பாரம்பரிய உணவு முறைக்கு இருக்கும் மதிப்பும், அருமையும் இன்றைய கால நவீன உணவுமுறைக்கு இருப்பதில்லை. ஏனென்றால் அன்றைய காலத்தில் ஒவ்வொரு உணவிலும் இருக்கும் ஆரோக்கியம் உணர்ந்து உணவுகளை உட்கொண்டனர்.
அன்றைய காலத்துப் பெண்மணிகள் ஒவ்வொரு உணவிலும் இருக்கக்கூடிய நன்மை, தீமைகளை அறிந்து சமைக்கக் கூடியவர்கள். அவர்களின் உணவுமுறைகளில் ஆரோக்கியமே முதல் பங்கு வகிக்கிறது.
தமிழர்களுடைய பாரம்பரிய உணவு முறைக்கு இருக்கும் மகத்துவத்தை திருமூலர் தன்னுடைய நூலில் விளக்கியுள்ளார்.
நம்முடைய உணவுப் பொருட்களில் இருக்கக்கூடிய நன்மைகளைப் பார்ப்போம்.
மிளகு:
மிளகினுடைய பிரதான பங்கு சளியை போக்கக்கூடிய வல்லமை உடையது. இது சிறுவர்கள் முதல் அனைத்துத் தரப்பினர்களுடைய உடல் ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாக்கக் கூடிய உணவுப் பொருள்.
மிளகு மற்றும் தேன் கலந்து சாப்பிட்டால் சளித் தொல்லை நீங்கும். ஆஸ்துமா உள்ளவர்களுக்கு மிளகு பெரும் நன்மை தரக்கூடியது.
உடலில் இருக்கக்கூடிய அலர்ஜி தொல்லைகள் அனைத்தையும் சரி செய்யக்கூடிய ஆற்றல் மிளகிற்கு உண்டு.
வெந்தயம்:
வெந்தயம் கசப்புத் தன்மை கொண்டது. ஆனால், இது உடலுக்கு பெரும் நன்மை தரக்கூடியது.
தலைமுடி உதிர்வு, சர்க்கரை நோய் என்பவற்றில் பிரதான பங்கு வகிக்கிறது. வெந்தயம் முதலில் கிரேக்க மக்களால் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது.
அதுமட்டுமல்லாது, உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், இதயநோய், புற்றுநோய், வயிற்றுப்புண் போன்ற அனைத்து நோய்களுக்கும் பயன் தரும் மருத்துவகுணம் கொண்டது.
நார்ச்சத்து அதிகம் கொண்டுள்ள உணவுப் பொருள் வெந்தயமாகும்.
உடம்பில் இருக்கக்கூடிய கழிவுகளை வெளியேற்றுவதற்கு இந்த வெந்தயம் பயன்படுத்தினால், இலகுவான முறையில் பயன்பெறலாம்.
மேலும் மாதவிடாய் காலங்களில் பெண்கள் வெந்தயம் சாப்பிட்டால் உடல் சூடு மற்றும் வயிற்று வலி அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும்.
மேற்கத்திய நாடுகள் வெந்தயத்தினை ரொட்டிகளிலும் மற்றும் கேக்குகளிலும் நவீன தொழில்நுட்ப முறையைக் கையாண்டுப் பயன்படுத்தி வருகின்றனர்.
இது ரத்த கொழுப்பைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவுகிறது என்று ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.
இதில், சுவாரசியமான விஷயம் என்னவென்றால் காதலை ஊட்டும் உணவாகவும் இந்த வெந்தயம் காணப்படுகிறது.
ஹார்மோன்களை சீராக்கும் தன்மை கொண்டுள்ளது என்று சித்த மருத்துவ முறை பதிவு செய்கிறது.
கர்ப்பிணி தாய்மார்களுக்கு இருக்கக்கூடிய வயிற்றுப் பிரச்சினை மற்றும் உடல் சுற்று பிரச்சினைகளுக்கு மிகவும் பயனளிக்கக் கூடிய சக்தியைக் கொண்டுள்ளது.
இந்த வெந்தயத்தைத் தண்ணீரில் கலந்து, பொடியாக அரைத்து, உணவு சமையல்களில் சேர்த்தும் கூட சாப்பிட முடியும்.
தினமும் ஒரு கைப்பிடி அளவு வெந்தயம் சாப்பிடுவதால் உடலில் இருக்கக்கூடிய அத்தனை பிரச்சனைகளும் சீராகும்.
கருவேப்பிலை:
வேம்பு போன்று கருவேப்பிலையும் ஒரு மருத்துவ மூலிகை. உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் குறிப்பாக முடி வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கிறது.
கண் பார்வைக்கு மிகவும் உதவுவது கேரட் என்று மட்டும் தான் பலருக்குத் தெரியும். ஆனால், கருவேப்பிலைக்கு இந்த சக்தி உண்டு.
தினமும் கருவேப்பிலை பொடியை சோற்றில் கலந்து சாப்பிடுவதனால் முடி உதிர்வு மற்றும் கண் பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும்.
இதுபோன்று கருவேப்பிலை மலச்சிக்கலையும் சரி செய்யக்கூடிய தன்மை கொண்டது.
கருவேப்பிலை, மாதுளை ஓடு, மாம்பருப்பு ஆகியவற்றை சமமாகப் பொடி செய்து சாப்பிட்டால் மலச்சிக்கலிலிருந்து விடுபடலாம்.
ஆண்டி ஆக்ஸிடன்கள் அதிகம் கொண்டுள்ள கருவேப்பிலை புற்றுநோயை சரி செய்யும் தன்மை கொண்டது.
பசியின்மை, பித்த நோய்கள், பேதி போன்றவை தான் குடல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்.
கருவேப்பிலையில் நிறைந்துள்ள கார்பாஸோல் ஆல்கலாய்டுகள் சர்க்கரை நோய், மாரடைப்பு போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்கிறது என அமெரிக்காவிலுள்ள சிகாகோ பல்கலைக்கழகம் ஆய்வின் மூலம் கருவேப்பிலையின் நன்மைகளைத் தெரிவித்துள்ளது.
– தனுஷா