உச்சநீதிமன்றத் தீர்ப்பும் பாஜகவின் கண்டனங்களும்!

தமிழ்நாடு ஆளுநரான ஆர்.என்.ரவி பல மசோதாக்களை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் உச்சநீதிமன்றம் விதித்திருக்கும் தீர்ப்பு நாடு முழுக்க பல்வேறு விதமான சர்ச்சைகளை உருவாக்கி இருக்கிறது. 

உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியாவில் பல மாநில ஆளுநர்களுக்கும் பொருந்தும் என்கின்ற விவாதமும் இதையொட்டி உருவாகி இருக்கிறது.

தமிழ்நாடு ஆளுநரை டெல்லிக்கு வரவழைத்து உள்துறை அமைச்சகத்தில் விவாதம் நடத்தப்பட்டிருக்கிறது. சட்டப்படி அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி சட்ட நிபுணர்களுடன் ஆலோசனையும் நடந்திருக்கிறது. 

அதேசமயத்தில் பாஜகவைச் சேர்ந்த பல மாநில நிர்வாகிகள், உச்சநீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்புக்கு எதிராக தங்களுடைய பலத்த கண்டனங்களை எழுப்பி, மற்றொரு சட்ட ரீதியான விவாதத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

மத்தியில் பாஜக ஆட்சியில் இருக்கும் நிலையில், அதன் நிலைப்பாட்டை எதிர்த்து அல்லது விமர்சித்து எத்தகைய தீர்ப்புகளும் உச்சநீதிமன்றத் தரப்பிலிருந்து வழங்கப்படக்கூடாதா?, அப்படி வழங்கப்படும்போது அதற்கு ஒன்றிய அரசின் பிரதிநிதிகளே கடும் எதிர்ப்பை தெரிவிப்பதும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கேள்விக்குள்ளாக்குவதும் எத்தகைய ஆரோக்யமான விளைவை இந்திய அரசியலில் உருவாக்கும்?

சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்பதெல்லாம், வெற்று வார்த்தை இல்லைதானே!

– நா. லோகநாதன்

Comments (0)
Add Comment