எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்தவர்களில் சீனியர் நடிகை பி.எஸ்.சரோஜா. புரட்சித் தலைவருடன் ஜெனோவா, கூண்டுக்கிளி, புதுமைப்பித்தன் போன்ற படங்களில் ஜோடியாக நடித்தவர்.
இயக்குநர் கே.சுப்ரமணியம் அவர்களால் கதாநாயகியாக தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டவர். கே.சுப்ரமணியத்திடம் உதவி இயக்குநராக இருந்த டி.ஆர்.ராமண்ணாவை மணந்து கொண்டார்.
பின்னர் ராமண்ணா தயாரித்து, இயக்கிய படங்களின் தயாரிப்பு பணிகளைக் கவனித்துக் கொண்டார். தமிழைவிட நிறைய மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். 99 வயதில் சென்னையில் வசித்து வரும் பி.எஸ்.சரோஜாவுக்கு பழைய சம்பவங்கள் அவ்வளவாக ஞாபகத்தில் இல்லை. எம்.ஜி.ஆர் என்றதும் தன் நினைவுகளை மெல்ல அசைபோட்டு ஒரு சில வார்த்தைகள் பேசினார்.
“மைசூர்ல ‘மருதநாட்டு இளவரசி’ படத்தோட படப்பிடிப்புல தான் நான் முதன் முதலா எம்.ஜி.ஆர். அவர்களைப் பார்க்கிறேன். அந்தப் படத்துல ஜானகி அக்கா தான் அவருக்கு ஜோடி. அந்தப் படத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.
டான்ஸ் மாஸ்டர் ஹீராலால் அவர்களோட அப்பாவிடம் டான்ஸ் கத்துக்கிறதுக்காகத் தான் நான் அப்போ மைசூர் போயிருந்தேன். அங்க கத்திச் சண்டைப் பயிற்சி கூட நடந்துச்சு. “நடிகையா வரணும்னா எல்லாம் தெரிஞ்சிருக்கணும்”னு வாள் பயிற்சியிலயும் சேர்ந்தேன்.
அந்தப் பயிற்சியில எம்.ஜி.ஆரும் வந்து சேர்ந்தார். அப்ப தான் அவருடன் நேரடியான பழக்கம் ஏற்பட்டுச்சு. ஆனா பேசிக்க மாட்டோம். பார்த்தா சிரிப்பார். பயிற்சி முடிச்சு போய்ட்டே இருப்பார். அனாவசியமா அவர் யாருடனும் பேசி நான் பார்த்ததே இல்ல. ரொம்ப ரிசர்வ்டான கேரக்டர்.
அதுக்குப் பிறகு எனக்கு ஒரு கார் ஆக்ஸிடென்ட் ஆகிப்போச்சு. ஒரு வருஷம் ஆஸ்பத்திரியில இருந்தேன். அதிலிருந்து மீண்டு வந்து நான் நடிச்ச படம் ‘ஜெனோவா’. எம்.ஜி.ஆர். தான் ஜோடி. எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு அது தான் முதல் படம்.
முதல் நாள் ஷூட்டிங்ல என்னைப் பார்த்ததும் எம்.ஜி.ஆர். ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டுட்டார். எனக்கு நடந்த கார் விபத்து, அதை தொடர்ந்து நடந்த சில துயர சம்பவங்கள் அவருக்குத் தெரியும்.
அதை மனசுல வச்சுக்கிட்டு, என்னைப் பார்த்ததும் கையை இருகப் பிடிச்சுகிட்டு, ‘‘இதப்பாரும்மா… எனக்கு சகோதரியே கிடையாது. நீதான்மா எனக்கு சகோதரி’’ என்று உருக்கமாக சொன்னார்.
சொல்லும்போதே அவரோட கண்கள் கலங்கி இருந்துச்சு. நான் அவரை “சேட்டா” (அண்ணா) என்று தான் அழைப்பேன். நேரடியா அவரை அப்படிக் கூப்பிட்டதில்ல… ஜானகி அக்கா எனக்கு சின்ன வயசுல இருந்தே பழக்கம். அவங்க கூட பேசும்போது அப்படிச் சொல்வது வழக்கம்.
அதன் பிறகு ‘புதுமைப்பித்தன்’ படத்துல சேர்ந்து நடிச்சோம். அந்தப் படத்தை என் கணவர் டி.ஆர்.ராமண்ணா தான் இயக்கினார். அதில் எம்.ஜி.ஆர். கூட நான் கத்திச் சண்டை போடுற மாதிரி காட்சி வரும். அவர் கத்திச் சண்டைப் பற்றி சொல்லணுமா? எனக்கு தான் ரொம்ப பயமா இருந்துச்சு. நிஜக் கத்தியை வச்சு தான் சண்டை போடுவோம்.
அதனால மேல பட்டுடக் கூடாதுன்னு அவர் ரொம்பவே பயந்தார். கடைசியில எனக்காக அவர் இடது கையால கத்தியைப் பிடிச்சு சண்டைப் போட்டார். ஏன்னா… வலது கையில அவருக்கு வலு அதிகம். இடது கை என்றால் கொஞ்சம் மெதுவாகத்தான் கத்தியைச் சுழற்ற முடியும். அப்படித் தான் நான் அவர் கூட வாள் சண்டை போட்டேன்” என்று சொன்ன சரோஜா, எம்.ஜி.ஆர். சிவாஜி இணைந்து நடித்த ஒரே படமான கூண்டுக்கிளியில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தை அவரது கணவர் டி.ஆர்.ராமண்ணா தான் இயக்கினார். ‘கூண்டுக்கிளி’ தொடர்பாக எந்தச் சம்பவமும் அவருக்கு சரிவர நினைவில் இல்லை.
“இருங்க யோசிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு சற்று நேரம் மௌனமாக அமர்ந்திருந்தவர், திடீரென நினைவுக்கு வந்த ஒரு சம்பவத்தை விவரிக்கத் தொடங்கினார்.
“அப்புறம் ஒரு சம்பவத்தை இப்ப நினைச்சாலும் எனக்கு மனசு ஒரு மாதிரி பாரமா ஆகிடும். ஒரு நாள் நான் எம்.ஜி.ஆரோட ராமாவரம் தோட்டத்துல நின்னுகிட்டு இருக்கேன். காத்து பலமா வீசுது. அங்க ஒரு பெரிய வேப்ப மரம் இருக்கு.
அந்த மரம் திடீர்னு சடசடசடனு சரிஞ்சு விழுது. நான் அதிர்ச்சியுடன் விழுந்த மரத்தையே பார்த்துகிட்டு நிக்குறேன். வீட்டுக்குள்ள டமால்… டுமீல்னு பட்டாசு வெடிக்கிற சத்தம். அதிர்ந்து போய் அக்கா… அக்கானு கத்திகிட்டே ஜானகி அக்காவைத் தேடி வீட்டுக்குள்ள ஓடுறேன். உள்ள பார்த்தா எம்.ஜி.ஆர். ஹால்ல விழுந்து கிடக்கிறார்.
ஐய்யய்யோனு நான் அலறுறேன். ஜானகி அக்கா ஓடி வந்து பார்த்துட்டு ‘என்னங்க… என்னங்க’ன்னு பதறுறாங்க. அவருடைய கால் கட்டை விரல் லேசா அசையுது. அதைப் பார்த்ததும், “அண்ணணைத் தூக்குங்க… ஆஸ்பத்திரி போலாம்”னு நான் கத்துறேன். அவரை அப்படியே தூக்கி காருக்குள்ள வெக்குறாங்க… படார்னு கனவு கலைஞ்சு நான் எழுந்துட்டேன். முகமெல்லாம் வேர்த்துப் போச்சு.
உடனே ஜானகி அக்காவுக்கு போன் போட்டு விஷயத்தைச் சொன்னேன். அவங்க என்னடான்னா சிரிக்கிறாங்க. எங்க வீட்டுக்குள்ள வந்து யார் பட்டாசு போடப்போறாங்கன்னு சொல்லிட்டு, சரி… சரி… நான் பார்த்துக்குறேன்னு சொல்லி வச்சுட்டாங்க.
அன்னைக்கு சாயங்காலமே எம்.ஜி.ஆரை அவர் வீட்டில் வைத்து எம்.ஆர். ராதா சுட்டுட்டார்னு நியூஸ் வருது. எனக்கு வேதனை ஒரு பக்கம். ஆச்சர்யம் இன்னொரு பக்கம். இந்தச் சம்பவம் எப்படி எனக்கு கனவா வந்ததுன்னு இன்னைக்கு வரைக்குமே எனக்கு விந்தையா இருக்கு. அந்தக் கனவு வந்த நேரத்தில் நான் நாலு மாசம் கர்ப்பமா இருந்தேன்.
அவர் ஆஸ்பத்திரியில இருந்த நேரத்துல அவர் நல்லபடியா குணமாகி வரணும்னு அந்தோணியார் தேவாலயத்துக்கு நான் வேண்டிக்கிட்டு இருந்தேன். அவர் குணமாகி வீட்டுக்கு வந்ததும், ஜானகி அக்காவுக்கு போன் செஞ்சேன். அவர் தான் எடுத்தார்.
“அண்ணே, எனக்கு ஒரு நாலணா கொடுங்கண்ணே” என்றேன். ஒரு நிமிடம் திகைச்சுப் போயிட்டார். “கேக்குறது தான் கேக்குற பெரிசா கேட்க வேண்டியது தானேம்மா. நாலணா கேட்குறியே எதுக்கு?” என்றார்.
வேண்டுதலைச் சொல்லி, “உங்க கையால ஒரு நாலணா மட்டும் கொடுத்து விடுங்க மத்ததை நான் பார்த்துக்கறேண்ணே. நீங்க தான் உங்க கையால கொடுக்கணும் என்றேன். அன்றேக்கே கொடுத்து விட்டார். தோட்டத்தில் இருந்து பெரிய கார் ஒன்று நாலணாவுடன் வந்துச்சு” என்று சொல்லிவிட்டு உரக்கச் சிரிக்கிறார் புரட்சித் தலைவரின் திரை ஜோடி.
– அருண் சுவாமிநாதன்