நூற்புத் தொழில்: வாழ்வாதாரத்தைக் கடந்து யோசிப்போம்!

டாக்டர் க. பழனித்துரை
‘கர்ம பூமி’ என்பது ஒரு சிறிய நூல். இது கட்டுரைகளின், கடிதங்களின், உரையாடல்களின் தொகுப்பு. இவைகள் அனைத்தும் அனுபவப் பகிர்வு அல்லது அனுபவப் பார்வை என்றே கூறவேண்டும்.
செயல்பாட்டில் எழுந்த கருத்துக்களை கட்டுரைகளாகவும் கடிதங்களாகவும் உரையாடல்களாகவும் தரப்பட்டுள்ளன.
இதில் ஒரு மையக் கருத்து இருக்கிறது. அந்தக் கருத்து விவாதப் பொருளாக, மாற்றப்பட வேண்டும் என்ற நோக்கில்தான் இந்த நூல் திறனாய்வு செய்யப்பட்டு கட்டுரையாக இங்கே தரப்படுகிறது.
இதை எழுதியவரும், தொகுத்தவரும் எழுத்தாளரும் அல்ல, இலக்கியவாதியும் அல்ல. இதில் பேசுபடும்பொருள் ‘நூற்பு’. இது இந்தியரின் மகத்தான கண்டுபிடிப்பு.
மேற்கத்திய நாட்டுக்கு பொருள் உற்பத்திக்கான கருவி. அதுவே நம்மை அடிமைப்படுத்தவும் பயன்பட்டது. அதுவே நம்மை விடுதலை செய்யவும் பயன்படுத்தப்பட்டது.
இதைப் புரிந்துகொள்ள நமக்கு ஒரு கண்ணோட்டம் வேண்டும். நூற்பு என்பது ஒரு செயல் மற்றும் வாழ்வியல். காந்தியின் மிகப்பெரிய ஆயுதம் இந்த நூற்பில்தான் பிறந்தது. காந்தியின் கவனத்தை ஈர்த்து வைத்திருந்த ஒரு செயல்பாடு நூற்பு.
மகாத்மா காந்தி இதில்தான் நிறைய கண்டுபிடிப்புக்கள் வேண்டும் என்று வேண்டினார். ஒரு பரிசுத் திட்டத்தையே பெருந்தொகையில் அறிவித்தார்.
சென்னை சில்க்ஸ் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான டி.கே.சந்திரனும் நூற்பு இயக்கத்தின் முதுகெலும்பாகத் திகழும் சிவகுருநாதனும் அவருடன் இணைந்த புகைப்படக்காரர் மோகனும் தங்கள் கருத்துக்களை இநத் நூலில் பதிவு செய்து வைத்திருக்கின்றனர்.
இந்தியாவின் மக்கள் தொகை 142 கோடி, உழவு செய்து விவசாயம் செய்ய விவசாயக் கூலிகள் இருக்கின்றனர்.
இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் இருப்போர் விவசாயக் கூலிகள்தான். அவர்களில் 80% மேல் உள்ளவர்கள் 70 வயதைக் கடந்து விட்டார்கள்.
இன்று விவசாயக் கூலிகள் இளைஞர்களிடமிருந்து உருவாகவில்லை. வருங்காலத்தில் விவசாயம் விவசாயிகளிடமா அல்லது யாரிடம் செல்லப்போகிறது? விவசாயத் தொழிலாளர்கள் இல்லாமல் எப்படி விவசாயம் செய்ய முடியும்.
அதேபோல் தான் நூற்பு என்பதும். விவசாயத் தொழிலாளிகளுக்கு அடுத்த நிலையில் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பது நெசவில் ஈடுபட்டிருப்போர். ஆனால் இன்று இந்த தொழில் சிதிலமடைந்த நிலையில் இதை மீட்டெடுக்க வேண்டிய நிலையில் இதை விவாதிக்க வேண்டியிருக்கிறது.
இந்தத் துறை வலுவடைந்தால் எத்தனை கோடி பயன்பெறுவார்கள் என்ற பின்புலத்தில்தான் இந்தப் பிரச்சினையை விவாதிக்க வேண்டி இருக்கிறது. இதை ஒரு தவமாக மீட்டெடுக்க இன்று ஒரு சிறு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நூற்பு வாழ்க்கைக்குத் தேவையான அளவுக்கு வருமானத்தை ஈட்டித் தரவில்லை. எனவே இந்தப் பணிக்கு யாரும் வரத் தயாரில்லை என்ற நிலை வந்துவிட்டது. நெசவில் அவர்களுக்குக் கிடைக்கும் கூலி வாழ்க்கையை நடத்த போதுமானதாக இல்லை.
இதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால், நூற்பு என்பது அதாவது கையால் செய்யும் காலால் செய்யும் இந்தச் செயல் அழிந்துவிடும். இன்றுகூட நூற்பு செய்பவர்கள் அதை நோன்பாகச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
நூற்பின் மகிமை அறிந்ததால்தான் அண்ணா கைத்தறித் துணியை தன் தோளில் சுமந்து சென்று விற்பனை செய்தார்.
இன்று தமிழகத்தில் ஒரு பெரும் இளைஞர் கூட்டம் ஒரு எழுத்தாளரின் வழி நடத்துதலில் பயணிக்கின்றனர்.
அந்தக் கூட்டம் தெளிவான சிந்தனையுடன் தமிழகத்துக்கு வழிகாட்டும் பல நற்செயல்களை தங்களைக் கரைத்துக் கொண்டு செய்து வருகின்றனர்.
அதில் ஒன்று நூற்பு. அதைத்தான் சிவகுருநாதன் செய்து வருகிறார்.
சிவகுருநாதனின் பெற்றோர்களும் அவரை நூற்பிலிருந்து வெளியேற்றி வேறு வேலைக்கு அனுப்பி அதனைச் செய்து வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு செய்துவிட்டனர்.
அவரும் மற்ற இளைஞர்கள்போல் ஐ.டி. துறைக்குச் சென்று பணி செய்து கொண்டிருந்தார்.
ஆனால் அவரிடம் ஒரு சமூகச் சிந்தனை இடைவிடாது அவரை அசைத்துக் கொண்டேயிருந்தது.
சமூகம் இப்படியே இந்த நூற்பிலிருந்து வெளியேறிவிட்டால் எதிர்காலத்தில் என்ன ஆகப்போகிறது என்ற சிந்தனை சிவகுருதனை மீண்டும் தன் தாய் தந்தையர் செய்த நூற்புக்கு புத்துயிர் ஊட்ட முடிவு செய்து திரும்புகிறார்.
இதனை  பிழைப்புக்காக செய்திட வணிக நோக்கில் செய்திட வரவில்லை, சமூகம் மீண்டெழ இதனை இயக்கமாக்கிட வேண்டும் என்ற உறுதியில் களத்திற்கு வந்தவர்தான் இவர்.
வாழ்வாதாரத்தைக் கடந்து இதில் ஒரு வாழ்வுமுறை அர்த்தத்துடன் பிணைக்கப்பட்டுள்ளதை உணர்ந்து இந்தச் செயப்பாட்டை குக்கூ என்ற அமைப்பின் வழிகாட்டலோடு முன்னெடுத்து ஒரு சிறு கூட்டம் செயல்படுகிறது.
இதன் மகத்துவத்தை அறிந்த சில புரவலர்கள் இந்த இளைஞர்களின் தியாகச் செயல்பாடுகளுக்கு ஊக்கமளிக்க பின்புலமாக உதவியது பாராட்டுக்குரிய செயலாகும்.
டி.கே.சந்திரன் தியாக காலத்தை மதித்து தந்தையுடன் தியாக கால வாழ்வாதாரமான கதர் விற்பனையில் கரைத்துக் கொண்டு எளிய வாழ்க்கை வாழ்ந்த மனிதர்.
இவருக்கு கதரும், காந்தியமும் உணர்வுக்குள் இருப்பவை.
இவர் நற்பணி செய்பவரை தேடிப்பிடித்து உதவி செய்பவர். நற்சிந்தனை கொண்டோரை தேடிப்பிடித்து நட்பு பாராட்டுபவர்.
இவர் காந்தியத்தில் தோய்ந்திருந்தாலும், புதுமைக் காந்தியத்தை தேடி அலைந்தவர்.
இன்று உலகமய சந்தைப் பொருளாதாரத்தில் மையப்பகுதி செயல்பாட்டில் தானும் தன் குடும்பமும் இருந்தாலும் காந்தியத்தின் வலு அறிந்து தெளிந்த மனிதராக செயல்படக் கூடியவர்.
அப்படிச் செயல்படுகின்றவர்களை தன்முனைப்போடு தேடிச் சென்று அவர்களுக்கு உதவிடும் குணம் கொண்டவர்.
தொழில் செய்தாலும் அறிவுத் தேடலிலும் ஞானத் தேடலிலும் தன்னை கரைத்துக் கொண்டு தேனீ போல் செயல்படும் மனிதர்.
இவர் நூற்பின் நிலை பற்றியும், சிவகுருநாதனின் செயல்பாடுகள் பற்றியும் பதிவினை தன் கட்டுரைகள் மூலம் வடித்துள்ளார்.
சிவகுருநாதனின் செயல்பாட்டிற்குப் பின்புலம் குக்கு சிவராஜ். அவர் ஒரு நடமாடும் செயல் சித்தர். அவர் செய்யும் செயல்கள் அனைத்தும் தவம். அவைகள் உருவாக்கும் தாக்கமோ பெரு ஞான ஒளி வெள்ளம்.
அவர் ஒரு பல்கலைக் கழகத்தை ஒரு இளைஞர் பட்டாளத்தை வைத்து நடத்தி வருகிறார். அவரின் ஆத்ம ஞானம் அனைவருக்கும் வழிகாட்டுகிறது.
அவருக்கு எல்லையற்ற இறைச்சக்தி ஆன்ம வலிமையைக் கொடுப்பதால் மறைவில் இருந்து ஒரு மாபெரும் இயக்கத்தையே ஓசையின்றி நடத்தி எண்ணிலடங்கா திக்கற்ற மக்களின் வாழ்க்கையில் ஒளி பாய்ச்சுகின்றார்.
இந்த குக்குத் தம்பிகளின் தங்கைகளின் செயல்பாட்டிற்கு சிவராஜ் காட்டும் பாதை மூலத்தைக் கண்டறிந்து, அதிலிருந்து செயலைத் தொடங்குதல்.
அப்படித்தான் குக்குவுடன் இணைந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருப்போர் பணி செய்து மற்றவர்களை ஆச்சரியப்பட வைக்கின்றனர்.
இவர்கள் அனைவரும் புதுமைக் காந்தியர்கள். அந்தக் கூட்டத்தில் சிவகுநாதனும் ஒருவர்.
இந்த மண்ணையும் மக்களையும் வெள்ளைக்காரன் மட்டும் சுரண்டி சுகபோக வாழ்க்கை வாழவில்லை.
வெள்ளையர்களைவிட கொடியவர்களான நம்மவர்களும் மக்கள்மேல் ஆதிக்கம் செலுத்தி மக்களை கொத்தடிமையாக்கி, மேய்த்து, சுரண்டி வாழ்ந்து வருவது காலகாலமாக நடந்து வருவதுதான். அது இன்றும் தொடர்கிறது நம் அரசியல்வாதிகள் மூலம்.
ஒவ்வொரு காலத்திலும் அடிமைப்பட்டு சுரண்டலுக்கு ஆட்பட்டுக் கிடக்கும் மக்களைக் காக்க சிலர் ஆபத்பாண்டவர்களாக வருவார்கள்.
வெள்ளையர்களிடமிருந்து நம்மை விடுவிக்க வந்தவர் காந்தி. தஞ்சையில் விவசாயக் கூலிகளை விடுவித்தவர் சீனிவாச ராவ். இப்படித்தான் அடிமைகள் விடுதலை பெற்றுக் கொண்டே இருக்கின்றார்கள்.
விடுதலை அடைவதும், மீண்டும் அடிமையாவதும் மானுட வாழ்வில் தொடர் நிகழ்வு. அடிமைத்தனத்தின் வடிவங்கள் மாறுகின்றன. ஆதிக்கத்திலிருந்து விடுபட்டவர்களும் மீண்டும் அடிமைத்தளத்தில் சிக்குண்டு கிடக்கின்றனர்.
இதேபோன்றுதான், நெசவாள கொத்தடிமைகளை விடுவிக்க வந்தவர் நாச்சி முத்து முதலியார். அந்த விடுதலை ஒரு கூட்டுறவு இயக்கத்தின்  மூலம் சாத்தியமாயிற்று.
எந்த விடுதலையும் நிரந்தரமானது அல்ல, பெற்ற சுதந்திரத்தை பேணிக்காக்க காலத்துக்கு ஏற்ற மாற்றத்தை உள்வாங்கிச் செயல்படாதபோது, இந்த விதி அனைத்திற்கும் பொருந்தும்.
அந்த விதத்தில் சென்னிமலையில் உருவாக்கப்பட்ட மிகப் பெரிய கூட்டுறவு இயக்கம் சிதிலமடைந்த நிலையில் மீட்டுருவாக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார் சிவகுருநாதன்.
அதற்காகத்தான் நூற்பு என்ற இயக்கத்தைத் தொடங்கி இருக்கிறார். இது வெற்றி பெற பலரும் பல ஆதரவுச் சூழலை உருவாக்கித் தந்த வண்ணம் உள்ளனர்.
ஒட்டுமொத்த கைத்தறி நெசவில் ஈடுபட்ட மக்களின் வாழ்வு நிலை என்ன, புத்துயிர் ஊட்ட எடுக்கப்பட்டு வரும் முன்னெடுப்புக்கள் இந்த நூலில் கட்டுரைகளாகவும், தன்னை வழிநடத்தும் வழிகாட்டிக்கு எழுதும் கடிதங்களாகவும் தொகுக்கப்பட்டுள்ளது.
இந்த ஒட்டுமொத்த கருத்தாடலில் மையப்படுத்துவது மக்களை மையப்படுத்திய பொருள் உற்பத்தி மற்றும் விற்பனை. கைத்தறி என்பது ஒரு வாழ்வாதாரச் செயல்பாடு மட்டுமல்ல, அது ஒரு ஆன்மீகச் செயல்பாடு.
எளிய வாழ்வில் மனிதத்துவத்தில் மிளிர்வதற்கு இந்தச் செயல்பாடு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்பதை பதிவிட்டிருப்பது இதன் சிறப்பாகும். நூற்பு என்பது எவ்வளவு ஆன்மீகமானது என்பது இவர்களின் அனுபவங்களை எழுத்துக்களாக படிக்கும்போது நமக்குப் புரியும்.
இந்த நூற்பு என்ற வேள்வியில் தன்னையும் இணைத்துக் கொண்ட எழுத்தாளர் ஜெயமோகனும் ஒரு கருத்துப் பதிவு செய்து, அதை கட்டுரையாக இணைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மோகன் தனிஷ்க் என்ற இளைஞரும் ஆசிரியருக்கு கடிதம் எழுதியதை ஒரு கட்டுரையாக இந்த நூலில் இணைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியருக்கு கடிதம் என்றால் அது எழுத்தாளர் ஜெயமோகனுக்கு எழுதிய கடிதம்தான் அது. இவர்களுக்கு வரும் சந்தேகங்களுக்கு கடிதம் எழுதி எழுத்தாளரிடம் வழிகாட்டுதலைப் பெற்று செயல்பட்டு வருகின்றனர்.
ஒட்டு மொத்தமாக இந்த நூலை வாசித்தால் மக்களை எந்த அளவுக்கு மேம்பாட்டுச் செயல்பாடுகளில் பங்கேற்க வைக்கிறோமோ அந்த அளவுக்கு மக்கள் வேலை வாய்ப்புக்கிடைத்து அமைதியாக வாழ்வார்கள்.
இவர்கள் அனைவரும் காந்தியின் கனவுக் களத்துக்கள் வாசகர்களை அழைத்துச் செல்கின்றனர் தங்கள் கட்டுரைகளின் மூலமாக. காந்தியத்தை மீட்டுருவாக்கம் செய்வதில் ஒரு பகுதியை சிவகுருநாதன் செய்து கொண்டுள்ளார். இது ஒரு சிறு முயற்சி.
இதற்கு இக்காலத்து இளைஞர்கள் தங்கள் நுகர்வுக் கலாச்சாரத்திலிருந்து வெளிவந்து தற்சார்பு வாழ்வு முறைக்கு மாறும்போது இதற்கு ஒரு பெரும் வாய்ப்பு இருப்பதை நம்மால் உணர முடியும். இதனை சந்திரன் அவர்கள் மிகத் தெளிவாக அறிமுகத்திலேயே கூறி உள்ளார்.
நூற்புக்குப்பின் இருக்கும் அறிவியலையும், வாழ்வியலையும் இன்றைய இளைஞர்கள் புரிந்து கொண்டு கைத்தறித் துணிகளை வாங்கினால் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பெருகும்.
சென்னை சில்க்ஸ் நிறுவனமும் இதற்கான ஒரு முன்னெடுப்பை செய்து கொண்டுள்ளது என்பதை சந்திரன் அவர்கள் கூறி இருக்கிறார்.
இதை நான் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோது குறைந்த பட்சம் 2000 ரூபாய் அளவுக்கு கதர் துணிகளை வாங்குவேன். மாணவர்களுக்கு இது ஒரு கட்டாயக் கடமையாக இருந்தது.
சந்திரன் அவர்களின் கட்டுரைகளைப் படித்தாலே நூற்பின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் நாம் அறிந்து கொள்ளலாம்.
இன்றைய சிந்தனைச் சூழலில் காந்தியத்துக்கு இடமில்லையோ என்று எண்ணத் தோன்றுகின்ற காலத்தில் இயற்கை அந்தச் சூழலை மாற்றிவிடும் என்ற நம்பிக்கை பிறக்கிறது இந்த நூலைப் படிக்கும்போது.
அதில் இந்த மீட்டுருவாக்கம் ஒரு வரலாற்று நிகழ்வாக மாற்றம் பெரும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
Comments (0)
Add Comment