எதார்த்த நிலையை எப்போது உணர்வார் விஜய்?

தமிழக வெற்றிக்கழகத்தின் பூத் கமிட்டி முகவர்களுக்கான பயிற்சிப் பட்டறை கோவையில் இரண்டு நாட்கள் நடந்து முடிந்துள்ளது.

இரண்டு நாள் நிகழ்ச்சிகளிலும் கட்சித் தலைவர் விஜய் கலந்துகொண்டு, உற்சாகப்படுத்தியுள்ளார்.

தொண்டர்களை உற்சாகப்படுத்த விஜய் பேசிய பேச்சுகள், ‘அச்சடித்த உரை, பல தலைவர்கள்  ஏற்கனவே அரைத்த மாவு’ என்றே  விமர்சனம் செய்யப்படுகிறது.  

விஜயின் கோவை விசிட், ஊடகங்களுக்கு மூன்று நாட்கள் தீனிபோட்டதோடு சுருங்கி விட்டதே தவிர, பெரிய தாக்கங்களை உருவாக்கவில்லை.

சென்னையில் இருந்து விஜய், கோவைக்கு தனி விமானத்தில்தான் வந்தார். மேள தாளம் முழங்க வரவேற்பு. சாலையின் இருபுறங்களிலும் விஜயை வரவேற்க பெருங்கூட்டம். குளிர்ந்து போனார் இளையதளபதி’.

இந்த அலப்பறைகளை எல்லாம் ‘கைப்புள்ள’ வடிவேலு 15 ஆண்டுகளுக்கு முன்பே பார்த்தவர்.

2011 ஆம் ஆண்டு அவர் சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்து தமிழகம் முழுக்க பிரச்சாரம் செய்தார்.

கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு நிகராக வைகைப்புயலுக்கு கூட்டம் திரண்டது. அந்தத் தேர்தலில் கருணாநிதியால், எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக்கூட அடைய முடியவில்லை.

கோவையில் இரண்டு நாள் கூட்டத்தில் விஜய் பேசியதன் சாராம்சம் இது:

“இதற்கு முன் பலர் அரசியலில் வந்து சென்றிருப்பார்கள். பல வாக்குறுதிகளைக் கூறி ஆட்சியை பிடித்திருப்பார்கள். இனிமேல் அது நடக்காது.

த.வெ.க., வெறும் அரசியல் ஆதாயத்துக்காக துவக்கப்படவில்லை. சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அதே நேரம் இதனால் மக்களுக்கு ஒரு நல்லது நடக்கும் என்றால், எந்த ஒரு எல்லைக்கும் போகத் தயங்க மாட்டோம்.

நம் ஆட்சி ஒரு சுத்தமான ஆட்சியாக இருக்கும். நம் ஆட்சியில் ஊழல் இருக்காது; ஊழல்வாதிகள் இருக்க மாட்டார்கள்.

‘மக்களிடம் செல், அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்; மக்களுடன் வாழ், அவர்களுடன் சேர்ந்து திட்டமிடு; மக்களை நேசி; அவர்களுக்காக சேவை செய்’ என, முன்னாள் முதல்வர் அண்ணா கூறினார்.

இதைப் புரிந்துகொண்டு நீங்கள் செயல்பட்டால், உங்கள் ஊர், சிறுவாணி நீர் போல சுத்தமான ஆட்சியாக இது அமையும்.

இன்னும் உறுதியாகக் கூற வேண்டும் என்றால், த.வெ.க.வின் ஆட்சி தெளிவான, உண்மையான, வெளிப்படையான நிர்வாகம் செய்யக்கூடிய ஆட்சியாக இருக்கும்.”

இது விஜயின் பிரகடனம். பலத்த கைத்தட்டல் கிடைத்திருக்கும். சினிமாக்களில் பேசிய ‘டயலாக்’கை அரங்கில் அரங்கேற்றியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் ஒரே ஒரு ஸ்பெஷல் உண்டு. கட்சி ஆரம்பித்த இந்த ஓராண்டு காலத்தில் சென்னை பனையூரில், மூடப்பட்ட அரங்கத்துக்குள் ஓரிருமுறை தொண்டர்களைச் சந்தித்து வாயாடியவர், சென்னைக்கு வெளியே முதன் முறையாக தரிசனம் தந்துள்ளார். அவ்வளவே.

மக்கள் சந்திப்பு எப்போது?

கட்சி ஆரம்பித்து ஓராண்டு முடிந்து விட்டது. இதுவரை அவர் ஒரு பொதுக்கூட்டத்திலும் பேசவில்லை. தன்னை எம்.ஜி.ஆராக, ஒப்பிட்டுகொள்ளும் விஜய்க்கு, இரண்டு செய்திகளை சொல்லியாக வேண்டும்.

அதிமுகவை எம்.ஜி.ஆர்., 1972 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி ஆரம்பித்தார். கட்சித் தொடங்கிய பத்தே நாட்களில் காஞ்சிபுரத்தில் அதிமுகவின் முதல் பொதுக்கூட்டம்.

உடல்நலம் சரி இல்லாத நிலையிலும் கூட்டத்தில் கலந்து கொண்டார் எம்.ஜி.ஆர். மாலை 7 மணிக்கு சென்னையில் இருந்து காஞ்சிபுரம் புறப்பட்டார், எம்.ஜி.ஆர். மறுநாள் காலையில்தான் வீடு திரும்பினார். வழி நெடுகிலும் அவ்வளவு ஜனத்திரள்.

சினிமா நட்சத்திரம் என்பதைத் தாண்டி, அரசியல் தலைவராக மக்கள் தன்னை ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என்ற நம்பிக்கை விதையை, அந்த இரவுதான் எம்.ஜி.ஆருக்குள் விதைத்திருக்க வேண்டும்.

இன்னொரு செய்தி, கட்சி ஆரம்பித்த ஓராண்டில் திண்டுக்கல் மக்களவை இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளரை நிறுத்தினார். ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவை ஜெயிக்க வைத்தார்.

ஆனால், விஜய்? பொதுக்கூட்டமும் நடத்தவில்லை. கட்சி ஆரம்பித்தபின் நடந்த இரு இடைத்தேர்தல்களையும் புறக்கணித்தார். ஆனால், ஜரிகைகளுடன் வாய்ப்பந்தல் மட்டும் போடுகிறார்.

சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ளது. கட்சி ஆரம்பித்த பின் எம்.ஜி.ஆர். கிட்டத்தட்ட 10 படங்களில் நடித்துள்ளார்.

மக்களைச் சந்திக்க, ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பை சாக்கு சொல்வது, அத்தனைப் பொருத்தமாக தோணவில்லை.

கூட்டம் ஓட்டாக மாறுவது எம்.ஜி.ஆருக்கு மட்டும்தான். விஜய்  மாற வேண்டும். தான், எம்.ஜி.ஆர் அல்ல என்பதை உணர்ந்தால் மட்டுமே, விஜய்க்கு  வெற்றி வசப்படும்.

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment