தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின்போது (29.04.2025 அன்று) உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்த மண்ணின் ஆதிக்குடிகளை இழிவுபடுத்தும் அடையாளமாகக் ‘காலனி’ என்ற சொல் பதிவாகியிருக்கிறது.
ஆதிக்கத்தின் அடையாளமாகவும் தீண்டாமைக்கான குறியீடாகவும் வசைச் சொல்லாகவும் இது மாறியிருப்பதால் இனி இந்தச் சொல் அரசு ஆவணங்களிலிருந்தும், பொதுப் புழக்கத்திலிருந்தும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்“ என்று அறிவித்தார்.
இது பாராட்டி, வரவேற்கவேண்டிய அறிவிப்பாகும்.
‘காலனி’ என்பது ஒரு ஆங்கிலச் சொல். ‘காலனி’ என்ற சொல் முதலில் காலனித்துவ ஆட்சியுடன் தொடர்புடையதாகப் பயன்படுத்தப்பட்டது. ஒரு மேலாதிக்க சக்தியால் பின்தங்கிய அல்லது பலவீனமான மக்களைச் சுரண்டுவதாகக் கூறப்படும் கொள்கையை விவரிக்க இழிவான அர்த்தத்தில் அது பயன்படுத்தப்பட்டது.
இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு, இந்த வார்த்தை கிராமப்புறங்களில் தலித்துகளின் வாழ்விடத்தை அடையாளம் காணப் பயன்படுத்தப்பட்டது. அவர்களது குடியிருப்புகளை அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் குடியிருப்புகளாகக் குறிப்பதற்கே அந்தச் சொல் பயன்படுத்தப்பட்டது.
அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது!
தமிழ்நாட்டில் பல ஊர்களில் பட்டியல் சமூக மக்களின் குடியிருப்புகளை சாதி அடையாளத்தோடு வருவாய்த்துறை ஆவணங்களில் பதிவு செய்து வைத்துள்ளனர். காலனி, சேரி, கீழத்தெரு, பள்ளத்தெரு இப்படித்தான் அவை அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
அதே பெயர்தான் ஆதார் கார்டு, பாஸ்போர்ட் உட்பட அனைத்து ஆவணங்களிலும் இடம்பெறும்.
பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரது சாதிச் சான்றிதழைப் பார்க்காமலேயே அவரது சாதியைத் தெரிந்துகொள்ளும் இழிவான நோக்கம் கொண்ட ஏற்பாடாக இது உள்ளது.
அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 17 இந்த நாட்டில் தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டதாகவும், அதை எவராவது கடைப்பிடித்தால் அது தண்டனைக்குரிய குற்றம் எனவும் அறிவித்துள்ளது.
ஆனால், அப்படி அறிவிக்கப்பட்டு 75 ஆண்டுகளுக்குப் பிறகும் தீண்டாமை என்பது அரசாங்க ஆவணங்களில் / நடைமுறைகளில் தொடர்ந்துகொண்டிருக்கிறது. அதன் ஒரு வடிவம்தான் பட்டியல் சமூகத்தினரின் குடியிருப்புகளை இழிவாக அடையாளப்படுத்தும் காலனி, சேரி உள்ளிட்ட பெயர் சூட்டலாகும்.
அவ்வாறு அடையாளப்படுத்துவது அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 17 க்கு எதிரானதாகும். தண்டனைக்குரிய குற்றமாகும்.
அண்ணல் அம்பேத்கர் வகுத்தளித்த சட்டத்தில் சமத்துவத்தை நிலைநாட்டும் உறுப்புகளில் ஒன்றாக இருக்கும் உறுப்பு 17 ஐ நடைமுறைப்படுத்த 75 ஆண்டுகளாகப் போராட வேண்டியுள்ளது என்பது இந்த நாட்டில் பட்டியல் சமூக மக்கள் எவ்வாறு நடத்தப்படுகின்றனர் என்பதற்குச் சான்றாக உள்ளது.
பட்டியல் சமூக மக்களின் குடியிருப்புகளை இழிவு தொனிக்கக் குறிப்பிடும் அடையாளங்களை வருவாய்த்துறை ஆவணங்களிலிருந்து நீக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நீண்ட நாட்களாகக் குரலெழுப்பி வருகிறது. ’எழுச்சித் தமிழர்’ தொல்.திருமாவளவன் முதலமைச்சரிடம் அதை வலியுறுத்தினார்.
இதற்காக முதலமைச்சருக்கு 06.08.2021 இல் கடிதம் ஒன்றை எழுதினேன். அந்தக் கடிதத்தில், “18.09.1978 அன்று தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசால் கொண்டாடப்பட்டபோது அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர், தமிழ்நாட்டின் சாலைகள் மற்றும் தெருக்களின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப்பெயர்கள் நீக்கப்படும் என அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து 03.10.1978 அன்று அதற்கெனத் தமிழ்நாடு அரசு அரசாணை ஒன்றையும் வெளியிட்டது (Rural Development and Local Administration Department – Government Order (Standing) No.1531 Date : 03.10.1978).
அதற்கேற்ப சென்னை மாநகராட்சி சட்டம் – 1919, பிரிவு 228 மற்றும் மதுரை மாநகராட்சி சட்டம் – 1971, பிரிவு 266 ஆகியவை திருத்தப்பட்டன.
அதுபோலவே தமிழ்நாட்டிலுள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், கிராமப் பஞ்சாயத்துகள் ஆகியவற்றிலும் இந்த நிலை ஆணையை செயல்படுத்துவதற்கு ஏதுவாகத் தீர்மானங்கள் நிறைவேற்றவேண்டும் எனவும், அரசாணை செயல்படுத்தப்பட்டது தொடர்பான விவரங்களை உரிய உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியரும் அரசுக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டுமெனவும் ஆணையிடப்பட்டது.
அந்த அரசாணையின் விளைவாகத் தமிழ்நாட்டில் சாலைகள், தெருக்களின் பெயர்களிலிருந்து சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டன.
ஆனால், காலப்போக்கில் அந்த அரசாணையை செயல்படுத்துவதில் அதிகாரிகள் அக்கறை காட்டாததால் மீண்டும் தெருக்களின் பெயர்களில் சாதிப் பெயர்கள் முளைத்துவிட்டன.
அப்படியான ஒரு நிகழ்வு 2018 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், தேசூர் பேரூராட்சியில் நடந்தது. அங்கு பேரூராட்சி நிர்வாகத்தால் புதிதாக அமைக்கப்பட்ட 14 தெருக்களின் பெயர்ப்பலகைகளில் சாதிப் பெயர்கள் இடம்பெற்றதைக் கண்ட அந்த ஊரைச் சேர்ந்த A.வெங்கடேசன் என்பவர் தெருப் பெயர்ப்பலகைகளில் சாதிப் பெயர்களை நீக்க உத்தரவிடுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் (WP No.5771 of 2018).
அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.மணிகுமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, 1978 ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையே தெளிவான வழிகாட்டுதலைத் தந்திருப்பதால் தனியே ஆணை ஏதும் பிறப்பிக்கத் தேவையில்லை எனவும், 1978 ஆம் ஆண்டு அரசாணையை செயல்படுத்தி அது நிறைவேற்றப்பட்டது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டும் எனவும் ஆணையிட்டது.
25.09.2018 அன்று அவ்வழக்கை மீண்டும் நீதிமன்றம் விசாரித்தபோது தேசூர் பேரூராட்சியில் 14 தெருக்களில் அமைக்கப்பட்ட பெயர்ப் பலகைகளிலிருந்து சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டுவிட்டதாகப் பேரூராட்சியின் நிர்வாக அலுவலர் அறிக்கை தாக்கல் செய்தார். அதனடிப்படையில் அவ்வழக்கு முடித்து வைக்கப்பட்டது”.
இந்த விவரங்களையெல்லாம் எனது கடிதத்தில் குறிப்பிட்டதோடு பின்வரும் இரண்டு கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தேன் :
தமிழ்நாடு அரசு 1978 ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையை தவறாது கடைபிடிக்குமாறும்;
அரசு சார்பில் வைக்கப்படும் பெயர்ப் பலகைகளில் மட்டுமின்றி தனிநபர்களால் புதிதாக ஏற்படுத்தப்படும் நகர்கள், குடியிருப்புகளில் உள்ள பெயர்ப் பலகைகளிலும் சாதிப் பெயர்கள் அகற்றப்பட மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.
சாலைகள், தெருக்கள் பெயர்களில் சாதிப் பெயர்கள் அகற்றப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது போலவே, கல்வி நிலையங்கள், உணவகங்களின் பெயர்ப் பலகைகளில் உள்ள சாதிப் பெயர்களை அகற்றுவதற்கும் தாங்கள் புதிதாக அரசாணை ஒன்றைப் பிறப்பிக்க வேண்டும்”.
நான் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து பட்டியல் சமூகத்தவரின் குடியிருப்புகளை காலனி எனச் சுட்டுவதை நிறுத்த வேண்டும் என சட்டப் பேரவையில் விசிக சட்டமன்ற உறுப்பினர்கள் சிந்தனைச் செல்வன், பனையூர் பாபு ஆகியோரும் வலியுறுத்திப் பேசினர்.
கேரளாவைத் தொடர்ந்து தமிழ்நாட்டில்…
இதனிடையே 2024 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் நாள் கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசு, காலனி, ஊர், சங்கேதம் முதலான பெயர்களைப் பயன்படுத்தக்கூடாது என அரசாணை வெளியிட்டது.
காலனி என்பதற்குப் பதிலாக நகர் என்ற சொல்லையும் ஊர், சங்கேதம் என்பதற்குப் பதிலாக உன்னதி (உயர்வு), பிரகிருதி (இயற்கை) என்ற சொற்களையும் பயன்படுத்தலாம் என அறிவித்தது.
பட்டியல் சமூக மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய மகாத்மா அய்யன் காளியின் 83-வது நினைவு நாளில் அந்த உத்தரவை அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டார்.
அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் அவ்வாறு அறிவிக்க வேண்டும் என்ற அழுத்தத்தை விசிக அதிகப்படுத்தியது.
விசிக வின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று இப்போது தமிழ்நாடு முதலமைச்சர் காலனி என்ற சொல் அரசாங்க ஆவணங்களிலிருந்து நீக்கப்படும் என அறிவித்துள்ளார்.
அத்துடன், பட்டியல் சாதிகளின் பெயர்கள் இழிவு தொனிக்கும் விதமாக ‘ன்‘ என முடிவது நீக்கப்பட்டு ‘ர்’ என முடியுமாறு மாற்றப்பட வேண்டும் என்ற விசிகவின் நீண்டநாள் கோரிக்கையையும் நிறைவேற்ற அவர் முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
முனைவர் துரை.ரவிகுமார். எம்.பி.
நன்றி: மின்னம்பலம்.