பூமியைச் சீரழிக்காமல் இருக்க முயற்சிக்கலாமா?!

ஏப்ரல் 22 – உலக புவி தினம்:

ஆண்டு முழுவதும் குறிப்பிட்ட தேதிகளில் சில தினங்கள் கடைபிடிக்கப்படுகின்றன.

அவற்றில் சில பெருமிதங்களை வெளிப்படுத்திக் கொண்டாட்டங்களை விதைக்கவல்லவை; சில நிகழ்வுகள், ஆளுமைகளை நினைவூட்டுவதாகச் சில வடிவமைக்கப்பட்டிருக்கின்றன; குறிப்பிட்ட விஷயம் பற்றிய விழிப்புணர்வை ஊட்டும்விதமாகச் சில தினங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

என்னதான் விழிப்புணர்வைப் பெருக்குவதாகச் சொன்னாலும், அவற்றில் பெரும்பாலானவை மனித குலத்தின் குற்றவுணர்ச்சியை வெளிக்காட்டுவதாகவே தோற்றமளிக்கின்றன.

அப்படியொன்று தான் ‘உலக புவி தினம்’. இது ஆண்டுதோறும் ஏப்ரல் 22 அன்று கடைபிடிக்கப்படுகிறது.

மாசுறும் பூமி!

நம் வாழும் இந்த உலகில் நிலம், நீர், காற்று ஆகியன தொடர்ந்து மாசுறுதலுக்கு உள்ளாகி வருகிறது.

அந்த அளவைக் குறைத்தாக வேண்டுமென்று விவாதித்த காலம் மலையேறி, முற்றிலுமாகத் தடுத்தாக வேண்டும் என்று கூக்குரலிடுகிற கட்டாயத்திற்கு இப்போது ஆளாகியிருக்கிறோம்.

எந்தளவுக்கு மாசுறுதல் முற்றிப் போயிருக்கிறது என்பது தெரிந்தும், அதனைப் புறந்தள்ளுகிற நமது குணத்தைத் திமிர் என்பதா, அலட்சியம் என்பதா, அறியாமை என்பதா?

‘இங்கு நிலம் மாசுபடவில்லை’ என்று சொல்லத்தக்க அளவில், பூமியில் எந்தப் பகுதியையும் குறிப்பிட முடியாத நிலையே இப்போதிருக்கிறது.

கிட்டத்தட்ட 75 சதவிகிதத்திற்கும் அதிகமான நிலப்பகுதி மாசுற்றுச் சீரழிந்த நிலையில் இருக்கிறது. 2050-ம் ஆண்டில் இந்த அளவு 90% ஆகும் என்கின்றன கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு சுற்றுச்சூழலியல் ஆய்வு.

உலகில் பாதிக்கும் மேற்பட்ட நாடுகளில் ஆறு, குளம், ஏரி போன்ற நன்னீர் நிலைகள் மாசுறுதலைப் பெருமளவில் கொண்டிருக்கின்றன.

கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில், இந்தியாவில் மட்டும் நன்னீர் நிலைகளில் சுமார் 70% மாசுற்றிருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது.

உலகளவில் மாசுபட்ட நீரில் 80% எந்தவித மறுசுழற்சிக்கும் உட்படுத்தப்படாமல் மீண்டும் அதே சூழலுக்குத் திருப்பிவிடப்படுவதாகக் கூறப்படுகிறது.

“அணுக்கழிவுகளைக் கடலில் கொட்டுகின்றனர்“ என்றெழும் புரளிகளை நம்பவா, வேண்டாமா என்றிருக்கும் மக்களுக்குத் திமிங்கலங்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் அவ்வப்போது இறந்த நிலையில் கரையொதுங்குகிற தகவல்கள் பீதியைக் கிளப்புகின்றன.

கடல் மாசுறுதல் பிரச்சனை பூதாகரமாகி வருகிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது.

காற்று மாசுறுதல் உச்சம் கண்ட நாடுகளில் இந்தியா மூன்றாமிடத்தில் இருப்பது உலக காற்று தரக் குறியீடு பட்டியலில் இருந்து தெரிய வந்திருக்கிறது. முதல் மற்றும் இரண்டாம் இடங்களில் பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகியன உள்ளன.

உலக சுகாதார அமைப்பு வரையறுத்துள்ள காற்று மாசுக் கட்டுப்பாடுகளை மீறிய சூழலில் 99% வாழ்கின்றனர்.

மாற்று மாசு சராசரி 2.5 பிஎம் என்ற அளவில் இருக்க வேண்டும் என்கிற கட்டுப்பாட்டை மொத்தம் 7 நாடுகள் மட்டுமே எட்டியிருக்கின்றன என்பது வருத்தம் தரும் சேதி.

அவற்றில் வளர்ச்சியடைந்து வரும் நாடுகள் இருக்க வாய்ப்பில்லை என்பதுதான் யதார்த்தம். காரணம், இயற்கையை நலிவடையச் செய்கிற நுட்பங்களே இன்று ‘வளர்ச்சி’ என்று கொண்டாடப்படுகின்றன.

மேற்சொன்ன விஷயங்களே கடந்த சில ஆண்டுகளாக நம் பூமியின் நிலை எப்படி இருந்து வருகிறது என்பதை உணர்த்தும்.

முடிந்தவரை அதன் அடுத்த படியைத் தொட்டுவிடாமல், மீண்டும் பழைய நிலையை எட்டுவதற்கான முயற்சிகளை நாம் மேற்கொண்டாக வேண்டும்.

மாசுபடுத்தாமல் இருப்போம்!

பூமியின் அழகை ஆராதிக்கிற வகையிலும், தற்போதிருக்கிற சூழலியல் சவால்கள் குறித்த விழிப்புணர்வை ஊட்டும் வகையிலும், பூமியைக் காப்பதற்கான செயல்பாடுகளைத் தீவிரப்படுத்துகிற வகையிலும் ‘உலக புவி தினம்’ 1970-ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் விஸ்கான்சின் பகுதியைச் சேர்ந்த அரசியல்வாதி கேலார்டு நெல்சன், கலிபோர்னியாவில் நிகழ்ந்த எண்ணெய் கசிவினால் ஏற்பட்ட சீரழிவுகளால் மனம் நொந்து அங்குள்ள மக்களுக்குச் சூழலியல் விழிப்புணர்வை ஊட்ட முடிவு செய்தார்.

எழுபதுகளில் அமெரிக்காவில் லட்சக்கணக்கான மக்கள் அவரது முயற்சிகளுக்குத் துணை நின்றனர்.

அதன்பிறகே அமெரிக்காவில் தூய்மையான நீர் சட்டம், தூய்மையான காற்று சட்டம் உள்ளிட்டவை கொண்டுவரப்பட்டன. அதற்கு ‘புவி தினம்’ உறுதுணையாக இருந்தது.

பிறகு, ஐநா மூலமாகப் பரவலாக இத்தினம் அனுசரிக்கப்படும் நிலை உருவானது. தற்போது ‘உலக புவி தினம்’ சுமார் 190 நாடுகளில் பின்பற்றப்படுகிறது.

பெட்ரோலியப் பொருட்கள் பயன்பாட்டைக் குறைத்து மரபுசாரா எரிசக்தியை அதிகளவில் பயன்படுத்தும் வகையில் பல முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதற்கு இத்தினம் காரணமாக உள்ளது.

‘நமது ஆற்றல் நமது கோள்’ என்பது இந்த ஆண்டுக்கான உலக புவி தினக் கருப்பொருளாகக் கொள்ளப்பட்டுள்ளது.

காற்று, சூரிய ஒளி, நீரோட்டம், புவி வெப்ப ஆற்றலைப் பயன்படுத்தி மின்சக்தியை உற்பத்தி செய்தாக வேண்டிய சூழல் தற்போது உருவாகியுள்ளது.

நாளை இதிலும் சில மாசுபாடுகளைச் சந்திக்க நேரிடலாம். அப்போது, அதைச் சீர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நோக்கி நாம் நகர்ந்தாக வேண்டும்.

இன்றைய சூழலில், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலமாகவே பெருமளவில் நிலம் நீர் காற்று மாசுறுதலைத் தடுத்திட முடியும்.

கழிவு மேலாண்மைக்கான புதிய திட்டங்களை வகுத்துச் செயல்படுத்துவது பெரும் மாற்றங்களை உருவாக்கும்.

மறுசுழற்சி செயல்பாடுகள் மூலமாக, ஏற்கனவே இப்பூமியில் தங்கியிருக்கிற கழிவுகளின் தீய விளைவுகளைச் சரிப்படுத்த வேண்டும்.

மருத்துவக் கழிவுகளைக் கையாள்வது போன்ற நுட்பமான செயல்பாடுகளில் அலட்சியம் காட்டக் கூடாது.

அவற்றைவிடப் பன்மடங்கு தீங்கு விளைவிக்கிற கழிவுகளை, எவ்விதத்திலும் மட்டுப்படுத்த முடியாத குணங்களைக் கொண்டவற்றை விண்வெளியில் கொட்டினாலும், எத்தனையோ ஒளி ஆண்டுகள் கடந்து அவை பேரழிவுகளைத்தான் உருவாக்கும்.

ஏதோ ஒரு நிலப்பகுதியில், நீர் நிலையில், காற்று வெளியில் நிகழ்த்துகிற மாசுறுதல் உலகின் இன்னொரு மூலையிலும் கூடத் தீய விளைவுகளை உண்டாக்கும் என்பதனை மனிதர்கள் அனைவரும் உணர்ந்து செயலாற்ற வேண்டும்.

அதனை உணர்ந்தால், ’நம் வீட்டிலுள்ள குப்பைகளைப் பக்கத்து வீட்டில் கொட்டலாம்’ என்ற மனப்பாங்கு மறைந்து, அனைவரும் கரம் கோர்த்து, ‘மாசுறுதல் இல்லா பூமி’ எனும் நிலையை எட்ட முடியும்.. அதனை நிகழ்த்துவோமா..!

  • மாபா
Comments (0)
Add Comment