சங்கப் புலவர்கள் பொன்னுரை – 10
******
“பசி இல்லாகுக! பிணிசேண் நீங்குக”
ஐங்குறுநூறு 5. 2
பதவுரை :
பிணி – நோய்; சேண் நீங்குக – தொலைவிற்குச் செல்லுக; அஃதாவது இல்லாமல் போகுக.
ஐங்குறுநூற்றுப் பாடலில் புலவர் ஓரம்போகியார் “பசி இல்லாகுக! பிணிசேண் நீங்குக” என வாழ்த்துகிறார்.
பசி இல்லாமல் ஆவதும் நோய் தொலைவில் நீங்குவதும் இயல்பாக நடைபெறுமா? நாம் முயன்றால்தானே இயலும். நாம் உழைத்தால்தானே நடைபெறும்.
எனவே, இதன்மூலம் பசியும் நோயும் இல்லாத நிலைக்கு நாம் பாடுபட வேண்டும் என உணர வேண்டும்.
தெய்வப்புலவர் திருவள்ளுவர்,
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு.
(திருக்குறள், ௭௱௩௰௪ – 734)
என்கிறார்.
மிக்க பசியும் ஓயாத நோயும் பகையும் இல்லாத நாட்டையே நல்ல நாடு என இலக்கணம் தருகிறார். இத்தகைய நிலைக்கு நேர்மையாக அற வழியில் செயற்பட்டுப் பாடுபட வேண்டும்.
இந்த நல்ல நாட்டிற்குரிய இலக்கணத்தை எடுத்தியம்பித் தாய் வாழ்த்துவதாகப் புலவர் குறிப்பிடுகிறார்
உலகெங்கும் 820 பேராயிரம் (மில்லியன்) மக்கள் பசியால் துன்புறுவதாக ஐ.நா. தெரிவிக்கிறது. ஐ.நா.வின் புள்ளிவிவரங்களின்படி, உலகெங்கிலும் பலவிதமான நோய்களால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மிக அதிகம்.
குறிப்பாகப் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2021 இல் 14.6 பேராயிரமாகவும் ஏப்பு (எய்ட்சு) நோயால் இறப்போரின் எண்ணிக்கை 6.5 பேராயிரமாகவும் (மில்லியன்) இருந்தது. 1981 முதல் 2007 வரை ஏப்பு (எய்ட்சு) நோயால் 250 நூறாயிரத்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.
2007 வரை 332 நூறாயிரம் (மில்லியன்) பேர் இந்நோயுடன் வாழ்ந்துள்ளனர். உலகளவில் ஏறத்தாழ 300 பேராயிரம் மக்கள் 7000 அரிய நோய்களுடன் வாழ்கின்றனர்.
இந்தியாவில் 90 பேராயிரத்திற்கும் அதிகமானோர் (8%) எந்த மருத்துவமும் இல்லாமல் துன்புறுகின்றனர்.
இந்தியாவில் 10 கோடி பேருக்கு நீரிழிவு உறுதி செய்யப்பட்டுள்ளது. சூன் 2024 இறுதியில் உலகளவில் 122.6 பேராயிரம் மக்கள் வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்துள்ளனர்.
இவர்கள் அனைவருமே வறுமையில் வாடுபவர்களாகவும் நோயால் அல்லலுறுபவர்களாகவும் இருக்கின்றனர்.
இவ்வாறு உலகெங்கும் நோய் தாண்டவமாடுகிறது. ஐ.நா.வும் உலக நாடுகளும் தடுப்பூசி, தடுப்பு மருந்துகள், ஊட்ட உணவுகள் மூலமும் தக்க மருத்துவம் மூலமும் நோயை விரட்டப் பாடுபடுகின்றன.
இத்தகைய நிலையினைக் குறித்துத்தான் ஈராயிரம் ஆண்டுகள் முன்னரே தமிழ்ப் புலவர் ஓரம்போகியார் நோய் இல்லா நிலையை வலியுறுத்துகிறார்.
ஒவ்வொருவரும் அரசுகளுடன் இணைந்து பசியும்நோயும் இல்லா நிலைக்குப் பாடுபட்டால் நாடும் நலமாக வளமாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.
எனவே, நாம் பசியில்லாமலும் நோய் இல்லாமலும் வாழ வகை செய்து நீடூழி வாழ்வோமாக!
– இலக்குவனார் திருவள்ளுவன்