தமிழ்நாட்டைப் பிரிக்கும் நயினாரின் கோரிக்கை சாத்தியமா?

புதுப் பதவியை ஏற்றவுடன் தங்களை கவனிக்க வைப்பதற்கென்றே அதிலும் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக தங்கள் பேச்சு வரவேண்டும் என்பதற்காகவே பேசுகிறவர்கள் தற்போது தமிழ்நாட்டில் அதிகரித்திருக்கிறார்கள்.

அந்த வரிசையில் தற்போதைய புதிய பாஜக மாநிலத் தலைவரான நயினார் நாகேந்திரன் தமிழகத்தைச் சரிபாதியாகப் பிரிக்க வேண்டும். பிரித்தால் இரு மாநிலங்களிலும் இரு முதல்வர்கள் உருவாகலாம் என்கின்ற ஒரு திட்டத்தைப் பற்றி பேசியிருக்கிறார். 

ஒருவிதத்தில், இத்திட்டம் ஆந்திராவிலிருந்து தெலுங்கானா தனியாகப் பிரிந்தது போன்ற தோற்றத்தைக் கொண்டிருந்தாலும், இது நயினார் நாகேந்திரன் என்கிற பாஜக தலைவரின் தனிப்பட்ட விருப்பமாக இருக்கிறதே ஒழிய தமிழக பாஜகவின் ஒட்டுமொத்த விருப்பமாகக்கூட இந்தக் கோரிக்கை இன்னும் வலுப்பெறவில்லை. 

நயினார் சொல்கிற மாதிரி இது தமிழ்நாடு மக்களின் தேவை சார்ந்த கோரிக்கையாகவும் இல்லை. 

பத்து ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் வடபகுதியைத் தனியாகப் பிரித்து தனி நாடாக்க வேண்டும் என்கிற கோரிக்கை சிலரால் முன்வைக்கப்பட்டது.

கோவையைத் தலைநகரமாகக் கொண்டு கொங்கு நாடு என்றே பிரிக்கலாம் என்கின்ற யோசனையையும் சிலர் முன்வைத்து தங்களால் முடிந்த அளவுக்கு அதிர்ச்சியைக் கிளப்பினார்கள். 

இதையெல்லாம் கேட்டுவிட்டு தென் பகுதியில் உள்ள பாண்டிய நாட்டு மக்கள் சும்மா இருப்பார்களா? அவர்களும் தங்கள் பங்கிற்கு மதுரையை தலைநகரமாகக் கொண்டு தனி மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன்வைத்து ஒரு கூட்டத்தையும் மதுரையில் நடத்தினார்கள். 

இதுதவிர, தமிழகத்தின் தலைநகரத்தை திருச்சிக்கு மாற்றலாம் என்கின்ற யோசனையை தான் முதல்வராக இருந்தபோது முன்வைத்தார் எம்.ஜி.ஆர். 

தமிழகத்தின் மையப் பகுதியில் தலைநகரம் அமைந்தால், அனைத்து மாவட்ட மக்களும் சுலபமாக வந்து செல்வதற்கு அது வசதியாக இருக்கும். 

அத்துடன் சென்னை போன்ற பெரு நகரத்தில், கூடிக் கொண்டே போகும் மக்கள் தொகை பெருக்கத்தையும் தடுக்க வழிவகுக்கும் என்பதற்காக அந்த யோசனையை முன்வைப்பதாக தெரிவித்தார் எம்.ஜி.ஆர்.

இப்படியெல்லாம் பலதரப்பட்ட யோசனைகள் அடுத்தடுத்து முன்வைக்கப்பட்டு, அவை ஓரிரு நாட்களுக்கான செய்திக்குரிய மதிப்பை மட்டும் பெற்று வலுவிழந்திருக்கின்றன. 

தற்போது, நயினார் வைத்திருக்கும் கோரிக்கை வலுப்பெறப் போகிறதா? அல்லது வலுவிழக்கப் போகிறதா? பார்ப்போம்.

– யூகி

#பாஜகமாநிலத்தலைவர் #நயினார்நாகேந்திரன் #எம்ஜிஆர் #திருச்சி #சென்னை #மதுரை #bjp #nainarnagendren #mgr #trichy #chennai #madurai

Comments (0)
Add Comment