அட்சய திருதியை: இந்தக் கொண்டாட்டம் தேவையா?

அண்மைக்காலமாகவே காட்சி ஊடகங்களின் மகத்தான புண்ணியத்தில் அட்சய திருதியை அன்று மக்களை நகைகள் வாங்க தொடர்ந்து ஊக்குவிக்கிறார்கள்.

அன்றைய தினம் நகைகள் வாங்கினால், நகை வாங்குபவர்களுடைய வீடுகளில் வளம் பெருகும் என்ற நம்பிக்கையையும் கூடவே விதைக்கிறார்கள்.

இதற்கென்றே உருவான வெவ்வேறு விளம்பரங்கள் ஒவ்வொரு டிவியிலும் அடுத்தடுத்து வந்து பார்வையாளர்களைத் தூண்டிக்கொண்டே இருக்கின்றன.

அதில், விதவிதமான மேக்கப்புகளிலோ, விதவிதமான சொல்லாடல்களிலோ பார்வையாளர்களுக்கு முன் நகைக்கடை உரிமையாளர்கள் தோன்றி அட்சய திருதியையின் மகிமையைப் பற்றி புகழ்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட விளம்பரங்களுக்கு மட்டும் கோடிக்கணக்கில் செலவு செய்யப்படுகிறது என்றால், அன்றைய தினத்திலும், அதற்கு முன்பும் எவ்வளவு தூரத்திற்கு வருமானம் வரும் என்பதை வருமானவரித்துறைதான் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அட்சய திருதியை வருவதும், அதற்கு வெவ்வேறு தொலைக்காட்சி ஊடகங்கள் விளம்பரம் கொடுப்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், நடைமுறையில் இவர்கள் வலியுறுத்துகிற நகை என்ன விலைக்கு விற்கிறது?

பத்தாண்டுகளுக்கு முன்பு 22,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு பவுன் நகை தற்போது, தினமும் உச்சி வெயில் அடித்த மாதிரி ஏறிக் கொண்டே இருக்கிறது.

கடைசிக் கட்டமாக தற்போது ஒரு பவுன் 72,000 ரூபாய்க்கு மேல் போய்விட்டது. அட்சய திருதியையின் மகிமையில் இன்னும்கூட கூடலாம்.

ஆனால், இதை வாங்கும் அளவுக்கு சராசரியான பொதுமக்கள் போதுமான வருமானத்துடன் இருக்கிறார்களா? என்கின்ற கேள்வியை மனசாட்சி உள்ள ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்ள வேண்டி இருக்கிறது.

நகையின் விலை ஒரு பக்கம் கூடிக்கொண்டே இருக்க, அதை வாங்குவதற்கு தொடர்ந்து ஊடகம் மூலம் விளம்பரங்கள் பெருகிக்கொண்டே இருக்க, பிறப்பு முதல் காதுகுத்து, சடங்கு, கல்யாணம், வளைகாப்பு வரை எல்லாம் முடிந்து மயானத்திற்கு ஒருவர் போகிற வரைக்கும் நகைகள் வாங்குவது என்பது இங்கு முன்கூட்டியே ஒரு சடங்கைப் போல் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

எந்த மலைவாழ் மக்களாவது தற்போதும்கூட நகைகளை ஒரு மதிப்புக் கருதி அணிந்திருக்கிறார்களா என்று பார்த்தால், இதுவரை அப்படிப்பட்ட நகை சார்ந்த சடங்கு முறையை மலைவாழ் மக்களிடம் பார்க்க முடியவில்லை.

இதெல்லாம் நகர்ப்புறத்தில் அடுத்தடுத்து பெருமையாக உருவாக்கப்பட்ட சடங்குகளைப் போல ஆகிவிட்டன.

ஆனால், எந்த ஊடகமாவது நகையை வாங்குவதற்கு எளிய ஜனங்களிடம் நாமும் தூண்டுதலாக இருக்கிறோம் என்பதை சரிவர உணர்ந்திருக்கிறார்களா என்று பார்த்தால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

மாதம் ஒன்றுக்கே சில கோடி அளவிற்கு விளம்பரத்தைக் கொடுக்கும் நகைக்கடை உரிமையாளர்களிடமிருந்து வரும் வருமானத்தை சம்பந்தப்பட்ட ஊடகங்கள் இழக்க சம்மதிக்குமா?

ஆக, விளம்பரங்களைப் போட்டு எளிய மக்களை ஆசை வலையில் வீழ்த்துவதும் திரும்பத் திரும்ப நடந்து கொண்டிருக்கிறது.

அட்சய திருதியை அன்று இவ்வளவு விற்பனை நடந்தது என்று அந்தப் புள்ளி விவரங்களை கௌரவமாக சம்பந்தப்பட்ட நகைக்கடை நிறுவனங்களும் சொல்லிக் கொள்கின்றன.

இதில், நகை இவ்வளவு விலை ஏற்றத்திற்கு இடையிலேயேயும் நகையைப் போட்டி போட்டு வாங்கும் பொதுமக்கள், எவ்வளவு தூரத்திற்கு இறையாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை பார்க்கும்போதுதான், சராசரி குடிமகனின் மீது எத்தகைய வலை விரிக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

இவ்வளவு தூரத்திற்கு அட்சய திருதியைப் பற்றியும் அன்றைய தினம் நகைகள் வாங்குவது பற்றிப் பேசுகின்ற எந்த ஊடகமும், நகை இல்லாத உடல் பெரும் பேரழகு என்பதைப் பற்றி யாரும் தப்பித் தவறிகூடப் பேசுவதில்லை.

நகைக்கும் அழகுக்குமான முடிச்சை எந்த நோக்கத்தில் பொதுவெளியில் உருவாக்குகிறார்கள் என்பதைப் பற்றி பொதுமக்களும் சரிவர உணராத நிலையில், அழகு என்பது ஏன் நகையோடு ஒட்ட வைக்கப்படுகிறது இங்கு?

– தமிழ்மகன்

Comments (0)
Add Comment