கொம்புடிப் பழம்: தமிழ்நாட்டு தர்ப்பூசணி தெரியுமா?

எல்லோரும் தர்ப்பூசணிப் பழம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், தமிழ்நாட்டு ரக தர்பூசணி அழிந்துவரும் நிலை பற்றி யாருக்கும் தெரியாமல் இருப்பது வேதனை.

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கொம்புடிப் பழம் என அழைக்கப்படும் நாட்டு தர்ப்பூசணிப் பழங்களின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு வேதாரண்யம் மக்களிடையே குறைந்து வருவது வேதனையளிக்கிறது.

தர்பூசணி பழங்கள் போன்று காணப்படும் கொம்புடிப் பழம், கொமுட்டி, கும்புடி என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

தர்ப்பூசணியைப் போன்றே கொம்புடியும் இலை, கொடி, பூ, காய், பழம், விதை என அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கும். இதனை எளிதாக அடையாளப்படுத்த நாட்டு தர்ப்பூசணி எனவும் அழைக்கின்றனர்.

கொம்புடியின் தன்மையும், அதன் மருத்துவ குணம், பயன்பாடு அனைத்துமே தர்ப்பூசணியைவிடவும் பல மடங்கு அதிகமானது என்பது பலருக்கும் தெரியாது.

உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் தர்ப்பூசணிப் பழங்கள் நகரப்பகுதி சந்தைகளில் அதிகமாகக் கிடைப்பதால், அவை பெரும்பாலான மக்களுக்கு அறிமுகமாகி விட்டது.

கொம்புடிப் பழம் மருத்துவக் குணம் மிகுந்தவை. மஞ்சள் காமாலை நோய் வராமல் தடுக்கவும், அதனை குணமாக்கவும் சிறந்த மருந்தாகும். இதன் காய்களை கறி சமைத்து சாப்பிடலாம்.

இதன் பிஞ்சு, காய்களைக் கீற்றுகளாக வெட்டி பச்சரிசி, பருப்பு சேர்த்து தயாரித்த கஞ்சி வயிற்றுப் புண்ணைக் குணமாக்கும். உடல் வெப்பத்தைக் குறைக்கும்.

தர்ப்பூசணிக்கு உள்ள சந்தை வாய்ப்பு இந்தப் பழங்களுக்கு இல்லை. தற்போது கிராமப்புறங்களில்கூட இதன் பயன்கள் குறித்த விழிப்புணர்வு குறைந்து வருவதால், இந்தப் பழங்களை சாப்பிடுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது.

மானாவாரி நிலங்களை அதிகமாகக் கொண்டுள்ள வேதாரண்யம் பகுதியில், நெல் அறுவடை செய்யப்பட்ட தரிசு வயல்களில் எள், பயறு வகை பயிர்களோடு ஊடு பயிராக கொம்புடிச் சாகுபடி செய்வது வழக்கம்.

இதற்கு தண்ணீர் தேவை இல்லை. பராமரிப்பு தேவை இல்லை. இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று கருப்பு விதை, இன்னொன்று சிவப்பு விதை.

இன்றளவும் வேதாரணயம் பகுதியில் யாரோ எள்ளு பயிர் விதைகளுடன் கிடந்து அதுவும் முளைத்து யாருக்கோ பயனளித்துக்கொண்டு வருகிறது.

படத்தில் இருப்பது எங்க வீட்டு வயலில் விளைந்தது. கூடுதல் தகவல் இப்போது உள்ள தர்ப்பூசணி பழங்களைவிட இது சுவை அதிகம். எந்த ஒரு மருந்துகளும் தெளிப்பது இல்லை.

நன்றி: கலைக்குகன் மதிவாணன்

Comments (0)
Add Comment