சிறப்பான, தரமான ‘கமர்ஷியல்’ படம் எப்படியிருக்க வேண்டும்? ‘டைம் லேப்ஸ்’ நுட்பத்தில் படமாக்கப்பட்ட ஒரு இயற்கைக் காட்சி போலிருக்க வேண்டும்.
அதாகப்பட்டது, எளிமையாக நிகழ்கிற விஷயங்கள் அனைத்தும் ‘அசாதாரணமானதாக’ உணரும் வகையில் படம்பிடிக்கப்பட்டிருக்கப்பட வேண்டும்.
பாட்டு, பைட்டு, ஜோக்கு, ரொமான்ஸு என்று எத்தனையோ அம்சங்களை உள்ளடக்கத்தில் நிறைத்தாலும், அனைத்தையும் தாண்டி அதன் மொத்த வடிவம் எளிமையாகத் தெரிய வேண்டும்.
பெரும்பாலான ரசிகர்கள் சொல்லும்படியாக, அந்த படத்தின் ஒரு வரிக்கதை அமைய வேண்டும்.
சரி, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘ரெட்ரோ’ படத்திற்கும் மேலே சொன்னதற்கும் என்ன சம்பந்தம்?
‘ரெட்ரோ’ கதை!
’நீ சிரிச்சா அழகா இருக்கும்; ஆனா சிரிக்க மாட்டேங்குற’ என்று வாஞ்சையுடன் சொல்கிற பெண்ணுக்கும், ‘உனக்காக நான் எதை வேணும்னாலும் செய்வேன்; சிரிக்க முயற்சிக்க மாட்டேனா’ என்று காதலின் திளைப்பில் உறுதியளிக்கிற ஆணுக்குமான பிணைப்பே ‘ரெட்ரோ’ படத்தின் மைய இழை.
பாரிவேல் கண்ணன் (சூர்யா) ஒரு அடிதடிப் பேர்வழி.
அவரைத் தனது ‘வளர்ப்பு பிள்ளை’ என்று சொல்லித் திரிகிறார் ஒரு கேங்க்ஸ்டர் (ஜோஜு ஜார்ஜ்).
ஆனால், ஒருபோதும் அவ்வாறு மனதார நினைப்பதில்லை.
எங்கேயும், எப்போதும், யாரையும் ‘அடி அடி..’ என்று அடித்தே பழக்கப்பட்டவர் பாரி. அதையே டாடியும் தனக்குச் சாதமாகப் பயன்படுத்தி வருகிறார்.
சிறு வயதில் தான் கண்ட ருக்மிணியை (பூஜா ஹெக்டே) மீண்டும் சந்தித்த பிறகு பாரியிடம் மாற்றம் நிகழ்கிறது.
அவரைக் காதலிக்கத் தொடங்குகிறார். அதனை அப்பெண்ணிடம் சொல்கிறார்.
அடிதடி வழக்குகள் அனைத்திலிருந்தும் விலகி ஒரு புது வாழ்வை மேற்கொள்ளத் தயாராகிறார்.
அந்த நேரத்தில், ஒரு ஆப்பிரிக்க நாட்டுக்குக் கப்பலில் சில பொருட்களை அனுப்ப வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதனைப் பாரியிடம் ஒப்படைக்கிறார் டாடி.
ஆனால், அந்த பணியைச் சரியாகச் செய்யாமல் வேறு சில பொருட்களை அனுப்பி வைக்கிறார் பாரி.
அப்பொருட்களைத் தனக்குத் தெரிந்த இடத்தில் மறைத்து வைக்கிறார்.
உண்மைத் தகவல் ஆப்பிரிக்காவில் இருந்து தெரிய வந்ததும், பாரியைத் தேடிச் செல்கிறார் டாடி.
‘நான் அனுப்புன கோல்டு பிஷ் எங்க’ என்கிறார். ‘தெரியாது’ என்கிறார் பாரி.
அந்த நேரத்தில் ருக்மணி உடன் மணமகனாக மண்டபத்தில் நின்று கொண்டிருக்கிறார் பாரி.
உடனே, ‘ருக்மணிக்கு ஒரு ஆபத்து என்றால் அந்த இடத்தைச் சொல்லிடுவேள்ல’ என்கிறார் டாடி.
அதற்கு, ‘அவ மேல ஒரு கீறல் பட்டாலும் ஒருத்தரையும் உயிரோட விடமாட்டேன்’ என்கிறார் பாரி.
அதற்குப் பின் அந்த இடத்தில் என்ன நடக்கும்? சண்டை நிகழ்கிறது.
அதனைக் காண்கிறார் ருக்மணி. ’சண்டை போடுற பழக்கத்தை உன்னால விட முடியாதில்ல’ என்று பாரியை விட்டுப் பிரிந்து செல்கிறார்.
சண்டையில் நிகழ்ந்த சேதாரங்களால் சிறைக்குச் செல்கிறார் பாரி.
சிறையில் இருக்கும் அவரைக் கடுமையாகச் சித்திரவதை செய்தாவது உண்மையை வரவழைத்துவிட முயற்சிக்கிறார் டாடி.
அவரது பின்னணியில் ஒரு மிகப்பெரிய அரசியல்வாதி (பிரகாஷ்ராஜ்) இருக்கிறார்.
ஆனாலும், ‘கோல்டு பிஷ்’ இருக்கிற இடத்தைப் பற்றி பாரி வாய் திறப்பதாக இல்லை.
இந்த நிலையில், சிறைக்குள் பாரி சண்டை செய்கிற விதத்தைப் பார்த்து ஒரு ‘க்ரூப்’ அவரை ’வெளியே’ அழைத்துச் செல்ல முடிவு செய்கிறது.
பல லட்சம் ரூபாய்களை வாரியிறைத்து, அவருக்குப் பதிலாகச் சிறையில் இன்னொருவரை தண்டனை அனுபவிக்கச் செய்யவும் தயாராக இருக்கிறது.
அதன் பின்னே, பாரியை அடிமையாக விலைக்கு வாங்குகிற மனப்பாங்கு இருக்கிறது.
தன்னை விட்டுப் பிரிந்துபோன ருக்மணி எங்கிருக்கிறார் என்று தெரியாமல் தவிக்கும் பாரி, அந்த ‘டீலிங்’கை ஏற்பதாக இல்லை.
ஒருநாள் ருக்மணி இருக்குமிடம் தெரிய வருகிறது. உடனே, அந்த கும்பலின் உதவியை நாடுகிறார் பாரி.
ஆனால், சிறையில் இருந்து வெளியே வந்ததும் அவர்கள் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு யாருக்கும் தெரியாத ஒரு தீவுக்குச் செல்கிறார்.
ஒரு பக்கம் ‘கோல்டு பிஷ்’ இருக்குமிடம் தெரியாமல் அல்லாடும் டாடி கும்பல், இன்னொரு பக்கம் பணம் கொடுத்து ஏமாந்த கும்பல், இவ்விரண்டு கும்பல்களையும் ஏமாற்றிவிட்டு பாரியால் ருக்மணியைக் கண்டறிய முடிந்ததா?
அவரிடம் தனது காதலைத் தெரிவிக்க முடிந்ததா என்று சொல்கிறது ‘ரெட்ரோ’வின் மீதி.
இந்தக் கதையில் பாரி – ருக்மணி காதலே மையம்.
தான் யார்? தனது கர்மாவின் நோக்கம் என்ன? இக்கேள்விகளுக்கு அக்காதலின் வழியே பாரிக்கு விடை தெரிந்ததா என்றும் சொல்கிறது இப்படம்.
’ஆக மொத்தத்துல இந்த படத்துல ரெண்டுக்கும் மேற்பட்ட கதைகள் இருக்கு’ என்கிற முடிவுக்குச் சிலர் வரலாம்.
‘அது உங்க இஷ்டம்; ஆனா, நான் என் பாட்டுக்கு ஒரு கதை சொல்றேன்’ என்று இறங்கியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.
இயக்குனர் வரைந்த சித்திரமும், அது நமது மனதில் பதிக்கிற தடமும் ஒன்றோடொன்று பொருந்துகிறதா என்பதே ‘ரெட்ரோ’வின் வெற்றியைத் தீர்மானிக்கிற ‘மில்லியன் டாலர்’ கேள்வி.
வித்தியாசமான காட்சியனுபவம்!
எதற்கும் துணிந்தவன், கங்குவா படங்களில் ரசிகர்களை விட்டு வெகுதூரம் விலகிச் சென்ற சூர்யா, இதில் அவர்களுக்கு அருகில் வர முயன்றிருக்கிறார்.
அதற்கேற்ப, அவரது பிலிமோகிராஃபியை தொட்டுச் செல்கிற ‘நாஸ்டால்ஜியா மொமண்ட்’களும் இப்படத்தில் இருக்கின்றன.
ஆனால், இத்திரைக்கதையில் பொதித்து வைக்கப்பட்டிருக்கிற வன்முறை துருத்திக்கொண்டு தெரிகிறது. அதனைக் கையிலேந்தியவாறு சூர்யா திரிவதைத்தான் ஏற்க முடிவதில்லை.
மற்றபடி தோற்றம், நடிப்பில் அவர் காட்டியிருக்கிற சிரத்தை அப்படியே ‘காக்க.. காக்க..’ காலத்தை நினைவூட்டுகிறது.
நாயகி பூஜா ஹெக்டே இதில் நடிக்கவும் செய்திருக்கிறார். மிகச்சில படங்களில் மட்டுமே அவர் அந்த வாய்ப்பினைப் பெற்றிருக்கிறார். அதிலொன்றாக அமைந்திருக்கிறது ‘ரெட்ரோ’.
ஆனாலும், இதில் அவரது பாத்திரம் நாம் எதிர்பார்த்த வகையில் திரையில் ‘காதல் மழை’யைப் பொழியவில்லை.
இவர்கள் இருவரையும் தாண்டி சுமார் இரண்டு டஜன் பேராவது இதிலிருப்பார்கள். அவர்களில் ஜோஜு ஜார்ஜ் ‘அன்பு மகனே’ என்று வசனம் பேசி நம்மை ஈர்க்கிறார். சாப்ளின் பெயரில் ‘ஜோக்’ சொல்லிச் சிரிக்க வைக்கும் டாக்டராக ஜெயராம்; சில இடங்களில் கலகலக்க வைக்கிறார்.
ஒரு ‘வித்தியாசமான’ வில்லனாக விது தோன்றியிருக்கிறார். அவர் வரும் காட்சிகள் ‘கேனிபல் ஹாலோகாஸ்ட்’ (Cannibal Holocaust) போன்றிருக்கின்றன. ஆனால், ஒன்றும் மிரட்சியைத் தருவதாக இல்லை.
இன்னும் பிரகாஷ்ராஜ், நாசர், கருணாகரன், சுஜித் ஷங்கர், சிங்கம்புலி, தமிழ், பிரேம்சங்கர், ரெம்யா சுரேஷ், கஜராஜ், ராமச்சந்திரன் துரைராஜ் என்று பலர் இப்படத்தில் உண்டு.
விதவிதமான களங்களில், வெவ்வேறு வகையான தன்மை கொண்ட காட்சிகளை ‘அழகியல் தன்மை’ மிளிரப் படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா.
காதலும் அடிதடியுமாகக் காட்சிகளை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வடிவமைத்த காரணத்தால், அவற்றை ‘இண்டர்கட்’ நுட்பத்தில் காட்டியாக வேண்டிய கட்டாயத்தை அழகாக எதிர்கொண்டிருக்கிறார் படத்தொகுப்பாளர் ஷஃபீக் முகம்மது அலி.
ஜாக்கி, மாயபாண்டியின் கலை வடிவமைப்பில் பல காட்சிக்கான ‘செட்கள்’ நம்மை அசரடிக்கின்றன.
இன்னும் டிஐ, விஎஃப்எக்ஸ், ஒப்பனை, ஆடை வடிவமைப்பு, ஒலி வடிவமைப்பு என்று பல நுட்பங்கள் மிகச்சிறப்பான பங்களிப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன.
வழக்கம்போல, பின்னணி இசை வழியே இன்னொரு உலகை நாம் காண வழி வகை செய்திருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.
பாடல்களைப் பொறுத்தவரை ‘கனிமா’ ஏற்கனவே ஹிட்டாகி விட்டது. திரையில் ச.நா. தோன்றும் இடங்கள் நமக்கு ‘பழைய டி.ஆரை’ நினைவூட்டுகின்றன.
விரைவில் இது போன்று மேலும் சில படங்களில் அவரைக் காண வாய்ப்பிருக்கிறது போலும்!
இதர பாடல்களும் சில ரசிகர்களைக் கூச்சலிட வைக்கின்றன.
இந்த படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
சுமார் 30, 40 ஆண்டுகளுக்கு முன்பிருந்த மனிதர்களை, அவர்களது வாழ்வைத் திரையில் காட்டுவதில் இவருக்கு அலாதி ஆர்வம் இருப்பது தெரிய வருகிறது.
மகான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பாணியில் ‘ரெட்ரோ’ படத்தையும் ரெட்ரோ பாணியில் உருவாக்கியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
ஆனால், அவ்விரண்டும் இரண்டுவிதமான தாக்கங்களை நம்மிடத்தே ஏற்படுத்தின.
அத்தாக்கங்களைக் கலந்து கட்டி பெறும் வகையில் திரையனுபவம் தருகிறது ‘ரெட்ரோ’.
அதற்குக் காரணம், இப்படத்தின் கதை சொல்லலில் எளிமை இல்லாமல் போயிருப்பதுதான்.
’நாவல் பாணி’ திரைக்கதையை ஆக்குவதில் கா.சு.க்கு அலாதி பிரியம் இருக்கிறது. அதில் தவறில்லை.
ஆனால், அதற்கேற்ற வகையில் மையப் பாத்திரங்களின் வார்ப்பு இருக்க வேண்டும்.
கால ஓட்டத்தில் அவற்றில் ஏற்படுகிற மாற்றங்கள் காட்சிகளில் தென்பட வேண்டும்.
இப்படத்தில் நாயகனும் நாயகியும் முக்கால்வாசி காட்சிகளில் ஒரேமாதிரியாகத் தெரிகின்றனர்.
எத்தனை முயன்றாலும், காதலிக்காகத் தன்னிடத்தே இருக்கும் வன்முறை இயல்பைத் துறக்க முடியாமல் நாயகன் தவிப்பதுதான் இக்கதையின் மையம்.
அதற்குத் தடை போடுவதாக வரும் பிரச்சனைகள் நம்மைச் சட்டென்று உள்ளிழுப்பதாக இல்லை.
சரி, படத்தில் என்ன இருக்கிறது? நாயகனும் நாயகியும் காதல் உணர்வை அழகாக வெளிப்படுத்துகிற காட்சிகள் இருக்கின்றன.
நாயகனை ‘அடிதடி நாயகனாக’ காட்டுகிற சண்டைக்காட்சிகள் ‘அபாரமாக’ப் படம்பிடிக்கப்பட்டிருக்கின்றன.
நாயகனை ‘ஸ்லோமோஷனில்’ காட்டுகிற ஷாட்களை ‘ஹீரோயிசமாக’ பாவித்து கொண்டாடுகின்றனர் ரசிகர்கள்.
கைதட்டுவதற்கு ஏற்ற ‘பஞ்ச்’ வசனங்கள், வலிந்து திணிக்கப்பட்ட ‘ஆண்டான் அடிமை’ வகையறா காட்சிகள், ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ பாணியில் மையக் கதையோடு ஒரு படிமத்தை இணைக்கிற திரைக்கதை உத்தி என்று பல விஷயங்கள் இருக்கின்றன.
அவற்றை ஒன்றிணைக்கிற கண்ணி, கண் பார்வைக்கு எளிதாக இல்லை என்பதே நம் குறை.
அனைத்துக்கும் மேலே, எப்படி ‘கலைப்படங்கள்’ என்ற போர்வையில் சில படைப்புகள் போலியாக ஒருகாலத்தில் உருவாக்கப்பட்டனவோ, அதே போன்று ‘போலியான கமர்ஷியல் படம்’ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது ‘ரெட்ரோ’.
அதற்கு முக்கியமான காரணம், இப்படத்தில் எளிமை எனும் அம்சம் மங்கி மறைந்து போயிருப்பதுதான்.
அதேநேரத்தில், அந்த எளிமையை விரும்பாத போலி ‘பேரலல் சினிமா’ பேராவலர்களுக்கு இப்படம் ‘கல்ட் சினிமா’வாக, ‘கமர்ஷியல் சினிமாவில் புதிய திசை’யாகத் தெரியலாம்.. அதனால், ‘ரெட்ரோ’வுக்குப் பலன் கிடைத்தால் சரி!
– உதயசங்கரன் பாடகலிங்கம்