அறிவியல் கலைஞன் டாவின்சி!

கடின உழைப்பு, திறமை ஆகியவற்றால் வறுமையையும் வென்று வாழ்வில் முன்னேறியவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். அந்தப் பட்டியலில் இடம்பெற்றவர், லியானர்டோ டாவின்சி.

உலகப் புகழ் பெற்ற மோனலிசா ஓவியத்தை வறுமையில் வாடிய போதுதான் வரைந்தார் டாவின்சி.

ஓவியம் உள்பட பல்வேறு துறைகளிலும் திறமை பெற்றிருந்த லியானர்டோ டாவின்சி, 1452-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி ‘ஆன்கியானோ’ என்ற நகரத்தில் பிறந்தார். தந்தை பெயர் பியரோ டாவின்சி. தாயார் – காத்தரினா.

டாவின்சி இடக்கையால் எழுதும் பழக்கம் கொண்டிருந்தார். பொதுவாக அனைவரும் இடப்பக்கத்தில் இருந்து வலப்பக்கமாக எழுதுவது வழக்கம். ஆனால் டாவின்சி வலப்பக்கமாக ஆரம்பித்து இடது பக்கமாக எழுதுவார். அவரது எழுத்துக்களை முகம் பார்க்கும் கண்ணாடியின் மூலம்தான் படிக்க முடியும்.

டாவின்சியின் அப்பாவும் அம்மாவும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்தனர். இதனால் தாயின் அன்பும், அரவணைப்பும் இல்லாமல் தந்தையுடன் வளர்ந்து வந்தார் டாவின்சி.

சிறு வயது முதலே ஓவியம் வரைவதில் திறமையானவராக விளங்கினார் டாவின்சி. தன்னைக் கவர்ந்த இயற்கைக் காட்சிகளை ஓவியமாக வரையத் தொடங்கினார்.

மகனுக்கு ஓவியத்தில் இருக்கும் ஆர்வத்தைக் கண்ட அப்பா, வெர்ரோச்சியோ என்பவர் நடத்தி வந்த ஓவியக்கூடத்தில் டாவின்சியை சேர்த்தார்.

ஓவியக்கூடத்தில் சேர்ந்த டாவின்சி, ஓவியம் மட்டுமில்லாமல் சிற்பம், இசை போன்ற பல கலைகளிலும் தேர்ச்சி பெற்றார்.

இதனால் அந்த ஓவியப் பள்ளி வாழ்க்கை டாவின்சிக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. மற்ற மாணவர்களுடன் சேர்ந்து விளையாடுவதில் மிகவும் ஆர்வம் காட்டினார். டாவின்சிக்கு குதிரைச் சவாரி மிகவும் பிடித்த விளையாட்டு.

கலைக்கூடத்தில் பயிற்சி முடித்த பின் மனித வாழ்க்கையின் யதார்த்த நிலையை ஓவியமாகத் தீட்ட ஆரம்பித்தார்.

மருத்துவமனைக்குச் சென்று நோய்வாய்ப்பட்டிருக்கும் மனிதர்களைக் கண்டு அவர்களின் நிலையை ஓவியமாகத் தீட்டினார்.

மிலன் நகரத்தில் ஆட்சி செய்து வந்த லுடோவிகோ ஸ்பார்ஸாவிடம் உதவியாளராகச் சேர்ந்தார் டாவின்சி. ஸ்பார்ஸா கொடுங்கோல் ஆட்சி செய்து வந்தான். ஆல்பஸ் மலையில் பாதுகாப்பு அரண்களை அமைக்கும் பணிகளைக் கவனிக்கச் சென்றார் டாவின்சி.

மலையின் இயற்கை அழகு அவரை மிகவும் கவர்ந்தது. அங்கே கண்ட காட்சிகளை வரைந்தார். அந்த ஓவியம் மதக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டிருந்ததால், அதை ஃபிரான்ஸ் நாட்டு மன்னர் அதிக விலை கொடுத்து வாங்கி தன் அரண்மனையில் காட்சிக்கு வைத்தார்.

இதைத் தொடர்ந்து ஏசுநாதர் வாழ்க்கையில் முக்கிய நிகழ்ச்சியான ‘கடைசி இரவு விருந்து’ எனும் நிகழ்ச்சியை கன்னிமாடத்தின் சுவரில் வரைந்தார். சுவரின் உறுதியற்ற தன்மையின் காரணமாக அந்த ஓவியம் பழுதடைந்தது.

டாவின்சி இயற்கையை மட்டுமல்லாமல், விலங்குகளையும் பறவைகளையும் மிகவும் நேசித்தார். சந்தைக்குச் சென்று கூண்டில் அடைத்து விற்கப்படும் பறவைகளை விலைக்கு வாங்குவார்.

கூண்டைத் திறந்து உற்சாகமாக பறவைகளை எல்லாம் வெளியே பறக்க விடுவார். இதை வழக்கமாகவே செய்து வந்தார். இதை சந்தையில் இருப்பவர்கள் ஆச்சர்யமாகப் பார்ப்பார்கள்.

மிலன் நகர் மீது ஃபிரெஞ்சுக்காரர்கள் படையெடுத்தபோது ஸ்பார்ஸாவையும் அவரது ஆட்களையும் நகரத்தை விட்டு விரட்டினார்கள். டாவின்சியும் அங்கிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

வெனிஸ் மற்றும் ரோம் நகரில் சில காலம் தங்கி இருந்தார். மிலனில் மீண்டும் ஸ்பார்ஸாவின் ஆட்சி வந்ததால் டாவின்சியும் திரும்பினார்.

டாவின்சிக்கு சம்பளமாகக் கொடுக்கவேண்டிய பணத்தைக் கொடுக்காமல் நாட்களைக் கடத்தி வந்தான் ஸ்பார்ஸா. இதனால் அன்றாட செலவுக்குக்கூட பணம் இல்லாமல் கஷ்டப்பட்டார் டாவின்சி.

தன் செலவுகளுக்காக பல விதமான ஓவியங்களை வரைந்து விற்பனை செய்தார். இந்த காலகட்டங்களில் அவர் வரைந்த பல ஓவியங்களில், ‘மோனாலிசா’ குறிப்பிடத்தக்க வகையில் அற்புதமான படைப்பாக அமைந்தது.

இது உலகப் புகழ் பெற்றது. மோனாலிசா ஓவியத்தை வரைய டாவின்சிக்கு ஆறு ஆண்டுகள் பிடித்தது. அற்புதமாகக் காட்சியளித்த அந்த ஓவியத்தை ஃபிரெஞ்சு மன்னர் முதலாம் பிரான்ஸிஸ் 12 ஆயிரம் பிராங்குகள் கொடுத்து வாங்கினார்.

அறிவியல் துறையிலும் ஆர்வம் காட்டிய டாவின்சி, நூல் நூற்கும் இயந்திரம், திருகாணி செய்யப்பயன்படும் கருவி, மண் தூக்கும் கருவி போன்றவற்றுக்கான வரைபடங்களை வரைந்தார். மேலும் விண்மீன்களைப் பற்றி முதன்முதலில் கண்டுபிடித்த பெருமையும் அவரையே சேரும்.

பறக்கும் எந்திரங்கள், பாராசூட், ராணுவ டாங்கிகள் போன்றவற்றுக்கான மாதிரிப் படங்களையும் முதலில் வரைந்தார்.

பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பொருட்களை பல வருடங்களுக்கு முன்பே வரைபடமாக டாவின்சி வரைந்து இருப்பது வியப்புக்கு உரியது. பல துறைகளிலும் சிறந்து விளங்கிய டாவின்சி 1519-ம் ஆண்டு மே மாதம் 2-ம் தேதி மறைந்தார்.

லியானர்டோ டாவின்சியின் புகழை, காலத்தை வென்று நிலைத்து நிற்கும் ‘மோனலிசா’ ஓவியம் இன்று மட்டுமின்றி என்றும் பிரதிபலித்துக்கொண்டே இருக்கும்.

ஆர்வத்தைப் பல விதங்களில் வெளிப்படுத்திக் கொண்டே இருங்கள்

பனிக்கட்டி மீது சிலரால் எப்படி எளிதாக நடக்க முடிகிறது, இதய வால்வு எப்படித் தானாக மூடி மூடித் திறக்கிறது, மனிதர்கள் கொட்டாவி விடக் காரணம் என்ன என்று பல கேள்விகளை எழுப்பிக் கொண்டு அவற்றுக்கு விடை அளிக்க முயன்றவர் லியனார்டோ டாவின்சி.

தன் வாழ்க்கை முழுவதும் ஆர்வம் பொங்கப் பல கேள்விகளை எழுப்பி அதற்கு அவர் அளித்த விடைகள் மற்றும் வெளிப்பாடுகள்தான் இன்று பல விதங்களில் நமக்குப் பயன்படுகின்றன.

தனிப்பட்ட விருப்பம் வேறு, தேசத் தொண்டு வேறு!

சைவ உணவை மட்டுமே உட்கொண்டவர் லியனார்டோ டாவின்சி. விலங்குகள் மீது அத்தனை அன்பு கொண்டவர். போரை வெறுத்தவர். என்றாலும் தன் நாட்டுக்காக மிக முன்னேறிய ஆயுதங்களை ஒரு ராணுவப் பொறியாளராக வடிவமைத்துத் தந்தவர்.

சுற்றி நடப்பவற்றை நன்கு கவனியுங்கள்

நான்கு இறக்கைகள் கொண்ட ராட்சத ஈக்கள் எப்படிப் பறக்கின்றன என்பதை கவனித்தார் லியானார்டோ டாவின்சி.

தனது இறக்கைகளை எந்தக் கோணத்தில் எந்த வரிசையில் மாறி மாறி அவை அடித்துக் கொள்கின்றன என்பதையும் கவனித்தார். இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆகாய விமானம் தயாரிக்கப்பட்டால் நாமும் பறப்பது சாத்தியமாகும் என்பதை அவர் அறிந்து கூறினார்.

முயற்சிகள் என்பவை முடிவுறாதவை

நீரோட்டத்தைப் பற்றி 730 விவரங்களைக் கண்டு ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்தவர் லியனார்டோ டாவின்சி. ஒரு சதுரத்தை எப்படி வட்டம் ஆக்குவது என்பதற்காக 169 விதங்களில் முயன்றிருக்கிறார்.

மனித உடலின் ஒவ்வொரு பகுதியும் பிற பகுதிகளோடு ஒப்பிட்டு மிக நீண்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அவற்றைப் பதிவு செய்திருக்கிறார் (பின்னர் ஒரு குதிரையின் உடலில் அவை எத்தன்மை கொண்டவை என்பதையும் ஆராய்ச்சி செய்திருக்கிறார்!)

உங்கள் ரசனைக்கு முன்னுரிமை கொடுங்கள்

மிகவும் பணக்கார மற்றும் அதிகாரமிக்க சீமாட்டிகள் தங்களை வரைந்து கொடுக்க வேண்டும் என்று லியனார்டோ டாவின்சியைக் கெஞ்சி இருக்கிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் அவர் வளைந்து கொடுக்கவில்லை.

மாறாக ஒரு வியாபாரியின் மனைவியை பார்த்ததும் அவருக்கு ஓவியம் வரையத் தோன்ற அதைச் செயல்படுத்தினார்.

அந்தப் பெண்மணியின் பெயர் லிசா என்றால் அவர் வரைந்த ஓவியம் எதுவாக இருக்கும் என்பதை உங்களால் யூகித்துவிட முடியும்.

  • நன்றி: விகடன்
Comments (0)
Add Comment