பொதுப்புழக்கத்தில் இருந்து ‘காலனி’ என்ற சொல் நீக்கப்படும்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காவல்துறை, பிறப்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

முன்னதாக, காவல்துறை மானிய கோரிக்கையில் பேசிய விசிக சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன், ‘காலனி’ என்ற சொல்லை அரசு ஆவணங்களில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “இந்த மண்ணின் ஆதிக்குடிகளை இழிவுபடுத்தும் அடையாளமாக ‘காலனி’ என்ற சொல் பதிவாகியிருக்கிறது.

ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமைக்கான குறியீடாகவும், வசைச் சொல்லாகவும் இது மாறியிருப்பதால், இனி இந்தச் சொல் அரசு ஆவணங்களிலிருந்தும் பொதுப் புழக்கத்திலிருந்தும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

தமிழ்நாட்டில் இன்றளவும் மக்கள் வாழும் பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் வசிக்கும் பகுதியை மட்டும் சாதிய அடையாளத்தின் அடிப்படையில்  ‘காலனி’ என்று அழைக்கப்படுகிறது.

அரசு ஆவணங்களிலுமே அவர்கள் வாழும் பகுதியின் முகவரி, ஊர் பெயரோடு சேர்த்து காலனி என்றே பதிவாகியிருக்கிறது.

இந்த நிலையில், இத்தகைய வழக்கத்தை மாற்றும் வகையில் ஒரு முக்கிய அறிவிப்பைச் சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment