அறுபதில் அடியெடுத்து வைக்கும் ‘சீயான்’!

‘ஆடத் தெரியும், பாடத் தெரியும், நல்லா நடிக்கத் தெரியும், சினிமாவுக்கான ஸ்டண்ட்ஸும் தெரியும், இது போகச் சாதிக்கணும்கற துடிப்பும் நிறையவே இருக்கு. வேறென்ன வேணும்’ என்று நாயகனாக அறிமுகம் ஆவதற்குத் தேவையான அத்தனை தகுதிகளோடும் இருக்கிற ஒருவருக்குச் சரியான வாய்ப்புகள் அமையாமல் போகலாம்.

கடைசிக் கணத்தில் கையிலிருந்து நழுவிச் சென்று ஏமாற்றத்திற்கு உள்ளாகலாம். அனைத்தும் சிறப்பாக ஒன்றிணைந்து, நல்லதொரு படைப்பிலும் இடம்பெற்று, அது தியேட்டரில் வெளியானபிறகு ரசிகர்களால் கவனிக்கப்படாமல் போகலாம்.

இப்படிப் பல ‘..லாம்’களைத் தாண்டி வந்தபிறகு ஒரு நட்சத்திரமாக ஜொலிப்பதென்பது ஒரு வகை வரம்.

அதன்பிறகு எத்தனை தோல்விகள் வந்தாலும், ‘விழுந்தாலும் எழுந்துகொள்ளலாம்’ என்ற நம்பிக்கை மட்டும் கொஞ்சமும் வற்றிப் போகாது. அது வெற்றியை மகுடமாகச் சூட்டாமல் விடாது.

திரையுலகில் வாய்ப்பு தேடித் துவண்டு போகிறவர்களுக்கு, மேற்சொன்ன வார்த்தைகளோடு மேற்கோள் காட்ட ஒரு நட்சத்திரம் இருக்கிறார். அவர் பெயர் விக்ரம்.

 நெருங்கிய வட்டத்தில் ‘கென்னி’!

வினோத்ராஜ் – ராஜேஸ்வரி தம்பதியரின் மூத்த மகனாகப் பிறந்தவர் விக்ரம்.

இவரது உடன்பிறந்தவர்கள் அரவிந்த் மற்றும் அனிதா. இவரது இயற்பெயர் கென்னடி.

அதனால், குடும்பத்தினர், உறவினர்கள், நட்பு வட்டத்தில் இருக்கும் அனைவரும் செல்லமாக அழைக்கும் பெயர் ‘கென்னி’.

இன்றும்கூட விக்ரமுக்கு நெருக்கமான சில திரை பிரபலங்கள் அவரை இப்பெயர் இட்டே அழைக்கின்றனர்.

ஏற்காடு மாண்ட்போர்ட் பள்ளியில் படித்த விக்ரம், பிறகு லயோலா கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயின்றார்.

ஏற்கனவே ஆங்கில நாடங்களில் நடித்த அனுபவம் அந்நாட்களிலும் தொடர்ந்தது. கல்லூரி இளைஞர், இளைஞிகள் மத்தியில் ஒரு ‘ஸ்டார்’ ஆகத் திகழும் அளவுக்கு தனது பெர்பார்மன்ஸை காட்டி வந்திருக்கிறார்.

அந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்த ஒரு விபத்து, அவரது கல்லூரி வாழ்க்கையை முடக்கியது. அதிலிருந்து மீண்டு வருவதே பெரிய விஷயம் என்றாகிப்போன சூழலில்,

ஒரு நடிகனுக்குத் தேவையான அழகிய தோற்றமும் உடற்கட்டும் உணர்வுகளைச் சிறப்பாக வெளிப்படுத்தும் மூளையின் செயல்திறனும் தன்னைவிட்டுப் போகாது என்று உறுதியாக நம்பினார் விக்ரம்.

அந்தச் சிந்தனைக்கேற்ற செயல்பாடுகளும் அவரிடத்தில் இருந்தது.

விரைவாகவே, அந்தப் பாதிப்பில் இருந்து அவர் மீண்டார். நடிப்பு வாய்ப்புகளைத் தேடத் தொடங்கினார். இதற்கிடையே, எம்பிஏ படிப்பிலும் சேர்ந்தார்.

மேடும் பள்ளமுமாக அமைந்த இருபது வயது வாழ்க்கைத் தொடர்ந்து பல பாடங்களைக் கற்றுத் தந்தது.

அதன் துணையோடு மேலும் பல பாடங்களைத் தான் படிக்கவிருப்பது அப்போது அவருக்குத் தெரியாது.

வெற்றிகளின் தொடக்கப்புள்ளி..!

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் சில விளம்பரப் படங்களில் தலைகாட்டிய விக்ரமுக்கு இயக்குநர் ஸ்ரீதரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அவரது ‘தந்துவிட்டேன் என்னை’ படத்தில் நடித்து முடிக்கும் முன்னரே ‘என் காதல் கண்மணி’ என்ற குறு பட்ஜெட் படம் வெளியானது.

அதற்கும் முன்னர் தூர்தர்ஷனில் வெளியான ‘கலாட்டா குடும்பம்’ எனும் சீரியலில் நடித்திருந்தார் விக்ரம்.

எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ‘காவல் கீதம்’, ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் முதன்முறையாக இயக்கிய ‘மீரா’ ஆகிய படங்களில் நாயகனாகத் தோன்றினார்.

ஆனால், அப்படங்கள் எதுவுமே பெரிய வெற்றியைப் பெறவில்லை. அதன் விளைவு, சிறிய அளவில் தோன்றக்கூடிய பாத்திரங்களே அவரைத் தேடி வந்தன.

தான் பிறந்து வளர்ந்த ஊரில் ஒரு நாயகன் ஆக அறிமுகமான பிறகு, மீண்டும் சிறு வேடங்களில் தோன்றுவதா? இந்தக் கேள்வி விக்ரமை ஆட்டுவித்தது.

அந்த நேரத்தில், அது போன்ற வாய்ப்புகள் தெலுங்கிலும் மலையாளத்திலும் இருந்து வந்தன. அவற்றை உடனடியாக ஏற்றுக்கொண்டார் விக்ரம்.

இயக்குநர்கள் ஜோஷி, தாசரி நாராயணராவ், ஷாஜி கைலாஷ், அனில் பாபு, முத்தயால சுப்பையா உள்ளிட்டோர் படங்களில் நடித்தார்.

இதற்கு நடுவே தமிழில் புதிய மன்னர்கள், உல்லாசம், ஹவுஸ்ஃபுல் படங்களிலும் நல்ல வாய்ப்புகளைப் பெற்றார்.

ஆனால், அப்படங்கள் கவனிக்கப்படாமல் போனதால் அவரது உழைப்பும் பயனற்றுப் போயிற்று.

பிறகு பாலாவின் ‘சேது’ நெடிய காத்திருப்புக்குப் பிறகு வெளியானதும், அது ‘சீயான’ ஆக விக்ரமை மாற்றியதும் ரசிகர்கள் அறிந்ததே.

உண்மையைச் சொன்னால், அவரது திரையுலக வெற்றிகளின் தொடக்கப்புள்ளியாகவும் அதுவே கருதப்படுகிறது.

ஏனென்றால், அதற்கு முன்னர் பல படங்களில் இடம்பெற்றபோதும், திறமையை வெளிப்படுத்தியபோதும், அவற்றில் ‘விக்ரம்’ என்பவரின் தனித்துவம் தனித்து நோக்கப்படவே இல்லை.

தொடர் முயற்சிகள் மேற்கொண்ட காலகட்டத்தில் வினீத், அஜித், பிரபுதேவா, அப்பாஸ் மட்டுமல்லாமல் வெங்கடேஷ்,

ஜே.டி.சக்ரவர்த்தியின் தெலுங்கு மொழிமாற்றப் படங்களுக்கும் இரவல் குரல் தந்திருக்கிறார்.

அந்த அனுபவங்கள், அவரது கமர்ஷியல் படங்களில் வித்தியாசமாக மெனக்கெட உதவிகரமாக இருந்தன.

2001இல் வெளியான தரணியின் ‘தில்’ அவரை ஒரு முழுமையான ‘கமர்ஷியல் ஹீரோ’ ஆகவும் மாற்றியது.

‘தில்’ வெற்றியைத் தொடர்ந்து காசி, ஜெமினி, தூள், சாமி, பிதாமகன், அன்னியன், தெய்வ திருமகள், இருமுகன், கடாரம் கொண்டான், பொன்னியின் செல்வன் 1 & 2, தங்கலான் என்று பல வெற்றிப் படங்களைத் தந்திருக்கிறார் விக்ரம்.

இதோ இப்போது ‘வீர தீர சூரன்’னில் மீண்டும் ‘கமர்ஷியல் முகம்’ காட்டியிருக்கிறார்.

மேற்சொன்ன படங்களுக்கு நடுவே, விக்ரம் நடித்த சில சுமார் படங்களும் கூட வித்தியாசமான முயற்சிகளாகவே இருந்தன.

படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதம் உட்படச் சில காரணங்களே அவற்றின் வெற்றிக்குத் தடையாக இருந்திருக்கின்றன.

‘தோல்விகளுக்கு தான் மட்டுமே காரணம் அல்ல’ என்று தெளிவாகத் தெரிந்தபிறகும், அந்தச் சுமையைத் தன் தோளில் சுமப்பது சாதாரண விஷயமல்ல.

கிட்டத்தட்ட முப்பதாண்டுகளுக்கும் மேலாக, அப்படியொரு சுமையைக் கீழிறக்கி வைக்க முடியாமல் நின்று வருபவர் விக்ரம்.

‘ஏன் நடிக்க வாய்ப்பு தர மாட்டேங்கிறீங்க’ என்று கத்த முடியாமல் தவித்தவர், ‘சேது’, ‘தில்’ படங்களுக்குப் பிறகு தான் நடித்த தெலுங்கு,

மலையாளப் படங்கள் தமிழில் அவசரகதியில் ‘டப்’ செய்யப்பட்டு வெளியீட்டுக்குக் கொண்டுவரப்பட்டபோது ‘ஏன் என் படங்களை ரிலீஸ் பண்றீங்க’ என்று டென்ஷன் ஆக வேண்டிய சூழல் வந்தது.

அது போன்ற சூழல்களை எளிதில் கடக்க உதவியது, வெற்றிக்காகக் காத்துக் கிடந்த அனுபவங்கள் தாம்.

‘வீர தீர சூரன்’ படத்தின் முதல் நாள் வெளியீட்டின்போது கூட, ‘இந்தப் படம் இன்னும் நான்கு வாரங்கள் கழித்துதான் வெளியாகும் போல’ என்பது போன்ற கேலிப்பேச்சுகளையும் எதிர்கொண்டார் விக்ரம்.

ஆனால் அன்று மாலையே அப்படத்திற்கு இருந்த பிரச்சனைகள் தீர்ந்தன. அப்படம் வெற்றியாக மாற, மீண்டும் ஊடக வெளிச்சம் அவர் மீது விழுந்தது.

‘வீர தீர சூரன்’ வெற்றி, அடுத்துவரும் விக்ரம் 63 திரைப்படம் மீது அழுத்தங்களை ஏற்றி வைத்திருக்கிறது.

அதனை எப்படி கையாள்வதென்பது அதன் இயக்குநர் மடோன் அஸ்வின் மற்றும் விக்ரம் கூட்டணிக்குத் தெரியும்.

தொண்ணூறுகளில் பல நட்சத்திரங்களோடு இணைந்து நடித்த அனுபவம், சக நடிகர் நடிகையரிடம் தன்னை எப்படி வெளிப்படுத்துவது என்ற படிப்பினையை அவருக்குள் ஊட்டியிருக்கிறது.

அது அவரது இனிய சுபாவமாக வெளிப்படுகிறது.

விக்ரமிடத்தில் இருந்து அதனைக் கற்றுக் கொள்கிற இளைய தலைமுறை, தங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் அப்படியே நடந்து கொள்கிறது.

இப்படிப் பல நல்ல மாற்றங்களும் அவரால் நிகழ்ந்து வருகின்றன.

அப்படிப்பட்ட விக்ரம் இன்று 59 ஆண்டுகளை நிறைவு செய்து அறுபதாம் அகவையில் அடியெடுத்து வைக்கிறார்.

அவர் தோன்றும் திரைப்படங்களுக்காக எத்தனை முறை உடற்கட்டை ஏற்றி இறக்கினாலும், அதற்காக அவரது உடல் கோபித்துக்கொண்டதே இல்லை.

‘வீர தீர சூரன்’ படத்தில் வரும் பிளாஷ்பேக் காட்சிகளில் அது நன்கு தெரியும்.

மனதையும் உடலையும் ஒருசேரச் சீராகப் பராமரிக்கத் தெரிந்தவர்களால் அது போன்ற சாதனைகளை நிகழ்த்த முடியும்.

வித்தியாசமான ‘கமர்ஷியல் சினிமா’ அனுபவங்களை ரசிகர்களுக்குத் தர வேண்டும் என்ற நோக்கோடு தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கும் ‘சீயானுக்கு’ இனிவரும் நாட்களும் இனிய, சிறப்பான வெற்றிகளைத் தருவதாக அமையட்டும்..!

– மாபா

Comments (0)
Add Comment