ராஜா பக்கம் அமரன்; அஜித்துக்கு ஆதரவாக பிரேம்ஜி!

‘அல்டிமேட் ஸ்டார்’ அஜித் நடித்து வெளியான ‘விடாமுயற்சி’ எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. இதனால் ‘தல’ ரசிகர்கள் சோர்வுற்றிருந்த நிலையில் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் கடந்த 10 ஆம் தேதி உலகம் முழுவதும் ‘ரிலீஸ்’ ஆனது.

சிலர் இதனைப் போற்றினர். பலர் தூற்றினர். ஆனாலும் இந்தப்படம் வசூல் ரீதியாக குறை வைக்கவில்லை.

தமிழகத்தில் அஜித் படங்களில் ‘விஸ்வாசம்’ படம் தான் வசூலில் இதுவரை ’நம்பர் ஒன்’ இடத்தில் இருந்தது. இப்போது அதன் வசூல் சாதனையை முறியடித்துள்ளது ‘குட் பேட் அக்லி’.

படத்தின் வசூல் தமிழகத்தில் 12 நாட்களில் ரூ.140 கோடியைக் கடந்துள்ளது.

ஜெயிக்கும் சினிமாக்களுக்கு பல்வேறு ரூபங்களில் எதிர்ப்பு கிளம்பும். அஜித் படமும் தப்பவில்லை. ‘குட் பேட் அக்லி’ படத்தில், இளையராஜாவின் இசையில் உருவான பாடல்களான, ‘ஒத்த ரூபாய் தாரேன்’, ‘என் ஜோடி மஞ்சக்குருவி’, ‘இளமை இதோ இதோ’ ஆகிய பாடல்கள் இடம் பெற்றிருந்தன.

பாடல்ளைக் காட்சிப்படுத்திய விதம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், படக்குழுவினருக்கு அண்மையில் இளையராஜா அதிர்ச்சி அளித்தார்.

முறையான அனுமதி இல்லாமல், தனது பாடல்கள் ‘குட் பேட் அக்லி’ படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.

தனக்கு, நஷ்ட ஈடாக ரூபாய் 5 கோடி தர வேண்டும் எனவும் இல்லை என்றால், வழக்கு தொடுக்கப்படும் எனவும் ராஜா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், இளையராஜாவின் குற்றச்சாட்டை பட நிறுவனம் மறுத்தது. ’இந்த பாடல்களுக்கு, இப்போது உரிமை பெற்றுள்ள நிறுவனத்திடம் இருந்து அனுமதி பெற்ற பின்னரே அவற்றை பயன்படுத்தி உள்ளோம்’ என ‘குட் பேட் அக்லி’ திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்தது.

இந்த மோதலில், இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன், மூக்கை நுழைத்தார். ஒரு நிகழ்ச்சியில் பேசிய அமரன், அண்ணனுக்கு வாக்காலத்து வாங்கிப் பேசினார். அவரது பேச்சின் சாரம்சம் இது:

‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் வெற்றிக்கு, இளையராஜாவின் பாடல்கள் தான் காரணம். ரூ. 7 கோடி கொடுத்தும் உங்கள் இசையமைப்பாளரிடம் இருந்து வாங்க முடியாத இசையை, எங்களிடம் இருந்து எடுத்துப் பெயர் கூட போடாமல், வரவேற்பைப் பெற்றுள்ளீர்கள்.

அந்த இசையில் எங்களுக்கும் பங்கு உண்டுதானே? அதற்கான கூலி எங்களுக்கு வரணும் தானே?

எங்களுக்கு பணத்தாசை இல்லை. எங்களிடம் செலவு செய்ய முடியாத அளவில் பணம் கொட்டிக் கிடக்கிறது. அனுமதி கேட்டால் ராஜா அண்ணன் உடனே கொடுத்து விடுவார். அஜித் படம் என்பதால் கேட்கவில்லை.

எங்கள் இசை என்பதால் கேட்கிறோம். முடிந்தால் உங்கள் இசையமைப்பாளரை வைத்து இப்படி ஒரு பாடலைப் போடச் சொல்லுங்கள்” என்று வார்த்தைகளை கொட்டினார் அமரன்.

இப்போது கங்கை அமரன் மகன் பிரேம்ஜியும், இந்த விவகாரத்தில் உள்ளே புகுந்துள்ளார். அப்பாவின் கருத்துக்கு அவர் எதிர்க்குரல் கொடுத்துள்ளார்.

ஒரு நிகழ்வில் பிரேம்ஜி பேசியவை:

“காப்புரிமை விவகாரம் தொடர்பாக அவரது அண்ணனுக்கு, எனது தந்தை ஆதரவு அளித்துள்ளார். இதுவே என்னுடைய சகோதரர் குறித்து யாராவது பேசினால், அவருக்கு உறுதுணையாக நான் நிற்பேன். அந்த வகையில்தான் என் தந்தை பேசியிருந்தார்.

‘குட் பேட் அக்லி’ திரைப்படம், இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களால் தான் ஓடியது என்று கூறிவிட முடியாது. உண்மை என்னவென்று எல்லோருக்குமே தெரியும். அஜித்தால் தான் அந்தப் படம் வெற்றி பெற்றது” என பிரேம்ஜி தெரிவித்தார்.

பிரேம்ஜி, அஜித் நடித்த ‘மங்காத்தா’ படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பிரேம்ஜியின் கருத்தை ‘தல’ ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment