உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் எல்லா உணவுப் பொருட்களும் ஒவ்வொரு பணியைச் செய்கின்றன. அதில் மிக முக்கியமான உணவுப் பொருட்கள் சீரகமும் இஞ்சியும். அவை நம் ஆரோக்கியத்திற்காக செய்யும் அதி உன்னதமான செயல்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.
சீரகம்:
சீர் + அகம் – சீரகம். அகத்தினை சுத்தப்படுத்துவதனால் இதனை சீரகம் என அழைப்பதுண்டு.
உணவே மருந்து, மருந்தே உணவு என்னும் சூத்திரத்தை சித்தர்கள் கூறியுள்ளனர். அதில் சீரகத்திற்கு முக்கிய பங்குண்டு. சீரகம் அளவில் சிறிதாகவும் பார்ப்பதற்கு கவர்ச்சி இல்லாமலும் இருக்கும். ஆனால் உலகின் மூத்த மணமூட்டி சீரகமாகும்.
சீரகம் ஒரு மணமூட்டி மட்டுமல்ல உலகை ஆளும் மருத்துவ உணவு. முதல் முதலில் கிரேக்க நாட்டில் இருந்து தான் உலகம் எங்கும் பரவியது.
சித்த மருத்துவ இலக்கியமான தேரன் வெண்பாவில் ‘சீரனா நோயெல்லாம் வராது பாதுகாக்கும் போசனகுடோரி’ என போற்றப்படுகிறது.
சீரகம் பித்த நோய், அஜீரணம், கண் எரிச்சல், வாந்தி, விக்கல், கல்லடைப்பு போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு கொடுக்கக் கூடியது.
மேலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு இருக்கக்கூடிய நீர்க்கடுப்பு பிரச்சனையைத் தீர்க்கும் சக்தி வாய்ந்த மருத்துவ குணம் கொண்டது சீரகம்.
இதனை நீரில் நன்றாக அவித்து தேன் அல்லது நாட்டு சர்க்கரை சிறிதளவு சேர்த்து குடித்தால் நீர்க் கடுப்பு குணமாகும்.
உடல் சூட்டை தணிப்பதற்கும் சீரகம் பயன்படுத்த முடியும்.
விடாது தொடர்ந்து விக்கல் பிரச்சனை இருப்பவர்களுக்கு எட்டு திப்பிலியும் 10 சீரகமும் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் குணமாகும் என சித்த மருத்துவம் கூறுகிறது.
சீரகம் உணவு செரிமானம் ஆகாமல் இருக்கும் பிரச்சினையை சீர் செய்யவும் உதவும்.
சாதாரண தண்ணீருக்கு பதிலாக உணவு உட்கொள்ளும் போது இளஞ்சூட்டில் சீரகம் கலந்து அருந்தினால் இந்த செரிமான பிரச்சனையைத் தடுக்க முடியும்.
ஆண் பெண் இருவருக்கும் இருக்கக்கூடிய தொப்பை பிரச்சினையை சீர் செய்யவும் சீரகம் உதவுகிறது. ஏலக்காய், சீரகம் இரண்டையும் நன்றாக பொடி செய்து தினமும் உணவில் கால் டீஸ்பூன் அளவு சேர்த்து சாப்பிட்டால் இந்த பிரச்சினை சரியாகும்.
இதனை இளம் சுடுநீரிலும் கலந்து குடிக்க முடியும். வயிற்றுப்புண் இருப்பவர்களுக்கு வெண்ணெயுடன் சீரகப்பொடியை குலைத்து சாப்பிட்டால் மிக விரைவில் நோய் தீரும்.
பித்தம் மற்றும் உயர் ரத்த அழுத்த நோய்களுக்கு சீரண சூரணம் என்ற மருந்து சித்த மருத்துவ கடைகளில் கிடைக்கும் இதனை பயன்படுத்தினால் இந்த நோய்களுக்கு தீர்வு உண்டாகும்.
சீரகத்தையும், வில்வ வேர் கசாயத்தையும் சேர்த்து சித்தர்கள் சீரக வில்வாதி லேகியம் பித்த நோய்களுக்கு உதவக்கூடிய மிக முக்கிய மருந்து ஆகும்.
சீரகத்தில் இருக்கக்கூடிய வைட்டமின் சி மற்றும் ஏ, குடல் புண், புற்றுநோய் வருவதைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இஞ்சி:
இஞ்சிக்கு சித்த மருத்துவ முறையில் அரத்தை என்று பெயர். இதற்கு சிற்றரத்தை, பேரரத்தை என இரண்டு பெயர்கள் உண்டு.
இந்த இஞ்சி சளி மற்றும் தொண்டை வலி, மாதவிடாய்க் காலங்களில் பெண்களுக்கு வரக்கூடிய வயிற்று வலி, இருமல், சூட்டு இருமல், தலைவலி போன்ற பிரச்சினைகளுக்கு உதவக்கூடிய மருத்துவ குணம் கொண்டது.
இஞ்சியை சிறு துண்டுகளாக வெட்டி வெயிலில் நன்றாகக் காய வைத்து எடுத்தால் சுக்கு கிடைக்கும். இதனை நீண்ட காலம் வரை பயன்படுத்த முடியும்.
கால் டீஸ்பூன் அளவு இஞ்சிப் பொடியைத் தேனில் கலந்து காலை மாலை, இரவு மூன்று நேரங்களும் சாப்பிட்டு வந்தால் நுரையீரலில் இருக்கும் சளி பிரச்சினையை இலகுவாக நீக்க முடியும்.
அதுபோல தொடர்ந்து இருமல், வரட்டு இருமல் இருந்தால், இஞ்சி நீர் மற்றும் தேனில் கடந்த பொடியை சாப்பிட்டால் விரைவில் குணமடையும்.
இஞ்சிக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது என நவீன அறிவியல் அங்கீகரித்துள்ளது. இஞ்சியைக் கசாயமாகவும் குடிக்கலாம்.
ஜப்பானிய ஆய்வறிக்கையில் வாகனங்களில் பயணிக்கும் போது வரக்கூடிய வாந்தி பிரச்சினையை தீர்க்கக் கூடிய சக்தி அரத்தைக்கு உண்டு எனவும் இதனை பயணிக்கும்போது வாயில் ஒரு துண்டு அரத்தை வைத்துக் கொண்டால் வாந்தி வராமல் தடுக்க முடியும் என கூறியுள்ளது.
மூட்டு வலிகளுக்கு அதிசிறந்த மருந்து அரத்தை என சித்த மருத்துவம் கூறுகிறது.
அரத்தைத் துண்டு மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் மூட்டுவலி சரியாகும்.
கேலங்கின், குய்ர் செட்டின், கேம்ப்ஃ பெரால் எனும் மூன்று முக்கிய சக்திகளைக் கொண்டது அரத்தை.
இது உடம்பில் உள்ள கொழுப்பை குறைக்கும் என கொரிய விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். மேலும் இது புற்றுநோயின் தாக்கத்தையும் குறைக்கக்கூடிய தன்மை கொண்டது.
அடிக்கடி சளி, இருமல், ஆஸ்துமா போன்ற நோய்களில் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு சிற்றரத்தை, அதிமதுரம், தாளீசம், திப்பிலி இவற்றை சமபங்கு எடுத்து வறுத்துப் பொடியாக்கி 3 மாதங்களுக்குத் தொடர்ந்து உட்கொண்டால் சிறு குழந்தைகளுக்கு வரக்கூடிய இந்த நோய்களிலிருந்து தீர்வு கிடைக்கும். இதை தினமும் காலையில் தேனில் கலந்து சாப்பிடுவது சிறந்த பலன் தரும்.
– தனுஷா