Paddington in Peru – சாகசம் வேண்டுவோருக்கான கதை!

சாகசம் என்ற வார்த்தை ஏன் எப்போதும் நம்மில் பெரும்பாலானோரை ஈர்க்கிறது? சாதாரணமாக அவற்றை நிகழ்த்த முடியாது என்ற உண்மையை உணர்ந்திருப்பதுதான். அதனால், அவற்றை நிகழ்த்துபவர்களைக் கொண்டாடுகிறோம், ஆராதிக்கிறோம், அவர்களின் ‘பாலோயர்களாக’ மாறுகிறோம். அதன் நீட்சியாக, சாகசம் நிறைந்த கதைகளை, காட்சிப் புனைவுகளை ரசிக்கும்போது நாமே அதனைச் செய்த திருப்தி கிடைக்கிறது. அது பல வேளைகளில் நம்மை பால்ய பருவத்திற்கு இழுத்துச் செல்கிறது. அந்த பின்னோக்கிய பயணம் நம்மை ‘ப்ரெஷ்’ ஆக்குகிறது; இயல்பு வாழ்வில் சிதைகிற மனத்தைத் தானாகச் சரிப்படுத்துகிறது.

அந்த அனுபவத்திற்காகவே, பலர் ‘சாகசக் கதை’ விரும்பிகளாக இருக்கின்றனர். அவர்களுக்குத் தீனி போடும் வகையில், கோடை கால வெளியீடாக இந்தியாவில் திரைக்கு வந்திருக்கிறது ‘பாடிங்டன் இன் பெரு’. இப்படம் பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் ஏற்கனவே வெளியாகி வசூலை அள்ளியிருக்கிறது.

டூகல் வில்சன் இயக்கியிருக்கிற இப்படம் ‘லைவ் ஆக்‌ஷன் அனிமேஷன்’ வகைமை சார்ந்தது. அதாகப்பட்டது, திரையில் நிஜமாகவே நாம் பார்க்கிற மனிதர்கள் தெரிய, அவற்றினூடே கற்பனையாக வடிவமைக்கப்பட்ட சில ‘அனிமேஷன்’ பாத்திரங்கள் வந்து போகும். இந்த வகைமை திரைப்படங்கள் இந்தியாவில் அதிகம் வெளியாவதில்லை. பட்ஜெட் மட்டுமல்லாமல், இதற்கேற்ற கதை சொல்லல் இங்கில்லை என்பதே அதற்கான காரணம். ஆனால், சில வெளிநாட்டுப் படங்கள் அந்தக் குறையைத் தீர்த்து வைக்கின்றன.

அந்த வரிசையில் ஒன்றாக இணைகிறதா இந்த ‘பாடிங்டன் இன் பெரு’ திரைப்படம்?

’பா.இ.பெ’ கதை!

பாடிங்டன் எனும் கரடியானது லண்டனில் வாழும் ஹென்றி ப்ரவுன் – மேரி தம்பதியரால் தத்தெடுக்கப்படுகிற கதை, பிரிட்டனில் ரொம்பவே பிரபலம். அந்த பாத்திரத்தை மையமாகக் கொண்டு ஏற்கனவே அங்கு ‘பாடிங்டன் முதல் மற்றும் இரண்டாம் பாகம்’ திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன.

அந்த பாடிங்டன் தனது உறவினரான லூசி எனும் கரடியைத் தேடிப் பெரு நாட்டுக்குப் பயணிப்பதாகக் காட்டுகிறது இத்திரைப்படம்.

ஒரு மரத்தின் உச்சியில் இருக்கும் ஆரஞ்சு பழத்தைப் பறிக்க முயல்கிற குட்டி பாடிங்டன், அதல பாதாளத்தில் விழுந்து, அமேசான் ஆற்றில் மூழ்கி, உயிர் துறக்க இருக்கிற நேரத்தில், அதனை லூசி காப்பாற்றுவதில் இருந்து இதன் திரைக்கதை தொடங்குகிறது.

லண்டனின் ப்ரவுன் குடும்பத்தினரோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறது பாடிங்டன். அதேநேரத்தில், அலுவலகத்தில் தனது மேலதிகாரியைச் சமாளிக்க முடியாமல் திணறுகிறார் ஹென்றி ப்ரவுன். ‘சாகசங்கள் பண்ணாம ஒரு வாழ்க்கையா’ என்ற வார்த்தையைச் செயல்படுத்த முடியாமல் பயத்தில் சிக்கித் தவிக்கிறார். மகன், மகள், கணவரோடு நேரத்தை ஒன்றாகச் செலவிட்டு எத்தனை நாட்களாகிறது என்று தவிக்கிறார் மேரி.

குழந்தைகள் ஜூடியும் ஜோனதனும் பதின்ம வயதுக்குரிய ‘தனித்துவ குணாதிசயங்களோடு’ பெற்றோரின் உலகை விட்டு விலகியிருக்கின்றனர்.

பாடிங்டன் பெருவுக்குச் செல்லும்போது, இவர்கள் நால்வருமே செல்வதாக முடிவாகிறது. அது வலிந்து திணிக்கப்பட்ட முடிவுதான். என்றபோதிலும், பாடிங்டனுக்காக அதனை ஏற்றுக் கொள்கின்றனர்.

பெரு சென்றால், அங்குள்ள முதிய கரடிகள் பாதுகாப்பகத்தில் ’லூசியைக் காணவில்லை’ என்கின்றனர். அங்குள்ள ஒரு கன்னியாஸ்திரி, ‘பாடிங்டனை காணாமல் லூசி வருத்தமுற்று, அதன் உடல்நலம் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக’ அவர் தந்த தகவலின் பேரில்தான் அவர்கள் அங்கு வந்திருக்கின்றனர்.

‘என்னமோ நடக்குது’ என்றெண்ணும் பாடிங்டன், லூசி தங்கியிருந்த அறையைச் சோதனை செய்கிறது. அங்கிருக்கும் ஒரு வரைபடத்தில், ‘ரூமி பாறை’ பற்றி லூசி குறிப்பிட்டிருப்பதைக் காண்கிறது. அங்குதான் அவர் இருப்பார் என்ற எண்ணத்தோடு கிளம்புகிறது. கூடவே ப்ரவுன் குடும்பத்தினரும் பயணிக்கின்றனர்.

வழியில் அமேசான் ஆற்றில் படகோட்டும் ஒரு தந்தையையும் மகளையும் காண்கின்றனர். அவர்கள் உதவியோடு ரூமி பாறைக்குச் செல்கின்றனர்.

திடீரென்று நிகழும் ஒரு சம்பவத்தால், அந்த படகு மூழ்க நேரிடுகிறது. அதன்பின் என்னவானது? அவர்களது தேடல் நல்லபடியாக முடிவுற்றதா என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.

இந்தக் கதையில் தங்கப் புதையல், எல் டொரோடா எனும் கற்பனை நிலம் உள்ளிட்ட சில லத்தீன் அமெரிக்க புனைவுகளும் கலந்திருக்கின்றன. அவை ஒரு சாகசக் கதைக்கான உள்ளடக்கத்தை உறுதிப்படுத்துகின்றன. இப்படத்தின் யுஎஸ்பி அதுவே.

’பேமிலி’ படம்!

இப்படத்தில் பாடிங்டன் பாத்திரத்திற்கு பென் விக்‌ஷா, லூசி பாத்திரத்திற்கு இமெல்டா ஸ்டாண்டன் இரவல் குரல் தந்திருக்கின்றனர்.

ஹியூ போனவில், எமிலி மார்ட்டிமர், ஜுலி வால்டர்ஸ், ஜிம் ப்ராட்பெண்ட், மேடிலின் ஹாரிஸ், சாமுவேல் ஜோஸ்லின், ஒலிவியா கோல்மன், கார்லா டவுஸ் உட்படப் பலர் இதில் நடித்துள்ளனர்.

டெஸ்பரோடோ, தி மாஸ்க் ஆஃப் ஜாரோ படங்களில் நம்மைக் கவர்ந்த நடிகர் ஆண்டனியோ பாந்தரெஸ் இதிலுண்டு.

இவர்களது சிறப்பான பங்களிப்பு நம்மை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கிறது.

ஒளிப்பதிவாளர் எரிக் வில்சன், படத்தொகுப்பாளர் ஊனா நி கோனிலா, இசையமைப்பாளர் டாரியோ மரியநெலி மற்றும் விஎஃப்எக்ஸ் கலைஞர்கள் உட்படப் பலரது உழைப்பில் மிளிர்கிறது இப்படம்.

ரசிகர்கள் குடும்பம் குடும்பமாகத் தங்களது படைப்பைக் காண வேண்டும் என்பதில் உறுதி காட்டியிருக்கிறார் இயக்குனர் டூகல் வில்சன். அதற்கேற்ப இதன் திரைக்கதையை வடிவமைத்திருக்கிறது மார்க் பர்டன், ஜோன் போஸ்டர், ஜேம்ஸ் லமாண்ட் கூட்டணி.

இப்படத்தின் காட்சியாக்கத்தில் நிறைய ‘க்ளிஷே’க்களை காண முடியும். தொடக்க காட்சியொன்றில் நாயக பாத்திரம் கேட்க நேரிடுகிற ஒரு வசனம், பின்பாதியில் ஒரு துருப்புச்சீட்டாகப் பயன்படுவது அவற்றிலொன்று. அவை நிறைய இருந்தாலும், இப்படம் நமக்கு ‘ப்ளெசண்ட் எக்ஸ்பீரியன்ஸ்’ தருகிறது என்பதே உண்மை.

பிரிட்டனில் ரொம்பவே பிரபலமான கார்ட்டூன் பாத்திரமான பாடிங்டன் பற்றி நம்மூரில் பெரிதாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த வரிசையில் அடியேனும் ஒருவன். ஆனாலும், இப்படத்தைக் காணும்போது அது நினைவுக்கு வரவில்லை. அந்தளவுக்குப் படத்தோடு ஒன்றச் செய்கிறது பாடிங்டன் பாத்திர வார்ப்பு.

கோடைகாலத்தைக் கொண்டாட, குடும்பத்தோடு தியேட்டருக்கு சென்று வன்முறையோ, ஆபாசமோ சிறிதுமற்ற ஒரு படத்தைக் கண்டு ரசிக்க விரும்புபவர்கள் தாராளமாக ‘பாடிங்டன் இன் பெரு’ படத்தைக் காணலாம். இதிலும் லாஜிக் மீறல்கள் நம் கண்களை உறுத்தும் தான். அவற்றை மீறி இதனைக் கொண்டாட முடியும் என்பதே இப்படத்தின் சிறப்பு.

– உதயசங்கரன் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment