விவசாயியாக மாறிய இஸ்ரோ விஞ்ஞானி!

ஆர்கானிக் பேரீச்சையில் 15 லட்சம் வருமானம்!

பெங்களூருவில் இஸ்ரோ திட்டம் ஒன்றில் பணியாற்றிய திவாகர் சின்னப்பா, சட்டென முடிவெடுத்து விவசாயத்திற்கு வந்துவிட்டார். கர்நாடக மாநிலம் பேகூர் கிராமத்தில் பிறந்த அவரது தந்தையோ, தன் மகன் விவசாயம் பக்கமே வந்துவிடக்கூடாது என்று உறுதியாக இருந்தார். ஆனால் நடந்தது என்னவோ வேறு.

“பெங்களூரு நகரம் விரிவுபடுத்தப்பட்டதால் கிராமத்தை நாங்கள் இழந்தோம். எங்களுக்கு விவசாயம் என்பது நஷ்டமான தொழிலாக மாறியது.

விவசாயம் செய்வதற்காக நகரில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் நிலம் வாங்கினார் அப்பா. ஆனால் அங்கே செல்லவில்லை. நல்ல கல்விக்காக பெங்களூர் செல்லவே விரும்பினார்” என்கிறார் திவாகர்.

விவசாயப் பின்னணியை மறந்த அவர், உயர்கல்விக்குப் பிறகு பெங்களூருவில் இஸ்ரோ திட்டத்தில் விஞ்ஞானியாக சேர்ந்தார்.

ஒரு கட்டத்தில் அவரது தந்தை வாதநோயால் பாதிக்கப்பட்டதும், அவரை கவனிப்பதற்காக சொந்த கிராமம் செல்லவேண்டிய நிலை.

ஓர் ஆண்டு முழுவதும் அப்பாவைக் கூடவே இருந்து கவனித்துக்கொண்ட திவாகர், மீண்டும் நகரத்திற்குச் செல்ல விரும்பவில்லை. கிராமத்திலேயே தங்கிவிட்டார். அப்போது மசானபு புகுகோவின் புத்தகத்தைப் படித்தார். அந்த நூல் அவருக்குள் உற்சாகத்தை ஏற்படுத்தியது. உடனே அப்பா வாங்கிப்போட்ட நிலத்தைப் பார்க்கப் புறப்பட்டுவிட்டார்.

பின்னர், திவாகர் விவசாயத்தில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். உள்ளூரில் பிரபலமான பயிர்களை தவிர்த்துப் பாலைவனத்தில் விளையும் பேரீச்சை மரங்களை வளர்த்தார். இன்று அவருக்கு அதிலிருந்து ஏக்கருக்கு ஆறு லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது.

பெங்களூருவில் நடந்த விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்றபோது, அவரிடம் ஒரு தமிழக விவசாயி கொடுத்த சிறு பிரசுரம்தான் ஆர்கானிக் பேரீச்சை மரங்களை வளர்க்க உந்துதலை ஏற்படுத்தியது. ஆறு மாத போராட்டத்திற்குப் பிறகு அந்த விவசாயியைக் கண்டறிந்து தமிழ்நாட்டுக்கு வந்து சென்றார்.

“பாலைவனத்தில் மட்டுமே பேரீச்சை விளையும் என்பது தவறான கருத்து. பேரீச்சை விளைவதற்கு போதுமான ஈரப்பதமும் சூரிய ஒளியும் தேவைப்படுகிறது. எங்கள் பகுதியில் கோடையில் 38 டிகிரி வெப்பநிலை நிலவுகிறது” என்கிறார் திவாகர்.

நான்கைந்து ஆண்டுகளுக்குப் பிறகு திவாகர், பேரீச்சை பூப்பதை அறிந்தார். இன்று அவர் 2.5 ஏக்கர் நிலத்தில் 800 கிலோ பேரீச்சையை அறுவடை செய்கிறார். 5 டன்கள் கிடைக்கின்றன. ஒரு கிலோ விலை ரூ. 375. ஏக்கருக்கு அவர் 6 லட்சம் ரூபாய் வருமானம் பார்க்கிறார்.

“இளைஞர்கள் பலரும் பார்க்கும் வேலையை விட்டுவிட்டு விவசாயத்திற்கு வர நினைக்கிறார்கள். நல்ல விஷயம்தான். ஆனால் அதில் பல சவால்களும் தடைகளும் உண்டு என்பதை மறந்துவிடுகிறார்கள். விவசாயம் குறைந்த காலத்தில் அதிக லாபம் தரும் ரியல் எஸ்டேட் பிஸ்னஸ் கிடையாது” என்று அனுபவம் சொல்கிறார் திவாகர்.

நன்றி: திபெட்டர் இந்தியா

Comments (0)
Add Comment