“சொன்னது நீ தானா”…

- சோகத்தில் உருகச் செய்த பாடல்..!
‘60’-களின் மத்தியில் வந்த ஒரு காதல் காவியம். தமிழ்த் திரையுலகில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்திய படம். பாடல்கள் ஒரு சரித்திரத்தையே படைத்தன என்று சொன்னால் அது மிகையாகாது. அத்தகைய பாடல்களை படைத்தவர் கவியரசர் கண்ணதாசன். ஒவ்வொன்றும் பாடல்கள் அல்ல, காவியம்.
அந்தப் படம் – நெஞ்சில் ஓர் ஆலயம். இசை – மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையில் “சொன்னது நீதானா” பாடலில் சிதார் எவ்வளவு அருமையாக கையாளப் பட்டிருக்கிறது என்பதைக் காணலாம்.
இந்தப் பாடலின் மற்றொரு சிறப்பு சிதார், தில்ரூபா, தப்லா என்ற மூன்றே இசைக் கருவிகளை மட்டுமே உபயோகப்படுத்தி உள்ளனர்.
“சொன்னது நீதானா… சொல் சொல் சொல் என்னுயிரே” என்று சுசீலா மெதுவாக துவங்கும்போதே மனம் பாடலில் லயிக்கத் துவங்கி விடுகிறது.
மணிப்ரவாளமாக வரும் சிதார் இசை. மறுபடியும் “சொன்னது நீதானா…” என்று சுசீலா ஆரம்பிக்கும்போது மெதுவான நடையில் ஆரம்பிக்கும் தப்லா, “சம்மதமதானா… ஏன் ஏன் ஏன் என்னுயிரே” எனும்போது சுசீலா பாடுவது போலவே வாசிக்கப்படும்.
பின் சுசீலா சற்று குரலை இறக்கி அதே வரிகளை பாடுகையில் தப்லாவின் உருளல் நடை அருமையாக இருக்கும். மறுபடியும் சுசீலா, “…என்று சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே” என்று முடித்தவுடன் அருமையான சிதார் இசை. சிதார் இசை முடிந்தவுடன் ஒரு அழகான தில்ரூபாவின் சிறுஇசை.
“இன்னொரு கைகளிலே, யார் யார் நானா, எனை மறந்தாயா, ஏன் ஏன் ஏன் என்னுயிரே, இங்கேயும் சுசீலா சற்று குரலை இறக்கி “ஏன் ஏன் ஏன் என்னுயிரே என்று சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே” என்று முடித்து சரணம் துவங்குமுன் அருமையான சிதார் இடையிசை.
“மங்கல மாலை குங்குமம் யாவும் தந்ததெல்லாம் நீதானே
மணமகளை திருமகளாய் நினைத்ததெல்லாம் நீதானே”
– என்று முடித்தவுடன் உருக்கமான சிதார் இடையிசை.
என் மனதில் உன் மனதை இணைத்ததும் நீதானே
இறுதிவரை துணையிருப்பேன் என்றதும் நீதானே
என்று சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே”
– என்று முடித்து இரண்டாம் சரணம் துவங்குமுன் மறுபடியும் நெஞ்சை உருக்கும் சிதார் இடையிசை.
என்ன ஒரு வரிகள்!
மங்கல மாலை, குங்குமம் தந்து என்னை மணமகளாக்கிவிட்டு இறுதி வரை துணையிருப்பேன் என்று உறுதி கூறி இப்போது விட்டு செல்ல நினைக்கிறாயே என்று மனைவியின் ஆதங்கத்தை எவ்வளவு நுண்ணிய வார்த்தைகளில் கூறுகிறார் கவியரசர்!
“தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா
தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை தொடலாமா”
– மறுபடியும் இங்கு உருக்கமான சிதார் இடையிசை.
“ஒரு கொடியில் ஒரு முறைதான் மலரும் மலரல்லவா
ஒரு மனதில் ஒரு முறைதான் மலரும் உறவல்லவா”
– என்று முடித்தவுடன் அனைத்து இசைக் கருவிகளும் அமைதி.
வழக்கம்போல் சரணத்தின் முதல் வரியில் முடிக்காமல் இரண்டாவது வரியின் துவக்கமான “இன்னொரு கைகளிலே” என்று பாடிவிட்டு தேவிகா விசும்பலுடன் சிதாரின் மீது சாய்ந்து கொள்வதுடன் பாடல் முடிய நம் நெஞ்சங்களில் ஒரு கனத்த அமைதி.
கணவன் தன்னை தனது முன்னாள் காதலனை தான் இறந்து விட்டால் மணந்து கொள்ளச் சொல்லியதைப் பொறுக்காது, தெய்வத்தின் மாலை தெருவிலே விழுந்து விட்டாலும் அது வேறோர் கைப்படலாகாது, ஒரு மனதில் ஒரே முறைதான் மலரும் உறவு இது என்பதை மனைவி தெளிவாக எடுத்துக் கூறுகிறார்.
ஒன்றைக் கூர்ந்து கவனித்தால், தப்லா பாடகியின் குரலை அழுத்தாமல் பாடலின் கூடவே பாடுவது போன்ற நடையிலேயே அமைந்திருக்கும்!
ஆனால் அனைத்து இசைக் கருவிகளையும் மிஞ்சுவது சுசீலா அம்மாவின் குரல்தான் என்ற உண்மை இறுதியில் நமக்கு பளிச்சிடுகிறது.
குறிப்பாக “சொல் சொல் சொல் என்னுயிரே” என்று ஒவ்வொரு முறை பாடும்போதும் நமது நெஞ்சங்களைப் பிசையும் அவர் குரல். மறுமுறை இப்பாடலை கேட்கும் பொழுது, இசை நுணுக்கங்களை கூர்ந்து கவனித்தால் இப்பாடலின் அருமை விளங்கும்!
– நன்றி: முகநூல் பதிவு.
Comments (0)
Add Comment