விண்வெளிக்குச் செல்லும் உணவை ருசிபார்த்த சுபான்ஷு!

இந்திய விண்வெளி வீரரான சுபான்ஷு சுக்லா அடுத்த மாதம்தான் விண்வெளிக்கு செல்கிறார். ஆனால் அப்போது அவர் எடுத்துச் செல்லவுள்ள உணவுகள் இப்போதே தயார் செய்யப்பட்டுள்ளன.

அவற்றை ருசித்துப் பார்த்து தனக்கான உணவுகளை சுபான்ஷு சுக்லா தேர்வு செய்துள்ளார்.

இந்தியாவில் இருந்து விண்வெளிக்கு சென்ற முதல் வீரர் என்ற பெருமை ராகேஷ் சர்மாவுக்கு உண்டு. இப்போது அவர் பாதையில் புதிய சாதனையைப் படைக்கவுள்ளார் சுபான்சு சுக்லா.

ஆக்சியம் மிஷன் – 4 மூலம் அடுத்த மாதம் விண்வெளிக்கு செல்லவுள்ள சுபான்ஷு சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்தில் 14 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு ஆய்வுகளை செய்யப் போகிறார்.

இதன்மூலம் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியிருந்து ஆய்வுகளை செய்யும் முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெறவுள்ளார்.

விண்வெளிக்குச் செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுபான்ஷு சுக்லா, 1985-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் பிறந்தார்.

இந்தியா – பாகிஸ்தான் இடையே கார்கில் போர் நடந்த சமயத்தில் சுபான்ஷு சுக்லாவுக்கு 14 வயது. போர்க் கதைகளால் ஈர்க்கப்பட்ட அவர், விமானப் படையில் சேர விரும்பினார்.

லக்னோவில் உள்ள மாண்டீஸ்வரி பள்ளியில் படித்த சுபான்ஷு சுக்லா, கடந்த 2006-ம் ஆண்டு ஜூன் 17-ம் தேதி இந்திய விமானப் படையில் இணைந்தார்.

தனது குடும்பத்தில் இருந்து பாதுகாப்புப் படையில் இணைந்த முதல் நபர் சுபான்ஷு சுக்லா.

தற்போது ஃபைட்டர் காம்பேட் டெஸ்ட் பைலட்டாக இருக்கும் சுபான்ஷு சுக்லா, Sukhoi-30MKI, Mig-21, Mig-29, An-32, Dornier, Hawk, மற்றும் Jaguar ரக விமானங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர்.

இவர் 2,000 மணி நேரத்தும் அதிகமாக விமானங்களை இயக்கியுள்ளார். சுபான்ஷு சுக்லாவின் மனைவி காம்னா ஒரு பல் மருத்துவர். அவருக்கு 4 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.

விண்வெளிக்கு செல்வதில் ஆர்வம் கொண்ட சுபான்ஷு சுக்லா, இதற்கான திட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு, அதில் சேர விரும்பினார். இத்திட்டத்தில் தன்னை இணைத்துக்கொள்ள கடந்த 2018-19ம் ஆண்டில் விண்ணப்பித்தார்.

கொரோனா காலகட்டத்தில் ரஷ்யாவுக்கு சென்ற சுக்லா, இதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டார்.

அடுத்த மாதம் விண்வெளிக்கு செல்லவுள்ள நிலையில், அப்போது அவர் எடுத்துச் செல்வதற்கான உணவு இப்போதே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. அதை சுவைத்துப் பார்த்து ஓகே செய்துள்ளார் சுபான்ஷு சுக்லா.

இதில் தனக்குப் பிடித்தமான உணவுகளை ருசித்துப் பார்த்து அவர் ரேட்டிங் கொடுத்துள்ளார்.

சுபான்ஷு சுக்லாவால் அதிக ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ள உணவு வகைகள், அவருக்காக விண்வெளி மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.

சுபான்ஷு விண்வெளிக்கு அனுப்புவதற்காக இந்திய அரசு 60 மில்லியன் டாலர்களை செலவு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செலவு கொஞ்சம் அதிகம் என்றாலும், அவருடைய பயணத்தால் இந்தியாவுக்கு கிடைக்கும் பெருமை அதைவிட அதிகம்.

– பிரணதி

Comments (0)
Add Comment