பிரமிள் – சிறகிலிருந்து பிரிந்த இறகு!

இருபதாம் நூற்றாண்டில் தமிழிலக்கியம் கண்ட மாமேதைகளான பாரதிக்கும், புதுமைப்பித்தனுக்கும் பின் தோன்றிய மிக முக்கியமான, ஆனால் கவனிக்கப்படாத ஒரு ஆளுமை தருமு சிவராம் (பிரமிள்).

சிவராமலிங்கம் என்னும் இயற்பெயர் கொண்ட பிரமிள் இலங்கையின் கிழக்கு மாகாணமாகிய திரிகோணமலையில் ஏப்ரல் 20, 1939-ல் பிறந்தார்.

மிக இளமையிலேயே படைப்பாற்றல் மிக்கவராக விளங்கிய பிரமிள் கவிதை, சிறுகதை, நாடகம், விமர்சனம், தத்துவம், மொழிபெயர்பு, ஓவியம், களிமண் சிற்பம், ஆன்மீகம், ஜோதிடம், எண் கணிதம் என சகல துறைகளிலும் மேதையாக விளங்கினார்.

சி.சு.செல்லப்பா நடத்திய தமிழின் முன்னோடி சிறுபத்திரிகையான ‘எழுத்து’ பத்திரிகையில் தன் இருபது வயதில் எழுதத்தொடங்கிய பிரமிள், 1960-களின் இறுதியில் சென்னை வந்தார்.

இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்டிருந்தாலும் பிரமிள், தமிழ் எழுத்தாளராகவே அறியப்படுகிறார்.

டெல்லி, திருவனந்தபுரம், பூதப்பாண்டி, நாகர்கோவில், மதுரை என பல இடங்களில் வசித்திருந்தாலும் சென்னையில் தான் பிரமிள் வாழ்ந்தார்.

சென்னையிலும் கூட பல இடங்கள் மாறி மாறி குடியேறியிருக்கிறார். தன்னை ஒரு ‘க்யூபிச ஆளுமை’ என்று குறிப்பிடும் பிரமிள், பிழைப்புக்காக எந்த வேலையும் செய்யாதவர்.

‘வாசிப்பது எழுதுவதுமே’ தன் முழுநேர வேலை என்று வாழ்ந்த பிரமிள் திருமணம் செய்து கொள்ளாதவர்.

லஷ்மி ஜோதி, இலக்குமி இளங்கோ, கௌரி, பூம் பொற்கொடி இளங்கோ, டி.சி.ராமலிங்கம், பிருமிள், பிரமீள், பிரேமிள், பிரமிள் பானு, ஜீவராம் அருப்பிருமீள், அஜித்ராம் பிரேமிள், பிரமிள் பானுச்சந்திரன்,

பானு அரூப் சிவராம், விக்ரம் குப்தன் பிரமிள், ராம் தியவ் விபூதி பிரமிள், தியவ் விஷ்னுவ் அக்னி ராம்பிரமிள், அரூப் சிவராமு, ஔரூப் சிவராம், தர்மு சிவராம், தருமு சிவராமு என்று நீளும் பெயர்களை தனக்குத்தானே சூட்டிக்கொண்ட பிரமிளின் ஆளுமை வியப்பைத் தரும்.

பிரமிள், அடிப்படையில் சத்தியத்தைத் தேடிய ஆன்மீகவாதி.

தனது நிறைவேறாத ஆன்மிக இலக்கின், குறைபட்ட சாத்தியமாகவே தனது படைப்புகளைப் பார்த்திருக்கிறார் என்று ஷங்கர் ராமசுப்ரமணியன் பிரமிளைப் பற்றி எழுதுகிறார்.

சாது அப்பாதுரை, ஜே.கிருஷ்ணமூர்த்தி, ரமணர் போன்றோரிடம் பிரமிளுக்கு தனி ஈடுபாடு இருந்தது. திருவண்ணாமலை யோகி ராம்சூரத் குமாரிடம் மிகுந்த நட்பாயிருந்தவர்.

பிரமிளின் கவிதைத் தொகுப்புகள், ‘கண்ணாடியுள்ளிருந்து’, ‘கைப்பிடியளவு கடல்’, ‘மேல்நோக்கிய பயணம்’ ஆகியவையாகும்.

‘படிமக் கவிஞர்’ என்றும், ‘ஆன்மீகக் கவிஞர்’ என்றும் அழைக்கப்பட்ட பிரமிள், தமிழ் நவீன கவிதையை புதிய உச்சத்திற்கு இட்டுச்சென்றார்.

‘காவியம்’ என்ற கவிதை பிரமிளின் மிகப்புகழ்ப்பெற்ற தமிழின் முக்கியமான கவிதைகளுள் ஒன்று.

மிகக்கூர்மையான விமர்சகராக அறியப்பட்ட பிரமிள், ‘தமிழ்ச் சிறுகதைகளின் திருமூலர்’ என்று புதுமைப்பித்தனால் போற்றப்பட்ட மௌனியின் கதைகளுக்கு தன் 28 வயதில் எழுதிய முன்னுரை, மௌனியின் கதைகளைப் போலவே அதிகம் பேசப்பட்டது.

பல படைப்பாளிகளை பிரமிள் தன் விமர்சனத்தால் செம்மையாக்கினார்.

தயவு தாட்சண்யமின்றி விமர்சனம் செய்யக்கூடியவர் என்பதால், கருத்தியல் ரீதியில் பல படைப்பாளிகளோடு மோதல் போக்கிலே இருந்துள்ளார்.

பிரமிளின் விமர்சனப் போக்கு மற்றவர்களிடத்தில் இருந்து அவரை விலக்கி வைத்தது.

”தமிழின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான பிரமிள், இங்குள்ள இலக்கிய மைய நீரோட்டத்தால் முழுமையாக வரவேற்கப்பட்டவர் அல்ல. அவர் வாழும் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தமிழ்ச் சிறுகதைத் தொகுப்புகளில் அவரது கதைகள் தவிர்க்கப்பட்டன.

பரிசுகள், நிறுவனங்கள் ஆகியவற்றால் அங்கீகரிப்படாத ஒரு விளிம்பு நிலை எழுத்தாளராக வாழ்ந்து மடிந்தவர் அவர்” என்று அ. மார்க்ஸ் கட்டுரை ஒன்றில் பிரமிளைப் பற்றி குறிப்பிடுகிறார்.

ஆயினும், ஆங்கிலத்தில் வெளியான ‘தமிழ்ச் சிறுகதைகள்’ என்ற நூலில் இவரின் ‘சந்திப்பு’ சிறுகதை சேர்க்கப்பட்டபோது, அந்தக் கதைதான் மிகச் சிறப்பானது என்று ‘இந்தியன் எக்ஸ்பிரஸின்’ டெல்லி பதிப்புக் கூறிற்று.

எந்த ஒரு விஷயத்தைக் குறித்தும் பிரமிளுக்கு ஆழ்ந்த அறிவு இருந்திருக்கிறது. இதை அவருடன் பழகிய எழுத்தாளர்கள் பல சமயங்களில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

எஸ்.ராமகிருஷ்ணன் பிரமிளின் ஓவியங்கள் குறித்த கட்டுரை ஒன்றில், Edward Hopper-ன் Nighthawks ஓவியம் பற்றி பிரமிள் ஒரு மணி நேரம் பேசியதே, Hopper ஓவியங்களின் மகத்துவம் தனக்கு புரிய காரணமாக அமைந்தது என்றும்,

Trevanian என்கிற பெயரில் தனது அடையாளத்தை மறைத்து (தமிழிலும் இதுபோன்று ஒருவர் எழுதிக்கொண்டிருக்கிறார், பேயோன்), தன் பதிப்பாளருக்கே யாரென்று தெரியாமல் எழுதும் எழுத்தாளர் ஒருவரை பிரமிள் தனக்கு அறிமுகப்படுத்தினார் என்றும் கூறுகிறார்.

(பின்னாளில் Rodney William Whitaker என்பவரே Trevaninan என்று அவர் இறந்தபோது நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது)

உலக திரைப்படங்கள் மீதும் பெரும் ஆர்வம் கொண்டிருந்த பிரமிள், தன் ‘நக்ஷத்ரவாஸி’ நாடகத்தை திரைப்படமாக்கினால், அதில் ரஜினிகாந்தையும், ஸ்ரீப்ரியாவையும் நடிக்க வைப்பதாக இருந்தார்.

பிறகு அதைத் திரைப்படமாக்க வேண்டும் என்று இப்போது தோன்றவில்லை என்றார் பிரமிள்.

பிரமிளுக்கு பிடித்த, அவர் மீண்டும் மீண்டும் பார்த்த திரைப்படங்கள் Mackenna’s Gold மற்றும் Blade Runner.

நல்ல உடைகளின்றியும், விருப்பப்பட்ட புத்தகங்களை வாங்க முடியாமலும், முறையான உணவுமின்றி வாழ்ந்து வந்த பிரமிளுக்கு தண்டுவடத்தில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

நண்பர்களும், தெரிந்தவர்களும் மருத்துவ செலவுக்கு உதவி செய்திருக்கிறார்கள்.

சிகிச்சைக்காக வேலூர் மாவட்டத்திலுள்ள கரடிக்குடிக்கு கொண்டுச் செல்லப்பட்ட பிரமிள், சிகிச்சை பலன் இல்லாமல் 1997-ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி மறைந்தார்.

பிரமிளின் நீண்டகால நண்பரும், பிரமிளின் படைப்புகளை அதிகம் தாங்கி வந்த ‘லயம்’ சிறுபத்திரிகையை நடத்தியவருமான கால.சுப்ரமணியத்திடம் பேசினோம்.

“1979-ல் இருந்து அவர் இறக்கும் வரை அவருடன் எனக்கு பதினேழு வருட பழக்கம். பிரமிளுக்கு சாப்பாடு மேல பெரிய ஆர்வம் எல்லாம் கிடையாது. கூட்டு காய்கறிகளை போட்டு பிசைந்து சாப்பிடுவார்.

அவர் எந்த கோணத்தில் சிந்திக்கிறார் என்பதை யூகிக்கவே முடியாது. பிரமிளின் கவிதையும், விமர்சனமும் தமிழிலக்கியம் இதுவரை கண்டிராதது. மற்ற யாருடனும் ஒப்பிடமுடியாத ஒரு ஆளுமை பிரமிள்.

கரடிக்குடியில் பிரமிளின் சமாதி அமைந்திருக்கிறது. அது பராமரிப்பின்றி இருக்கிறது. சமீபத்தில் அங்கு சென்றிருந்த போது சமாதியில் உள்ள படங்களையெல்லாம் அழித்திருகின்றனர் பிரமிளைப் பற்றி தெரியாதவர்கள்.

பிரமிளை தெரியாத அவர்களுக்கு அது ஒரு விஷமத்தனம். பிரமிளோடு பழகிய எனக்கு அது வேதனை” என்று பிரமிள் குறித்த தனது நினைவுகளையும், பிரமிள் சமாதியின் தற்போதைய நிலைமையையும் பகிர்ந்து கொண்டார்.

நியூயார்க் விளக்கு அமைப்பு ‘புதுமைப்பித்தன்’ விருதையும், கும்பகோணம் சிலிக்குயில் ‘புதுமைப்பித்தன் வீறு’ விருதையும் பிரமிளுக்கு வழங்கி கௌரவித்தது.

ஆரம்பக் கல்விச் சான்றிதழ்கூட இல்லாத பிரமிள், ‘தமிழின் மாமேதை’ என்று தி.ஜானகிராமனாலும், ‘உரைநடையின் அதிகபட்ச சாத்தியத்தை நிறைவேற்றியவர்’ என்று சி.சு.செல்லப்பாவாலும் பாராட்டப்பட்டவர்.

ஆயினும் இன்றளவும் பிரமிள் அதிக பரப்பில் அறியப்படாதவராகவே இருக்கிறார் என்பது வருதத்திற்குரிய விஷயம்.

  • எஸ்.அருண் பிரசாத் (மாணவப் பத்திரிகையாளர்)

– நன்றி: விகடன்

Comments (0)
Add Comment