சென்னை பல்லாவரத்தில் 1978-ம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு நடைபெற்றது. அந்த விழாவில் அப்போது முதலமைச்சராக இருந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பேசியதன் ஒரு பகுதி:
“நாட்டின் மானத்தை காக்கும் தொண்டில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர் – அவர்கள் எல்லை ஓரத்தில் இருந்து நாட்டைக் காத்து வருவதால்தான், நாம் இங்கே வீடுகளில் நிம்மதியாக இருக்கிறோம் – வீதிகளில் பயமின்றி உலவுகிறோம்.
அந்நியர் ஆட்சியின்போது ராணுவத்துக்கு ஆள் எடுத்த விதம் வேறு. இப்போதுள்ள விதம் வேறு – ராணுவத்துக்கு ஆள் எடுப்பதில், தமிழக இளைஞர்களுக்கு எடை, உயரம் ஆகியவற்றில் சில விதிவிலக்குகள் அளிக்க வேண்டும் என நான் முதலமைச்சர் பதவி ஏற்றதும், தெரிவித்தேன்.
என்னுடைய வேண்டுகோளை ஏற்று இங்குள்ள அதிகாரிகள், தங்கள் மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து இந்த வாய்ப்பை உருவாக்கித்தந்துள்ளனர் – அவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் நன்றி கூற கடமை பட்டுள்ளேன்.
இன்றைக்கு, இங்கே அகில இந்திய அளவில் ராணுவத்துக்கு ஆள் எடுக்கப்படுகிறது – இந்தியாவில் இதுவரை இது நடந்ததில்லை – இதுதான் முதன் முறை.
இந்திய துணைக்கண்டம் முழுவதிலும் இருந்து, தமிழகத்துக்கு மக்களை வரவழைத்து தேர்த்தெடுக்கும் முறை செயல்படுத்தப்படுகிறது.
எனது நீண்ட கால ஆசை, பல வருட எண்ணம் இப்போது நிறைவேறுகிறது.
ஒருமுறை படப்பிடிப்புக்கு நான் காஷ்மீர் சென்றிருந்தபோது, அங்கே என்னை சந்தித்த ராணுவ வீரர் ஒருவர், தமிழகத்தில் இருந்து ராணுவத்துக்கு அதிக வீரர்கள் வருவதில்லையே ஏன்? என என்னிடம் கேட்டார்.
அப்போது ’காலம் வரும்’ என அவருக்கு பதில் சொன்னேன் – அந்தக் காலம் இப்போதுதான் மலர்ந்திருக்கிறது.
எனக்கு 20 வயதாக இருந்தபோது, ராணுவத்தில் சேருவதற்கு ஆசைப்பட்டேன் – எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை – எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருந்தால் எப்படி இருந்திருப்பேன் என்பது எனக்கு தெரியாது.
இன்று நான் உயிருடன் இருந்திருப்பேனா என்பது தெரியாது – ஆனால், நிம்மதியாக இருந்திருப்பேன்.
ராணுவத்துக்கு தேர்ந்தெடுக்கப்படும் தமிழக இளைஞர்கள் சேர, சோழ, பாண்டிய நாட்டை சேர்ந்தவர்கள் – ஆதலால், வீரத்திலும், தீரத்திலும், துணிவிலும் யாருக்கும் பின் தங்கியவர்கள் அல்லர் என்பதை காண்பிக்க வேண்டும் – வெற்றி வாகை சூடுவதற்கு உரியவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும்.
வெற்றி பெறுங்கள் – நாட்டுக்கு பெருமையை ஏற்படுத்துங்கள் – தமிழகத்துக்கு உயர்வு தேடித்தாருங்கள்” என எம்.ஜி.ஆர் அந்த விழாவில் தெரிவித்தார்.
– பாப்பாங்குளம் பாரதி.