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளின் கடமை’’ என்று திமுகவின் தேர்தல் ஆயத்தங்களை விளக்கமாக எடுத்துரைத்தார், மு.க.ஸ்டாலின்.

– பாப்பாங்குளம் பாரதி

#முகஸ்டாலின் #திமுக #அதிமுக #பாஜக #எடப்பாடி பழனிசாமி #விஜய் #தவெக #இபிஎஸ் #mkstalin #dmk #admk #bjp #eps #edappadi #vijay #tvk #eps

Comments (0)
Add Comment